Aaha Enna Varigal 11 Patriotism feeling with love emotional kappaleri poyachu song


தமிழ் சினிமா நமக்கு எண்ணற்ற திறமையாளர்களை தந்துள்ளது. காலம் கடந்து ரசிகர்களால் கொண்டாடப்படும் கவிஞர்களில் ஒருவர் வாலி. அனைத்து விதமான உணர்வுகளுக்கும் கவித்துவமான தனது வரிகளால் எழுதி ரசிகர்கள் மனதில் குடி கொண்டிருப்பவர்.
கப்பலேறி போயாச்சு:
எம்.எஸ்.விஸ்வநாதன் தொடங்கி அனிருத் வரை பலரின் இசைகளுக்கு பாடல்கள் எழுதிய பெருமை கொண்டவர்  வாலி. இவர் தேசப்பற்றையும், காதலையும் ஒரே பாடலில் சொன்ன கப்பலேறி போயாச்சு எப்போதும் ரசிகர்கள் மனதில் தனித்துவம் வாய்ந்தது.
இந்தியன் படத்தில் இடம்பெற்ற இந்த பாடலில் சுதந்திரத்தை கொண்டாடும் அதே சூழலில், தனது காதல் கணவனின் பிரிவையும் அவனுக்கு ஏங்கும் தவிப்பையும், அவர்கள் நீண்ட வருடங்களுக்கு பிறகு சேர்வதுமே காட்சி சூழல். அதற்கு வாலி தனது அற்புதமான வரிகளை செதுக்கியிருப்பார். ஏ.ஆர்.ரஹ்மான் தனது இசையால் அந்த வரிகளுக்கு உயிர் கொடுத்திருப்பார்.
ஆங்கிலேயர்கள் நாட்டை விட்டுச் சென்று இந்தியா சுதந்திரம் பெற்ற அந்த தருணத்தை ஒட்டுமொத்த நாடே கொண்டாடிய அந்த சுதந்திர வெற்றியை வாலி தனது முதல் வரிகளிலே,
“கப்பலேறி போயாச்சு..
சுத்தமான ஊராச்சு கண்ணம்மா..
நட்டநடு ராவாச்சு..
நட்டவிதை பூவாச்சு பொன்னம்மா..”
என்று எழுதியிருப்பார்.
நாட்டை இத்தனை ஆண்டுகளாக ஆட்சி செய்த வெள்ளையர்கள், நாட்டைவிட்டு கப்பலேறிச் சென்று விட்டனர் என்றும், நள்ளிரவில் சுதந்திரம் பெற்றதை குறிப்பிட்டு நட்ட நடு ராவாச்சு நாம் சுதந்திரத்திற்காக பட்ட துயரங்கள் வீண் போகவில்லை என்பதை குறிக்கும் வகையில் நட்டவிதை பூவாச்சு பொன்னம்மா என்று எழுதியிருப்பார்.
விடியும் வரையில் போராடினோம்:
அடுத்த வரிகளில்,
“விடியும் வரையில் போராடினோம்..
உதிரம் மதியாய் நீராடினோம்..
வெக்கலெல்லாம் வாளாச்சு..
துக்கமெல்லாம் தூளாச்சு கண்ணம்மா..”
என்று எழுதியிருப்பார்.
அதாவது, சுதந்திர போராட்டத்திற்காக இரவு, பகல் பாராமல் போராடினோம் என்பதையும், உடலெல்லாம் குளித்தது போல ரத்தத்தை சிந்தி போராடி, இந்த சுதந்திரத்திற்காக வைக்கோல்போர் கூட வாள் போல மாறியது என்றும் இந்த போராட்டத்தினால் தற்போது கிடைத்துள்ள சுதந்திரத்தால் நமது துக்கங்கள் எல்லாம் தூள், தூளாக மாறியது என்றும் கவிஞர் வாலி எழுதியிருப்பார். இனி வாசல்தோறும் மழைச்சாரலும், வாழ்வில் சூழ்ந்த சோகம் நீங்கும் என்றும் அடுத்தடுத்த வரிகளில் வாலி மக்கள் மகிழ்ச்சியை எழுதியிருப்பார்.
இங்கு நீ அங்கு நான் போராட:
அதற்கு அடுத்த வரிகளில் தலைவனை பிரிந்து வாடும் தலைவியின் பிரிவை மிக அழகாக நமக்கு உணர்த்தியிருப்பார். தமிழ் இலக்கியங்களில் ஒன்றான குறவஞ்சியில் தலைவனைப் பிரிந்து தலைவி பாடும் பாடலைப் போல அந்த வரிகள் இருக்கும். அதாவது,
“வண்ணமான் வஞ்சிமான் நீர் கோலம்..
கண்களால் கன்னத்தில் போட..
இன்னுமா இன்னுமா போர்க்கோலம்..
இங்கு நீ அங்கு நான் போராட…”
என்று எழுதியிருப்பார்.
