Government Employee Provident Fund Organization Removes Aadhaar As Valid Date Of Birth Proof Uidai

Aadhaar Rule: பிறப்புச் சான்றுக்கான பட்டியலில் இருந்து ஆதாரை நீக்கும்படி, வருங்கால வைப்பு நிதி அமைப்புக்கு இந்திய தனித்துவ அடையாளம் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
”இனி ஆதார் ஏற்கப்படமாட்டாது”
ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பானது, ஆதார் அட்டை இனி பிறப்புச் சான்றுக்கான  ஆவணமாக ஏற்றுக்கொள்ளப்ப்டமாட்டாது என்று அறிவித்துள்ளது. இந்திய அரசாங்கத்தின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள EPFO, இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் (UIDAI) உத்தரவுக்குப் பிறகு, பிறந்த தேதிக்கான ஏற்றுக்கொள்ளக்கூடிய ஆவணங்களின் பட்டியலில் இருந்து ஆதார் அட்டையை அகற்றுவதாக அறிவித்துள்ளது.
காரணம் என்ன?
ஆதார் ஒரு தனித்துவமான அடையாள அட்டையாக இருந்தாலும், ஆதார் சட்டம் 2016 இன் படி பிறந்த தேதிக்கான ஆதாரமாக அது அங்கீகரிக்கப்படவில்லை. அதாவது, ஆதார் அட்டை ஒருவரது அடையாளத்திற்கான சரிபார்ப்பை வழங்கினாலும், பிறப்புச் சான்று அல்ல என்று UIDAI வலியுறுத்துகிறது. இதன் காரணமாகவே ​​பிறந்த தேதியை உறுதி செய்வதற்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய ஆவணங்களின் பட்டியலிலிருந்து ஆதார் நீக்கப்பட்டுள்ளது.  மத்திய வருங்கால வைப்பு நிதி ஆணையரின் (CPFC) ஒப்புதலுடன் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து புதுப்பிக்கப்பட்ட வழிகாட்டுதல்களுடன் சீரமைக்க, வருங்கால வைப்பு நிதி பயன்பாட்டு மென்பொருளில் தேவையான மாற்றங்களைச் செய்ய உள்அமைப்பு பிரிவுக்கு (ISD) அறிவுறுத்தப்பட்டடுள்ளது. EPFO உறுப்பினர்கள் மற்றும் பிறந்த தேதி திருத்தங்களில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள்,  புதிய மாற்றத்தை கவனத்தில் கொண்டு செயல்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 
EPFO க்கு செல்லுபடியாகும் பிறந்த தேதி ஆதாரம்:

பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளரால் வழங்கப்பட்ட பிறப்புச் சான்றிதழ்
அங்கீகரிக்கப்பட்ட அரசு வாரியம் அல்லது பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் மதிப்பெண் பட்டியல்
பள்ளியிலிருந்து வெளியேறும் சான்றிதழ் (SLC)/ பள்ளி மாற்றுச் சான்றிதழ் (TC)/ பெயர் மற்றும் பிறந்த தேதி அடங்கிய SSC சான்றிதழ்
சேவை பதிவுகளின் அடிப்படையில் சான்றிதழ்
பான் கார்டு
மத்திய/மாநில ஓய்வூதியம் செலுத்தும் ஆணை
அரசால் வழங்கப்படும் வீட்டுச் சான்றிதழ்
உறுப்பினரை மருத்துவ ரீதியாக பரிசோதித்து, தகுதி வாய்ந்த நீதிமன்றத்தால் முறையாக அங்கீகரிக்கப்பட்ட உறுப்பினரின் உறுதிமொழிப் பத்திரத்துடன், சிவில் சர்ஜன் வழங்கிய மருத்துவச் சான்றிதழ்

மத்திய அரசால் வழங்கப்படும் ஆதார் அடையாள அட்டை, இந்தியாவில் மத்தி/மாநில அரசுகளால் வழங்கப்படும் அனைத்து சேவைகளுக்கும் அடிப்படையாக உள்ளது. அதோடு, தனியார் நிறுவனங்களில் கூட பணியில் சேர்வதற்கு தொடங்கி வங்கிகளில் கணக்கு தொடங்குவது வரை அனைத்திலும் ஆதார் தவிர்க்கமுடியாத ஆவணமாக உள்ளது. இதுபோன்ற சேவைகளுக்கு ஆதார் பல அமைப்புகளால் பிறப்புச் சான்று ஆவணமாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டு வந்தது. இந்நிலையில் தான், இனி ஆதார் அடையாள அட்டையை பிறப்புச் சான்றுக்கான ஆவணமாக ஏற்க வேண்டாம் என,  வருங்கால வைப்பு நிதி அமைப்புக்கு இந்திய தனித்துவ அடையாளம் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Source link