actor y g mahendran comments on vijay political entry tvk tamizhaga vetri kazhagam | Vijay : அரசியலுக்கு வந்தா சம்பாதிக்கலாம் என்கிற நோக்கம் விஜய்க்கு இல்லை


அரசியலுக்கு வந்தால் நன்றாக சம்பாதிக்கலாம் என்கிற எண்ணம் நடிகர் விஜய்க்கு கிடையாது என்று நடிகர் ஒய்.ஜி மகேந்திரன் கூறியுள்ளார்.
விஜய் அரசியல் வருகை
நடிகர் விஜய் தான் அரசியலுக்கு வருகைத் தருவதை கடந்த பிப்ரவரி 2-ஆம் தேதி உறுதிபடுத்தினார். விஜய் மக்கள் இயக்கமாக இருந்த ரசிகர் அமைப்பை கட்சியாக பதிவு செய்த விஜய், தமிழக வெற்றி கழகம் என்று தனது  கட்சியின் பெயரையும் அறிவித்தார். சமீப காலமாக விஜய்யின் அரசியல் வருகை குறித்த பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வந்த சூழலில் விஜய் இதை உறுதிப்படுத்தியுள்ளார்.
அவர் வெளியிட்ட நீண்ட அறிக்கையில், அரசியலில் தனது லட்சியம் என்னவென்பதை அவர் குறிப்பிட்டுள்ளார். வரும்  நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை என்றும் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை என்றும், அவர் இந்த அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தார். அடுத்ததாக 2026ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலே தனது இலக்கு என்றும் கூறியிருந்தார். இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு  அரசியல் களத்தில் பல்வேறு விவாதங்கள் தொடங்கி உள்ளன.
தமிழக வெற்றி கழகம்
விஜய் தனது கட்சிக்கு தமிழக வெற்றி கழகம் என்று பெயர் வைத்தது குறித்து பல்வேறு அனுமானங்கள் முன்வைக்கப்படுகின்றன. விஜய் முதல் முறையாக அறிமுகமான படத்தின் பெயர் வெற்றி என்பதால் இந்தப் பெயரை வைத்துள்ளார் என்று விஜய் ரசிகர்கள் கூறி வருகிறார்கள். இப்படியான நிலையில் விஜயின் முதல் படத்தில் நடித்த நடிகர் ஒய்.ஜி மகேந்திரன் விஜயின் அரசியல் வருகை குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
விஜயை நான் வரவேற்கிறேன்
”விஜய் அரசியலுக்கு வருவது நாட்டில் மிகப்பெரிய பிரச்சனையாக பார்க்கப்படுகிறது. மக்களுக்கும் சேவை செய்வதில் ஆர்வமுள்ள யாராக இருந்தாலும் அவர்கள் அரசியலுக்கு வரலாம். இந்தியா ஒரு ஜனநாயக நாடு. குறிப்பாக சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்து சாதித்தவர்களில் தமிழ்நாடு ஒரு முன்மாதிரி. எம்.ஜி.ஆர் , ஜெயலலிதா, கருணாநிதி எல்லாரும் சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்தவர்கள்தான். எளிய பின்னணியில் இருந்து வந்த காமராஜர் மக்களுக்கு நிறைய நலத் திட்டங்களை கொண்டு வந்தார். அவரையும் மக்கள் ஏற்றுக்கொண்டார்கள். தற்போது இதே மாதிரியான நோக்கத்தோடு தான் விஜய் அரசியலுக்கு வருவதாக நான் பார்க்கிறேன். அவரை நான் முழுமனதோடு வரவேற்கிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.
அரசியலில் சம்பாதிக்கும் நோக்கம் அவருக்கு இல்லை
”விஜய் சினிமாவில் தற்போது உச்ச நட்சத்திரமாக இருக்கிறார். சினிமாவில் நிறைய சம்பாதிக்கும்போதே அவர் அரசியலுக்கு வருவது அவரது  நல்ல நோக்கத்தையே காட்டுகிறது. சினிமாவில் இருந்து அரசியலுக்கு வருபவர்கள் எம்.ஜி.ஆரை பின்பற்றவேண்டும். அரசியலுக்கு வந்ததும் சினிமாவை கைவிட்டார் எம்.ஜிஆர். ஜெயலலிலாவும் அப்படிதான் செய்தார். தற்போது விஜயும் அரசியலுக்கு வந்ததும் சினிமாவை விட்டுவிடுவதாக கூறியிருப்பது ஒரு நல்ல அறிகுறி. அவர் வெற்றி பெறுகிறாரா இல்லையா என்பதை 2026-ஆம் ஆண்டு பார்த்துக் கொள்ளலாம். ஒரு முன்னணி நடிகர் மக்களுக்கு சேவை செய்ய நினைக்கிறார். அவருக்கு வாய்ப்பு கொடுப்பதில் எந்த வித தப்பும் இல்லை. அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள் “ என்று ஒய்.ஜி மகேந்திரன் கூறியுள்ளார்

மேலும் காண

Source link