DeAr Movie Review in Tamil: ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார், ஐஸ்வர்யா ராஜேஷ், ரோகினி, காளி வெங்கட், இளவரசு, தலைவாசல் விஜய், கீதா கைலாசம் என பலரும் நடித்துள்ள படம் ”டியர் (DeAr)”. ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படத்தை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தின் விமர்சனத்தை காணலாம்.
படத்தின் கதை
2023 ஆம் ஆண்டு மணிகண்டன், மீதா ரகுநாத் நடிப்பில் விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில் “குட்நைட்” படம் வெளியானது. இதில் மணிகண்டனுக்கு இருக்கும் குறட்டை பிரச்சினை வைத்து கதை அமைக்கப்பட்டிருந்தது. இதை பிரச்சினை கதாநாயகிக்கு இருந்தால் எப்படி இருக்கும் என்று சற்றே மாற்றி டியர் படம் எடுக்கப்பட்டுள்ளது. கதை ஒரே மாதிரியாக காணப்பட்டாலும் திரைக்கதையில் இயக்குநர் வித்தியாசம் காட்டியிருக்கிறாரா என பார்க்கலாம்.
சென்னையில் பிரபலமான தனியார் தொலைக்காட்சியில் சேர்ந்து பிரபலங்களை நேர்காணல் செய்ய வேண்டும் என்ற கனவுடன் இருக்கிறார் ஜி.வி.பிரகாஷ்குமார். இவருக்கு குன்னூரில் இருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷை திருமணம் செய்து வைக்கிறார்கள். ஜி.வி.பிரகாஷூக்கு சின்னதாக சத்தம் கேட்டாலே தூக்கத்தில் இருந்து எழுந்து விடுவார். ஆனால் ஐஸ்வர்யா ராஜேஷூக்கு குறட்டை விடும் பழக்கம் இருக்கிறது. நாட்கள் செல்ல செல்ல குறட்டை பிரச்சனை ஜி.வி.பிரகாஷூக்கு வேலை போகும் நிலைக்கு தள்ளுகிறது. இதனால் ஐஸ்வர்யா ராஜேஷிடம் விவாகரத்து கேட்கிறார். முதலில் இதற்கு ஐஸ்வர்யா ராஜேஷ் மறுக்கிறார். நீதிமன்றம் சில காலம் அவகாசம் கொடுக்கிறது. இதில் குறட்டை பிரச்சினை தீர்ந்ததா?, தம்பதியினர் ஒன்று சேர்ந்தார்களா? என்பதே டியர் படத்தின் கதையாகும்.
நடிப்பு எப்படி?
இந்த படத்தின் ஹீரோ ஜி.வி.பிரகாஷ்குமார் இன்னும் நடித்திருக்கலாம் என்னும் அளவுக்கு அவரது நடிப்பு உள்ளது. குறட்டை பிரச்சினையால் தான் ஆசைப்பட்ட கனவு சிதையும் போது ஆக்ரோஷப்படுவார் என பார்த்தால் சிம்பிளான கோபத்தில் கடந்து செல்கிறார். அதேபோல் தன்னுடைய பிரச்சினையை ஆரம்பத்தில் இருந்தே குறைபாடாக கருதாமல் இருக்கும் ஐஸ்வர்யாவின் கேரக்டர் லாஜிக்காக பார்த்தால் ஓகே என்றாலும், கொஞ்சமும் குற்ற உணர்ச்சியே இல்லாமல் படம் முழுக்க வருவது போல இருப்பது எரிச்சலை உண்டாக்குகிறது. இவர்களை விட காளிவெங்கட் – நந்தினி கேரக்டர் ரசிக்க வைக்கிறார்கள். மேலும் தலைவாசல் விஜய் – ரோகினி தொடர்பான காட்சிகளை இன்னும் அழுத்தமாக சொல்லியிருக்கலாம். ஏதோ கிளைமேக்ஸ் அட்வைஸ் மாதிரி சிம்பிளாக முடித்து விட்டார்கள்.
தியேட்டரில் படம் பார்க்கலாமா?
குட்நைட் படத்தில் இருந்து மாறுபட்ட கதை என்பதால் நீங்கள் தாராளமாக தியேட்டருக்கு போகலாம். அதேசமயம் உங்களுக்கு கண்டிப்பாக பொறுமை அவசியம். காரணம் மெதுவாக நகரும் திரைக்கதை, தேவையில்லாத சில காட்சிகள், திடீரென வரும் கிளைக்கதை எல்லாம் கொஞ்சம் அயற்சியை ஏற்படுத்துவது என்பது உண்மை. கணவன், மனைவிக்கும் இடையேயான பிரச்சினை என படத்தை தொடங்கி விட்டு புரிதலுக்காக வேறு எங்காவது கதை சென்றால் எப்படி?. இந்த மாதிரியான உணர்வுப்பூர்வமான கதைகளில் உணர்ச்சிகள் மிகவும் முக்கியம். இதை தனது அடுத்தப்படத்தில் இயக்குநர் ஆனந்த் ரவிச்சந்திரன் சரியாக கையாள்வார் என நம்பலாம்.
வித்தியாசமான கதை என்பதெல்லாம் சினிமாவில் அரிது தான். ஒரே மாதிரியான கதையை எப்படி வித்தியாசமாக தருகிறார்கள் என்று தான் ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். இதனை புதிய இயக்குநர்கள் சரியாக கையாண்டால் ரசிகர்கள் மனதை ஜெயிக்கலாம்..!
மேலும் காண