கரூரில் நில மோசடி வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தாக்கல் செய்த இரண்டாவது முன்ஜாமின் மனுவையும் கரூர் மாவட்ட அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
கரூர் மாவட்டம், வாங்கல் குப்பிச்சிபாளையத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவர், தனக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை, தனது ஆதரவாளர்களை வைத்து மிரட்டி, போலி ஆவணங்கள் மூலம் எழுதி பெற்றதாக அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது புகார் அளித்திருந்தார்.
இதன் அடிப்படையில், எம்.ஆர்.விஜயபாஸ்கர் உட்பட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதன் பின்னர், இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது.
விசாரணை தீவிரமடைந்த நிலையில், முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், கரூர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் முன்ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார். அதனை, கடந்த மாதம் 25ஆம் தேதி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதையடுத்து, சிபிசிஐடி போலீசாரின் கைதில் இருந்து தப்பிக்க, எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமறைவாக இருப்பதாக கூறப்படுகிறது. இதனிடையே, தனது தந்தையின் உடல்நிலையை கருத்தில் கொண்டு, அவருக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதால், மருத்துவ காரணங்களுக்காக தனக்கு முன்ஜாமின் வழங்க வேண்டும் என்று இரண்டாவது முறையாக எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு மீது தொடர்ந்து மூன்று நாட்கள் விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில், இந்த மனு மீது தீர்ப்பு வழங்கிய மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி சண்முகசுந்தரம், எம்.ஆர்.விஜயபாஸ்கரின் இரண்டாவது முன்ஜாமின் மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இதனால், எம்.ஆர்.விஜயபாஸ்கரை கைது செய்து விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசார் நடவடிக்கை எடுக்கும் என தெரிகிறது.