நாளை வெளியாகிறது பாஜக தேர்தல் அறிக்கை.. பெரும் எதிர்பார்ப்பில் மக்கள்!


BJP Manifesto: அடுத்த 5 ஆண்டுகள் இந்தியாவை ஆளுப்போவது யார் என்பதை தீர்மானிக்கும் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வரும் 19ஆம் தேதியுடன் தொடங்குகிறது. முதற்கட்ட வாக்குப்பதிவுலேயே தமிழ்நாடு உள்பட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தேர்தல் நடக்க உள்ளது.
எதிர்பார்ப்பை கிளப்பும் தேர்தல் அறிக்கை:
இந்த நிலையில், பாஜக தேர்தல் அறிக்கை எப்போது வெளியாகும் என்பது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இன்று காலை 8:30 மணிக்கு பிரதமர் மோடி முன்னிலையில் தேர்தல் அறிக்கை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
‘சங்கல்ப் பத்ரா’ என்ற பெயரில் தேர்தல் வாக்குறுதிகளை பாஜக வெளியிட உள்ளது. காங்கிரஸ், திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் ஏற்கனவே தேர்தல் அறிக்கையை வெளியிட்டுவிட்டன. தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரம் கூட இல்லாத நிலையில், பாஜகவின் தேர்தல் அறிக்கை வெளியாகிறது.
தேர்தல் அறிக்கையின் கருப்பொருளாக “மோடியின் உத்தரவாதம்: வளர்ந்த இந்தியா 2047” என்பது தேர்வு செய்யப்பட்டுள்ளது. கலாசார தேசியவாதத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் தேர்தல் அறிக்கை இருக்கும் என கூறப்படுகிறது.
முக்கிய அறிவிப்புகள் இடம்பெறுமா?
அதோடு, வளர்ச்சி, வளர்ந்த இந்தியா, பெண்கள், இளைஞர்கள், ஏழை, விவசாயிகள் ஆகியோருக்கும் தேர்தல் அறிக்கையில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாக பாஜக வட்டாரங்களில் பேசப்படுகிறது. அயோத்தி ராமர் கோயில் திறப்பு, 370 சட்டப்பிரவு ரத்து உள்ளிட்ட பாஜகவின் வாக்குறுதிகள் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டுவிட்டன.
பாஜகவின் தேர்தல் அறிக்கையை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான குழு தயார் செய்துள்ளது. தேசிய அளவில் சமூக வலைதளங்கள் வாயிலாக 15 லட்சம் பேரிடமிருந்து கருத்துகளை கேட்டு தேர்தல் அறிக்கையானது தயார் செய்யப்பட்டுள்ளது.
‘நியாய் பத்ரா’ என்ற பெயரில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில், பல முக்கிய வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன. கல்வியிலும் அரசின் வேலைவாய்ப்புகளில் பட்டியலின, பழங்குடியின, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வழங்கப்பட்டு வரும் 50 சதவிகித இட ஒதுக்கீடு வரம்பு தளர்த்தப்படும் என காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளது.
காங்கிரஸ் தேர்தல் அறிக்கை:
அதோடு, தனியார் வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீடு முறை கொண்டு வரப்படும் என்றும் புதிதாக வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஏழை குடும்பத்திற்கும் ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.
2025ஆம் ஆண்டு முதல் மத்திய அரசு வேலைகளில் பெண்களுக்கு 50% இடஒதுக்கீடு வழங்கப்படும் என்றும் நீதிபதிகள், சட்ட அதிகாரிகள், அரசு நிறுவனங்களின் வாரியங்களில் இயக்குநர்கள் போன்ற உயர் பதவிகளில் அதிகமான பெண்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும் வாக்குறுதி அளித்துள்ளது.

மேலும் காண

Source link