Suresh Raina Virat Kohli deserves an IPL trophy IPL 2024 CSK Fans Upset | Suresh Raina: சின்னத்தல இப்படி செய்யலாமா? பெங்களூருக்காக பேசிய ரெய்னா!


நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் தொடருக்கான அட்டவணையை ஐபிஎல் நிர்வாகம் ஏற்கனவே அறிவித்துவிட்டது. இதன்படி முதல் போட்டியில் நடப்புச் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதவுள்ளது. இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வரும் மார்ச் மாதம் 22ஆம் தேதி தொடங்கவுள்ளது. 
இதனால் நாடு முழுவதும் எனக் கூறுவதை விடவும் உலகம் முழுவதும் ஐபிஎல் ஃபீவர் பற்றிகொண்டது என்றே கூறவேண்டும். இந்த ஃபீவர் சர்வதேச வீரர்க்ள் தொடங்கி சர்வதேச ரசிகர்கள் வரை அனைவரையும் ஆட்கொண்டு வருகின்றது. ஐபிஎல் லீக்கில் விளையாடி வரும் அணிகளில் அதிக ரசிகர்கள் பட்டாளத்தை கொண்ட அணிகள் என்றால் அதில் மும்பை இந்தியன்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் முதல் இடத்தில் மாறி மாறி அலங்கரித்துக்கொண்டு இருக்கும். ஆனால் கடந்த 16 சீசன்களாக உலகத் தரமான வீரர்களை அணியில் வைத்திருந்தும் கோப்பையை ஒருமுறை கூட வெல்லாத அணி என்றால் அது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிதான். அந்த அணி இரண்டு முறை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று கோப்பையை இழந்துள்ளது. 
இப்படியான நிலையில் ஒவ்வொரு ஆண்டும் “இ சாலா கப் நம்தே” என்ற நம்பிக்கையில் களமிறங்கும் பெங்களூரு அணி இம்முறை கோப்பையை வெல்ல வேண்டும் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரருமான சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார். பெங்களூரு அணி கோப்பையை வெல்லுவதற்கான அனைத்து திறமைகளையும் தகுதிகளையும் பெற்றிருந்தும் கடந்த சீசன்களில் கோப்பையை வெல்லாதது ஏமாற்றம் அளித்தாலும், அவர்கள் கோப்பையை வெல்ல தகுதியான அணி. சென்னை அணி கடந்த சீசன் கோப்பையை வென்றது. இம்முறை விராட் கோலியின் பெங்களூரு அணி கோப்பையை வெல்லவேண்டும் என நான் ஆசைப்படுகின்றேன் எனவும் சுரேஷ் ரெய்னா பேசியுள்ளார். 
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர்கள் தோனிக்குப் பிறகு தங்களது மனதில் பெரும் இடம் கொடுத்துள்ளார்கள் என்றால் அது சுரேஷ் ரெய்னாவுக்குத்தான். தோனியை தல தோனி என செல்லப்பெயர் வைத்து அழைக்கும் ரசிகர்கள், சுரேஷ் ரெய்னாவை சின்னத்தல என்றே அழைத்து வருகின்றனர். இப்படியான நிலை சுரேஷ் ரெய்னா இம்முறை கோப்பையை பெங்களூரு அணி வெல்ல வேண்டும் என தெரிவித்துள்ளது சென்னை ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரசிகர்களுக்காகவே ஐபிஎல் விளையாடுவேன் என 42 வயதில் களமிறங்கும் தோனி இந்த சீசனிலும் கோப்பையை வெல்ல வேண்டும் என ரசிகர்கள் தங்களது விருப்ப தெய்வங்களிடம் முறையிட்டுக்கொண்டு இருக்கின்றனர். இப்படியான நிலையில் சின்னத்தல சுரேஷ் ரெய்னாவின் கருத்து “ யூ டூ ப்ரூட்டஸ்” என சென்னை ரசிகர்களை புலம்பச் செய்துள்ளது. 

மேலும் காண

Source link