Kalaignar museum in marina will be open to the public from March 6 online booking here are details | kalaignar Memorial: ‘கலைஞர் உலகம்’ அருங்காட்சியகம்! மார்ச் 6 முதல் பொதுமக்கள் பார்வையிடலாம்


“கலைஞர் உலகம்”அருங்காட்சியகம்: 
சென்னை மெரினாவில் புதிதாக கட்டப்பட்ட கலைஞர் கருணாநிதி நினைவிடம் மற்றும் புதுப்பிக்கப்பட்ட அண்ணா நினைவிடம் ஆகியவற்றை கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். சுமார் 2.21 ஏக்கர் பரப்பளவில் ரூபாய் 39 கோடி மதிப்பீட்டில்  கட்டப்பட்டுள்ள நினைவிடத்தில் அருங்காட்சியகம், வாழ்க்கை வரலாறு தொகுப்பு கொண்ட எழிலோவியங்கள், கலைஞர் எழுதிய புத்தகங்களை வாங்கும் வகையில் புத்தக விற்பனை நிலையம் என ஏகப்பட்ட வசதிகள் உள்ளது.  
குறிப்பாக, கலைஞரின் கலை, இலக்கிய, அரசியல் வாழ்க்கை வரலாற்றினைப் பொதுமக்களுக்குத் தெரிவிக்கும்வகையில் அந்நினைவிட வளாகத்தில் நிலவறையில் நவீன தொழில்நுட்பங்களுடன் பல்வேறு அரங்கங்களுடன் “கலைஞர் உலகம்” என்னும் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த, கலைஞர் உலகம் அருங்காட்சியகத்தில், கலைஞரின் நிழலோவியங்கள், உரிமை வீரர் கலைஞர், கலைஞருடன் ஒருபுகைப்படம், புதிரை வெல் கலைஞர் வழிசெல், அரசியல் கலை அறிஞர் கலைஞர், கலைஞருடன் ஒரு நேர்காணல், நவீனத் தமிழ்நாட்டின் சிற்பி, பண்பாட்டுப் பேழை, கலைஞரின் வரலாற்றுச் சுவடுகள், கலைஞரின் மகளிர் மேம்பாட்டுத் திட்டங்கள், சரித்திர நாயகனின் சாதனைப் பயணம் போன்ற அரங்கங்கள் இடம்பெற்றுள்ளன.
மார்ச் 6 முதல் பொதுமக்களுக்கு அனுமதி:
இந்தக் கலைஞர் உலக அருங்காட்சியகத்தினைப் பொதுமக்கள் பார்வையிடுவதற்கு மார்ச் 6ஆம் தேதி புதன்கிழமை முதல் அனுமதிக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.  ஒவ்வொரு நாளும் காலை 9.00 மணி முதல் இரவு 8.00மணி வரை 6 காட்சிகளாக நடைபெறும். பொதுமக்கள் தங்களுக்கு வசதியான காட்சி நேரத்தைத் தேர்வுசெய்து முன்கூட்டியே அனுமதிச் சீட்டினைப் பெற்றுக் கொள்ளலாம்.  அக்காட்சியினைக் காண வரும் பொதுமக்கள், காட்சி நேரத்திற்கு 30 நிமிடத்திற்கு முன்பாகவே வருகைபுரிய வேண்டும். கலைஞர் உலகம் அருங்காட்சியகத்தை பார்வையிட ஏறத்தாழ ஒன்றரை மணி நேரம் ஆகும்.
அனுமதிச் சீட்டு பெறுவது எப்படி?
கலைஞர் உலக அருங்காட்சியகத்தினைப் பொதுமக்கள் பார்வையிடுவதற்கு தமிழ்நாடு அரசின் https://www.kalaignarulagam.org/ என்ற இணைய முகவரி (Webportal) உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இணைய முகவரியில் பொதுமக்கள் பதிவுசெய்து அனுமதிச் சீட்டினைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
கலைஞர் உலகத்திற்கான அனுமதிச் சீட்டு பெறுவதற்குக் கட்டணம் ஏதுமில்லை. முற்றிலும் இலவசமாக கலைஞர் உலகம் அருங்காட்சியகத்தை பொதுமக்கள் கண்டு களிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருவர் ஒரு அலைபேசி எண்ணின் மூலம் அதிகபட்சமாக 5 அனுமதிச் சீட்டுகள் வரை பெற்றுக் கொள்ள இயலும். இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட அனுமதிச் சீட்டுடன் வருபவர்களுக்கு நிலவறையிலுள்ள கலைஞர் உலகத்திற்கு அனுமதி வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க
Anna Award 2024: தமிழகம் முழுவதும் 100 ஆசிரியர்களுக்கு அண்ணா விருது; ரூ.10 லட்சம் ஊக்கத்தொகை- பட்டியல் இதோ!
’பாஜகவிற்கு அளிக்கும் ஓட்டு செல்லாத‌ ஓட்டாக‌ போய்விடும்’ – எஸ்.பி. வேலுமணி பேச்சு

மேலும் காண

Source link