தமிழ் சினிமாவின் ஆல் டைம் சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்படும் நடிகர் ரஜினிகாந்த் இன்றும் மிகவும் பிஸியாக அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். கடந்த ஆண்டு நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடித்த ‘ஜெயிலர்’ திரைப்படம் மாபெரும் வெற்றிப் படமாக அமைந்து நல்ல ஒரு கம்பேக் படமாகவும் அமைந்தது. அதைத் தொடர்ந்து மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ‘லால் சலாம்’ படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்து இருந்தார். தற்போது ஞானவேல் இயக்கத்தில் ‘வேட்டையன்’ படத்தில் மிகவும் பிஸியாக நடித்து வருகிறார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான ‘லியோ’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் வசூல்ரீதியாக வேட்டையாடியது. அதன் தொடர்ச்சியாக ரஜினிகாந்தை வைத்து ‘தலைவர் 171’ என்ற படத்தை இயக்க உள்ளார் லோகேஷ் கனகராஜ்.
இப்படத்தின் ப்ரீ புரொடக்ஷன் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ராக் ஸ்டார் அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார். லோகேஷ் கனகராஜ் படங்கள் என்றுமே தெறிக்க விடும் மாஸ் படங்களாக பட்டையை கிளப்பும். அவருடன் சூப்பர் ஸ்டார் இணைவதால் ‘தலைவர் 171’ படுமாஸான படமாக அமையும் என்பதால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது.
ரசிகர்களின் உற்சாகத்தை மேலும் அதிகரிக்கும்விதமாக ஏப்ரல் 22ஆம் தேதி டைட்டில் அறிவிப்புக்கான டீசர் வெளியாக உள்ளது என்ற அறிவிப்பை படக்குழு வெளியிட்டது. மேலும் இப்படத்திற்கு ‘கழுகு’ என தலைப்பிடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதைத் தொடர்ந்து தளபதி, சிவா உள்ளிட்ட படங்களில் ரஜினி ஜோடியாக நடித்த நடிகை ஷோபனா இணைய உள்ளார் என்ற தகவலும் லீக்காகி வருகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வமான தகவல் எதுவும் இதுவரையில் வெளியாகவில்லை.
மேலும் புதிய அப்டேட்டாக ‘தலைவர் 171’ படத்தில் 80ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகராக வலம் வந்த நடிகர் மோகன் வில்லனாக நடிக்க உள்ளார் என்றும், நடிகர் விஜய் சேதுபதி முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் “GOAT” படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்னர் வெளியான தகவலின்படி பாலிவுட் நடிகர் ஷாருக்கான் கேமியோ ரோலிலும், நடிகர் ரன்வீர் சிங் வில்லனாகவும் நடிக்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்றதாகவும் தகவல்கள் வந்தன. இருப்பினும் இந்தத் தகவல்கள் குறித்த அதிகாரபூர்வமான அறிவிப்பு இதுவரையில் வெளியாகவில்லை.
மேலும் காண