மகாராஷ்டிராவில் மீண்டும் முதலமைச்சர் மாற்றம்? – முன்னாள் முதலமைச்சர் கருத்தால் பரபரப்பு….

மகாராஷ்டிராவில் மீண்டும் முதலமைச்சர் மாற்றம்? – முன்னாள் முதலமைச்சர் கருத்தால் பரபரப்பு….

மகாராஸ்டிராவில் முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவுக்கு பதிலாக அஜித் பவார் முதலமைச்சராக பொறுப்பேற்பார் என்று முன்னாள் முதலமைச்சர் பிரித்திவிராஜ் சவான் தெரிவித்துள்ளார்.

உத்தவ் தாக்கரேவின் சிவசேனா கட்சியை தனது வசமாக்கிய ஏக்நாத் ஷிண்டே, பாஜகவுடன் கூட்டணி வைத்து, முதலமைச்சராக பொறுப்பேற்றார். இது மராட்டிய அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அதைத் தொடர்ந்து, சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அஜித் பவார், கட்சி தனக்கே சொந்தம் எனக்கூறி, பாஜக கூட்டணியில் சேர்ந்து, மகாராஷ்டிரா துணை முதலமைச்சராக பொறுப்பேற்றார். அடுத்த‌டுத்து, கட்சி உடைப்பு சம்பவங்கள் நடந்த‌தால், மராட்டிய அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது.

இதனிடையே, அஜித் பவார் சரத் பவாரை சந்தித்து பேசியதாலும், உத்தவ் தாக்கரேவை சந்தித்து பேசியதாலும், அம்மாநில அரசியலில் திடீர் திடீர் திருப்பங்கள் வரும் என கூறப்படுகிறது.

இப்படிப்பட்ட பல திருப்பங்களுக்கு இடையே, ஆகஸ்ட் 10 ஆம் தேதி மகாராஷ்டிராவின் புதிய முதலமைச்சராக அஜித் பவார் நியமிக்கப்படுவார் என்று, காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான பிருத்விராஜ் சவான் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் சிவசேனாவின் 15 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவது குறித்து ஆகஸ்ட் 10ஆம் தேதி முடிவு எடுக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

ஷிண்டே மற்றும் பிற எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட பிறகு, தற்போதைய துணை முதல்வர் அஜித் பவார் ஆகஸ்ட் 10 ஆம் தேதி முதல்வராக பதவியேற்கப்படுவார் என்று பிரித்திவிராஜ் சவான் தெரிவித்துள்ளார்