அதாவது, காதலியான தலைவியை வண்ணமான், வஞ்சிமான் என்று ஒப்பிட்ட கவிஞர் தனது காதல் கணவனை பிரிந்து கண்களில் வடியும் கண்ணீர் கன்னத்தில் கோலம் போடுகிறது என்றும், சுதந்திரமே பெற்றாகிவிட்டது இன்னும் நீங்கள் போரில் இருக்கிறீர்களா? என்று தலைவி கேட்பது போல வாலி எழுதியிருப்பார். அதற்கு அடுத்த வரியில் உன்னைப் பிரிந்து நான் இங்கு போராட, என்னைப் பிரிந்து நீ அங்கு போராட என்றும், என்னுள் இருக்கும் நீயும், உன்னுள் இருக்கும் நானும் அவஸ்தைப்படுகிறோம் என்பதையும் இருவரின் தவிப்பையும், வலியையும் கவிஞர் நமக்கு உணர்த்தியிருப்பார்.
கானல் நீரைக் குடித்தேன்:
அதற்கு அடுத்த வரிகளில்,
“உனைக் கேட்டா என் நெஞ்சை அள்ளிக் கொடுத்தேன்…
தினம் நான்தான் என் அன்பே முள்ளில் படுத்தேன்..
நானோர் தீவாய் ஆனேன்..
வா வா.. அம்மம்மா… நாளெல்லாம் கானல் நீரைக் குடித்தேன்”
என்று எழுதியிருப்பார்.
காதலி தனது காதலன் மீது கொண்ட பேரன்பை வெளிப்படுத்தும் விதமாக, உன்னிடம் கேட்டுவிட்டு நான் என் அன்பை கொடுக்கவில்லை, நானே என் அன்பை அள்ளிக் கொடுத்தேன் என்று காதலி கூறுவதாகவும், அன்பு காதலனைப் பிரிந்து வாடும் காதலியின் ஒவ்வொரு இரவும் முள்ளில் படுப்பது போல கொடுமையானது என்று அவளது தனிமையின் வலியை சொல்லும் வாலி, யாரும் இல்லாமல் தனித் தீவாய் தவிக்கும் அந்த காதலி தினந்தோறும் கானல் நீரை குடிப்பதாக எழுதியிருப்பார். இருப்பது போலவே இருக்கும் ஆனால் இருக்காது என்பதே கானல் நீர். நீ இருப்பதாக மாயையிலே தினமும் வாழ்கிறேன் என்ற காதலியின் தவிப்பை கவிஞர் மிக அழகாக அந்த வார்த்தையில் கூறியிருப்பார்.
சேதி சொன்னதா தென்றல்?
அதற்கு அடுத்த வரிகளில் காதலியிடம் வந்து சேரும் காதலன், தன் அன்பையும், பாசத்தையும் வெளிப்படுத்தும் விதமாக வரிகளை எழுதியிருப்பார்.
“அன்னமே.. அன்னமே.. நான் சொல்லி
வந்ததா தென்றலும் நேற்று..
உன்னையே உன்னையே நான் எண்ணி
வெந்ததைச் சொன்னதா பூங்காற்று..”
என்று எழுதியிருப்பார்.
அதாவது, காதலியை அன்னப்பறவையுடன் ஒப்பிட்ட வாலி, நான் சொல்லித்தான் நேற்று தென்றல் காற்றும் உன்னை வந்து சேர்ந்ததா? என்று காதலியிடம் காதலன் கேட்பதுடன், உன்னை வந்துச் சேர்ந்த தென்றல் காற்று உன்னையே தினம் தினம் எண்ணி நான் தவித்த தவிப்பை உன்னிடம் சொன்னதா? என்று கேட்பது போலவும் எழுதியிருப்பார்.
மெட்டி போல கூட நடப்பேன்:
அதற்கு அடுத்த வரிகளில்,
“உந்தன் காலின் மெட்டி போல் கூட நடப்பேன்..
உந்தன் கண்ணுக்கு கண்ணீர்போல் காவல் இருப்பேன்..
மாலை சூடி தோளில் ஆடி
கைதொட்டு மெய்தொட்டு
உன்னில் என்னைக் கரைப்பேன்”
என்று எழுதியிருப்பார்.
காதலன் காதலி மேல் கொண்ட காதலை, உன் காலில் நான் அணிவிக்கும் மெட்டி போல எப்போதும் உடனிருப்பேன் என்றும், கண்ணில் இருந்து வரும் கண்ணீர் போல எப்போதும் உனக்கு காவலாக இருப்பேன் என்றும் காதலை வெளிப்படுத்தும் வகையில் எழுதியிருப்பார் வாலி.
உனக்கு மாலையிட்டு, உன் கரம்பிடித்து, உன்னை மணந்து உன்னுடன் என்னைச் சேர்த்துக் கொள்வேன் என்று அவளை சேர்ந்திடுவேன் என்று தனது காதலியிடம் தனது காதலை நாயகன் வெளிப்படுத்தும் விதமாக இந்த பாடலை கவிஞர் முடித்திருப்பார். ஷங்கர் இயக்கத்தில் 1996ம் ஆண்டு வெளியான இந்தியன் படத்தில் இடம்பெற்ற இந்த பாடல் படமாக்கப்பட்ட விதமும் நமது மனதை கவர்ந்திருக்கும். அடுத்த தொடரில் வேறு ஒரு பாடலுடன் சந்திக்கலாம்.
மேலும் படிக்க: ஆஹா என்ன வரிகள் 10: “என்ன சொல்ல போகிறாய்?” அவளின் சம்மதத்திற்காக தவிக்கும் அவனின் காதல்!
மேலும் படிக்க: ஆஹா என்ன வரிகள் 9: “நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்..” கவலைக்கு மருந்தாகும் கண்ணதாசனின் வரிக

Source link