Will Actor Vijay try to capitalise ground reality by challenging BJP What will be the ideology of Tamizhaga vetri kazhagam


“நாளைய வாக்காளர்கள் நீங்க.. ஓட்டுக்கு பணம் வாங்காதீங்க.. உங்க பெற்றோர்கிட்டயும் இத சொல்லுங்க.. அம்பேத்கர், பெரியார், காமராஜர் எல்லாம் படியுங்க” என மாணவர்கள் மத்தியில் பேசி அரசியலுக்கு அச்சாரம் போட்ட விஜய்,  நேற்று அரசியல் கட்சியை அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளார்.
வள்ளுவர் முதல் அம்பேத்கர் வரை:
மாணவர்கள் மத்தியில் இதை பேசுவதற்கு முன்பே பல முறை அனல் பறக்க அவர் அரசியல் பேசியிருந்தாலும், இந்த கருத்துகள்தான், அவர் எங்கிருந்து தனது அரசியலை தொடங்க போகிறார் என்பதை நமக்கு உணர்த்தியது. தனது கொள்கை எது? தத்துவம் எது? தமிழ்நாட்டின் முக்கிய பிரச்னைகளில் தனது நிலைபாடு என்ன? என்பதை அவர் அறிவிக்கவில்லை என்றாலும், அம்பேத்கர், பெரியார், காமராஜரை குறிப்பிட்டு, தான் எதை சார்ந்து அரசியல் செய்ய போகிறார் என்பதை உணர்த்தியுள்ளார்.
‘பிளவுவாத அரசியல் கலாசாரம்’, ‘ஊழல் மலிந்த அரசியல் கலாசாரம்’ ஆகிய இரண்டுக்கு எதிராக அடிப்படை அரசியல் மாற்றத்தை கொண்டு வரப்போவதாக கட்சிக்கான அடித்தளத்தை போட்டுள்ளார். இலவசங்கள் தொடங்கி ஊழல் வரை திரைப்படத்தில் பல குழப்பமான, அபத்தமான கருத்துகளை பேசியிருந்தாலும், தனது அறிக்கையின் மூலம் அரசியல்வாதியாக பரிணமித்திருக்கிறார் விஜய்.
சாதி, மத வேறுபாடுகள் சமீபகாலமாக பல பிரச்சினைகளை ஏற்படுத்தி வரும் நிலையில், தமிழ்நாட்டில் புதிய அரசியல் கட்சி தோற்றம் பெற்றுள்ளது. பல்வேறு காரணங்களால் அதிமுக பலவீனம் அடைந்திருக்கும் நிலையில், திமுகவுக்கு அடுத்தபடியாக பிரதான எதிர்க்கட்சிக்கான இடத்தில் வெற்றிடம் இருப்பதாக அரசியல் வல்லுநர்கள் கருதி வரும் சூழலில், விஜய்யின் அரசியல் வருகை முக்கியத்துவம் பெறுகிறது.
பா.ஜ.க.வுக்கு சவாலாக மாறுகிறாரா விஜய்?
ஆனால், அந்த இடத்தை பிடிக்கத்தான் பா.ஜ.க. கடும் முயற்சிகளை செய்து வருகிறது. மேற்கு வங்கத்தை தொடர்ந்து தெலங்கானா, ஒடிசா ஆகிய மாநிலங்களில் பிரதான எதிர்க்கட்சிக்கான இடத்தை பிடிக்க பாஜக முயற்சித்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக, தமிழ்நாட்டிலும் தனது கவனத்தை திருப்பியிருக்கிறது. ஆனால், தற்போது அதற்கு சவாலாக மாறியுள்ளார் விஜய்.
பாஜக, விஜய்-க்கு இடையேயான போட்டி இன்று, நேற்று தொடங்கவில்லை. மெர்சல் படத்திலேயே தொடங்கிவிட்டது. அப்போது அந்த படத்தில் ஜிஎஸ்டி உள்ளிட்ட மத்திய அரசின் சில நடவடிக்கைகளை விமர்சனம் செய்யும் வகையில் வசனம், காட்சிகள் இடம்பெற்றிருந்ததாக பெரும் எதிர்ப்பு கிளம்பியது. 
