திருச்சியில் 39 ஆவது நாளாக விவசாயிகள் போராட்டம்

தேசிய-தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் ஐயாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் 39 வது நாளாக திருச்சி மேல சிந்தாமணி அண்ணாசாலை பகுதியில் தொடர் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் கர்நாடக அரசு மேகதாதுவில் அணைக்கட்ட கூடாது, இதனை மத்திய மாநில அரசுகள் தடுத்து நிறுத்த வேண்டும், விளைவிக்கப்படும் விளைபொருட்களுக்கு இரட்டிப்பு லாபம் வழங்க வேண்டும், விவசாயிகளின் வங்கி கடன் சார்ந்த பிரச்சனையை தீர்க்க வேண்டும் என்ற காரணங்களை முன்வைத்து போராடி வருகின்றனர்.

ஏற்கனவே அரை நிர்வாண போராட்டம், ஏர்க்கலப்பை வைத்து போராட்டம், மொட்டை அடித்து போராட்டம் என்று நூதன முறைகளில் அவர்கள் போராடியது குறிப்பிடத்தக்கது.

இதன் தொடர்ச்சியாக 39 வது நாளான இன்று வெண்டைக்காயை வைத்து போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.

கடந்த 2 நாட்களாக வெண்டைக்காயின் விலை கடும் வீழ்ச்சியை சந்தித்து வருவதையொட்டி, இன்று இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

‘மத்திய மாநில அரசுகள் பூ, காய்கறிகள் உள்ளிட்டவற்றை சேமித்து வைக்க குளிர்சாதன கிடங்குகள் அமைத்து தர வேண்டும்’ என்ற கோரிக்கையானது ஏற்கனவே வைக்கப்பட்டுள்ளதை இன்று குறிப்பிட்ட விவசாயிகள், “கிடங்குகள் இல்லாததால், சேமித்து வைத்து காய்கறிகளையோ பூக்களையோ விற்பனை செய்ய முடியாத நிலையுள்ளது.

இதனால் அவை வீணாக்கப்பட்டு விற்பனை விற்பனை செய்ய முடியாமல், இழப்பீடுகளும் கிடைக்காமல் பெரும் நட்டம் ஏற்படுகின்றது” என்று கூறி கிடங்குகள் அமைத்துத்தர அரசுக்கு மீண்டும் கோரிக்கை வைத்தனர்.

அத்துடன் வெண்டைக்காய்களை மாலையாக அணிந்து போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.இதனால் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

வெண்டைக்காய்கள் கீழே கொட்டப்பட்டு போராட்டம் தொடர்வதால் அப்பகுதியில் அசாதாரண சூழல் காணப்படுகிறது.