TN GIM 2024 Investment: உலக முதலீட்டாளர் மாநாடு – மிகப்பெரிய பாய்ச்சல்; எல்லா மாவட்டங்களுக்குமான பரவலான வளர்ச்சி

 சென்னையில் நடந்து முடிந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம், 6 லட்சத்து 64 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில், “ உலக முதலீட்டாளர்கள் மாநாட்டினை இந்தியாவே வியக்க வெற்றிகரமாக நடத்திக்காட்டிய தொழில்துறை அமைச்சர் முனைவர் டி.ஆர்.பி, ராஜா, அரசு உயர் அலுவலர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி! இருநாள் மாநாடு – 20 ஆயிரம் தொழில்துறைப் பிரதிநிதிகள் பங்கேற்புடனும், 39 லட்சம் மாணவர்கள் பார்வையிடவும் பல புதுமைகளோடு தமிழ்ப் பண்பாட்டின் பெருமிதங்களைப் பறைசாற்றி நடந்தேறியுள்ளது. நமது திராவிட மாடல் அரசு அமைந்தபிறகு இளைஞர்களும் – மகளிரும் உயரும் திட்டங்களையும் செயல்களையும் செயல்படுத்தி வருகிறோம். அதில் மிகப்பெரிய பாய்ச்சல்தான், இந்த உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024! ‘எல்லோருக்கும் எல்லாம்’, ‘எல்லா மாவட்டங்களுக்குமான பரவலான வளர்ச்சி’ என்ற நமது பயணத்தில் இது முக்கிய மைல்கல்!” என குறிப்பிட்டுள்ளார். 
இதற்கு முன்னதாக நேற்று நடந்து முடிந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் பேசுகையில், “ திராவிட மாடல் அரசின் இந்த உலக மூதலீட்டாளர் மாநாட்டின் மூலமாக, தமிழ்நாட்டினுடைய 20 ஆண்டுகால வளர்ச்சிக்கு அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவே வியக்கும் வகையில் முதலீட்டை ஈர்த்து – என் இதயத்தில் நீங்காத இடத்தை பெற்றுவிட்டார் தம்பி டி.ஆர்.பி ராஜா அவர்கள். தொழில்துறை அமைச்சர் பொறுப்பை ஏற்றுக் கொண்ட குறுகிய காலத்திலேயே இமாலயச் சாதனையைச் செய்திருக்கும் அமைச்சர் டி.ஆர்.பி ராஜாவை பாராட்டுகிறேன்.
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின்போது, இறுதி செய்யப்பட்ட மொத்த முதலீடுகள் முன்னெப்போதும் இல்லாத அளவாக,6 லட்சத்து 64 ஆயிரத்து 180 கோடி ரூபாய் என்பதை, இந்தியாவே உற்றுநோக்கும் நிலையில் பெரும் மகிழ்ச்சியோடு அறிவிக்கிறேன். இந்த முதலீடுகள் மூலம், நேரடி வேலைவாய்ப்பு என்ற வகையில், 14 லட்சத்து 54 ஆயிரத்து 712 நபர்களுக்கும், மறைமுக வேலைவாய்ப்பு என்ற வகையில், 12 லட்சத்து 35 ஆயிரத்து 945 நபர்களுக்கும் என மொத்தம் 26 லட்சத்து 90 ஆயிரத்து 657 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.மேம்பட்ட மின்னணுவியல் உற்பத்தி, பசுமை எரிசக்தி, தோல் அல்லாத காலணிகள், வாகனங்கள் மற்றும் மின் வாகனங்கள், வான்வெளி மற்றும் பாதுகாப்பு, தரவு மையங்கள், திறன்மிகு மையங்கள் தகவல் தொழில்நுட்ப சேவைகள் போன்ற பலதரப்பட்ட துறைகள் மூலமாக இந்த முதலீடுகள் வந்திருக்கிறது.
ஈர்க்கப்பட்டுள்ள மொத்த முதலீடுகளில், உற்பத்தித் துறையில், அதாவது தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பாக, 3 லட்சத்து 79 ஆயிரத்து 809 கோடி ரூபாய் முதலீடுகள், எரிசக்தித் துறை சார்பாக 1 லட்சத்து 35 ஆயிரத்து 157 கோடி ரூபாய் முதலீடுகள், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை சார்பாக 62 ஆயிரத்து 939 கோடி ரூபாய் முதலீடுகள், தகவல் தொழில்நுட்பத் துறை மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை சார்பாக 22 ஆயிரத்து 130 கோடி ரூபாய் முதலீடுகள், பெருந்தொழிற்சாலைகளுக்கு வலுவான விற்பனையாளர் தளத்தை வழங்கும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சார்பாக 63 ஆயிரத்து 573 கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது. 
2030-ஆம் ஆண்டுக்குள், தமிழ்நாடு ஒன் டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார வளர்ச்சி பெற்ற மாநிலமாகவும், இந்தியப் பொருளாதாரத்துக்கு மிக முக்கியப் பங்களிக்கின்ற மாநிலமாகவும் சிறந்திட, பெரும் இலட்சிய இலக்கை நிர்ணயித்து நாங்கள் செயல்பட்டு வருகிறோம்” என குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Source link