அந்த சமயத்தில், நடிகர் விஜய்யை, ‛ஜோசப் விஜய்’ என கூறி, பாஜக மூத்த தலைவர் எச். ராஜா பரபரப்பை கிளப்பினார். அதாவது விஜய் ஒரு கிறிஸ்தவர் என்பதால்தான் மத்திய அரசை விமர்சனம் செய்கிறார் எனும் வகையில் எச். ராஜா கருத்து தெரிவித்திருந்தார். 
மேலும், விஜய் தனது கிறிஸ்தவ அடையாளளமான ஜோசப் என்ற பெயரை பயன்படுத்தாமல் விஜய் என்ற பெயரில் திரைப்படங்களில் நடித்து மக்களை ஏமாற்றுவதாகவும் விமர்சித்து இருந்தனர். இதற்கு, நடிகர் விஜய், எந்த வித எதிர்வினையும் ஆற்றவில்லை. ஆனாலும், இந்த விமர்சனத்துக்கு பிறகு நடிகர் விஜய் தொடர்பான சில அறிவிப்புகளில் அவரது பெயர் ஜோசப் விஜய் என இடம்பெற்று கவனம் ஈர்த்தது. அதாவது எனது பெயர் ஜோசப் விஜய் தான். இதனை மறைக்க வேண்டிய அவசியம் எதுவும் இல்லை என நடிகர் விஜய் பதிலடி கொடுக்கும் வகையில் இப்படி செய்திருந்தார்.
அறிக்கையில் பட்டவர்த்தனமான அரசியல் பேசும் விஜய்:
வள்ளுவனுக்கு காவி சாயம் பூசி வரும் நிலையில், ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ (பிறப்பால் அனைவரும் சமம்) என்ற குறளை அறிக்கையில் விஜய் குறிப்பிட்டிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அனைவருக்கும் சம உரிமைகளை உறுதி செய்துள்ள அரசியலமைப்பை மாற்ற போகிறேன் என்ற குரல் ஓங்கி ஒலித்து நிலையில், இந்திய அரசியலமைப்புக்கு உட்பட்டு, தனது அரசியல் இருக்கும் என்பதை பட்டவர்த்தனமாக சொல்லியுள்ளார் விஜய்.
மாநில உரிமைகள் தொடர்பான விவகாரத்தில் இந்தியாவுக்கே முன்னுதாரணமாக இருப்பது தமிழ்நாடு. அண்ணா தொடங்கி கருணாநிதி, ஜெயலலிதா, ஸ்டாலின் வரை, அனைவரும் மாநில உரிமைகளுக்காக குரல் கொடுத்துள்ளனர். நீட் தொடங்கி பல விவகாரங்களில் மாநில உரிமைகள் நசுக்கப்பட்டு வருவதாக எதிர்க்கட்சிகள் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். இப்படிப்பட்ட சூழலில், தமிழ்நாட்டின் கள அரசியலை பிரதிபலிக்கும் வகையில் மாநில உரிமைகள் சார்ந்து பேசியுள்ளார் விஜய்.
அம்பேத்கர், பெரியாரை பற்றி படிக்க வேண்டும் என சொன்னது முதல் மாநில உரிமைகள் சார்ந்து இயங்க போவதாக கூறியது வரை, அனைத்துமே அரசியல் நிலைபாடுதான். தமிழ்நாட்டில் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என பாஜக துடித்து வரும் நிலையில், தனது அறிக்கையின் மூலம் அவர்களுக்கு எதிராக அரசியலில் களமாடுவாரா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளார் விஜய்.                                                                                                              இதையும் படிக்க: Actor Vijay: ஆரம்பமே அதிரடி: அரசியல் சூழலை சரமாரியாக விமர்சித்த விஜய்- பயணிக்கப்போகும் பாதை என்ன?

மேலும் காண

Source link