Lottery King Santiago Martin who is the top donor through electoral bond know more details here


தேர்தல் பத்திரம் விவகாரம் தேசிய அளவில் பெரும் பரபரப்பை கிளப்பி வருகிறது. உச்ச நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவை தொடர்ந்து, தேர்தல் பத்திரம் தொடர்பான முக்கிய தரவுகளை தங்களின் இணையதளத்தில் தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டது. 
தேர்தல் பத்திரம் மூலம் நன்கொடை வழங்கியவர்கள், எவ்வளவு பணம் நன்கொடையாக வழங்கப்பட்டது, எந்த அரசியல் கட்சிகள் எல்லாம் நன்கொடை பெற்றுள்ளது என்பது தொடர்பான முக்கிய தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
சந்தேகத்தை கிளப்பும் தேர்தல் பத்திரம்:
தேர்தல் ஆணையம் வெளியிட்ட தகவலின்படி, கடந்த 2019ஆம் ஆண்டு முதல் 2024ஆம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் 100 கோடி ரூபாய்க்கு மேல் 22 நிறுவனங்கள் நன்கொடை வழங்கி இருப்பது தெரிய வந்துள்ளது. 
தேர்தல் பத்திரங்கள் மூலம் வழங்கப்பட்ட பெரும்பாலான நன்கொடை பாஜகவுக்கு கிடைத்துள்ளதும் தெரிய வந்துள்ளது. அகில இந்திய அளவில் பாஜகவுக்கு 6000 கோடி ரூபாய்க்கு மேல் நன்கொடை கிடைத்துள்ளது. மேலே குறிப்பிடப்பட்ட காலக்கட்டத்தில் தேர்தல் பத்திரம் மூலம் வழங்கப்பட்டு நன்கொடையில் 47.5 சதவிகிதம் பாஜகவுக்கு சென்றுள்ளது.
இதில் பல தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், தேர்தல் பத்திரம் மூலம் அரசியல் கட்சிகளுக்கு அதிக நன்கொடை வழங்கியவர் யார் என்பதும் தெரிய வந்துள்ளது. இதில் சுவாரஸ்ய தகவல் என்னவென்றால், தமிழ்நாட்டில்தான் அவர் தனது தொழிலை தொடங்கியுள்ளார். பின்னர், நாடு முழுவதும் தனது தொழில் நிறுவனத்தை விரிவுப்படுத்தியுள்ளார். 
யார் இந்த லாட்டரி கிங்?
அவர் வேறு யாரும் அல்ல, அமலாக்கத்துறை விசாரணை வளையத்தில் இருந்த லாட்டரி தொழிலதிபர் சாண்டியாகோ மார்ட்டின்தான். அவருக்கு சொந்தமான Future Gaming and Hotel Services நிறுவனம்தான் தேர்தல் பத்திரம் மூலம் அதிக நன்கொடையை வழங்கியுள்ளது. மொத்தம், 1,368 கோடி ரூபாயை அந்நிறுவனம் நன்கொடையாக வழங்கியுள்ளது.
கோயம்புத்தூரை தலைமையிடமாக கொண்டு இயங்கும் Future Gaming and Hotel Services நிறுவனம் கடந்த 1991ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த நிறுவனத்தை தொடங்கியவர் சாண்டியாகோ மார்ட்டின். மியான்மரில் தொழிலாளியாக தனது வாழ்க்கையை தொடங்கிய இவர், தற்போது கர்நாடகா, கேரளா, மேற்குவங்கம், பஞ்சாப், மகாராஷ்டிரா என பல்வேறு மாநிலங்களில் லாட்டரி தொழிலில் கோலோச்சி வருகிறார்.
அமாலக்கத்துறை பிடியில் மார்ட்டின்:
மார்ட்டின் குழுமத்தின் தலைவராகவும் நிறுவனராகவும் உள்ளார். 13 வயதில் லாட்டரி துறையில் நுழைந்த மார்ட்டின், இந்தியா முழுவதும் தனது தொழிலை விரிவுப்படுத்தியுள்ளார். நாட்டின் மிகப்பெரிய லாட்டரி நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
தற்போது, பல வணிக நிறுவனங்களை நடத்தி வருகிறார். கடந்த காலத்தில், அமலாக்கத்துறையும் வருமான வரித்துறையும் அவரின் வீட்டில் பல முறை சோதனை நடத்தியுள்ளது. “அதிக வருமான வரி செலுத்துபவர்” என்பதற்காக பலமுறை அவருக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 2022ஆம் ஆண்டு, மார்ச் மாதம், அவரது நிறுவனங்களின் வங்கிக் கணக்குகளில் இருந்து 411 கோடியை அமலாக்கத்துறை முடக்கியது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண

Source link