Amit Shah On Electoral Bonds: அரசியலில் கருப்பு பண புழக்கத்தை தடுக்கவே தேர்தல் பத்திரங்கள் கொண்டு வரப்பட்டதாக, உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம் அளித்துள்ளார்.
தேர்தல் பத்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டது ஏன்?
பாஜக தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்த தேர்தல் பத்திரங்கள் திட்டத்தை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. இதுதொடர்பாக பேசியுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “தேர்தல் பத்திரங்களை ரத்து செய்த உச்சநீதிமன்ற தீர்ப்பை முழுமையாக மதிக்கிறேன். அரசியலில் கறுப்புப் பணத்தின் புழக்கத்தை ஒழிப்பதற்காகவே இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. தேர்தல் பத்திரங்களை முற்றிலுமாக ரத்து செய்ததற்குப் பதிலாக, அதை மேம்படுத்தியிருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.
எதிர்க்கட்சித் தலைவர்கள் தங்களது சொந்த பாக்கெட்டுகளை நிரப்புவதற்காக அரசியல் நன்கொடைகளை ரொக்கமாகப் பெறுகின்றனர். எடுத்துக்காட்டாக ஆயிரத்து 100 ரூபாயை நன்கொடையாக பெற்றால் அதில் 100 ரூபாய் கட்சிக்கு வழங்கி, மீதத்தொகையை தங்கள் சொந்த பாக்கெட்டுகளில் நிரப்புகின்றனர். காங்கிரஸ் இதை பல ஆண்டுகளாக நடத்தி வருகிறது.
கட்சி வாரியான நிதி?
மொத்தம் 20,000 ஆயிரம் கோடி மதிப்பிலான தேர்தல் பத்திரங்களில் பா.ஜ.க.வுக்கு சுமார் 6,000 கோடி ரூபாய் கிடைத்துள்ளது, மீதமுள்ள பத்திரங்கள் எங்கே போனது? திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1,600 கோடி, காங்கிரசுக்கு ரூ.1,400 கோடி, பிஆர்எஸ் கட்சிக்கு ரூ.1,200 கோடி, பிஜேடிக்கு ரூ.750 மற்றும் திமுகவுக்கு ரூ. 639 கோடி கிடைத்துள்ளது. 303 எம்.பி.க்கள் இருந்தும் எங்களுக்கு ரூ. 6,000 கோடி கிடைத்துள்ளது. 242 எம்.பிக்களை கொண்ட மற்ற கட்சிகளுக்கு 14,000 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. இதில் அவர்கள் அழுவதற்கு என்ன உள்ளது? கணக்குகள் தீர்க்கப்பட்டவுடன் அவர்களால் உங்களை எதிர்கொள்ள முடியாது என்று என்னால் கூற முடியும்” என அமித் ஷா விளக்கமளித்துள்ளார்.
நீதிமன்ற தீர்ப்பும், எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டும்:
தங்களது அடையாளங்களை வெளிப்படுத்தாமலேயே கார்ப்ரேட் நிறுவனங்கள் அரசியல் கட்சிகளுக்கு, நிதி உதவி அளிக்கும் தேர்தல் பத்திரங்கள் திட்டம் மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், வெளிப்படைத்தன்மை இன்றி இந்த திட்டம் செயல்படுத்தப்படுவதாக, தேர்ந்த பத்திரங்கள் திட்டத்தை உச்சநீதிமன்றம் அதிரடியாக ரத்து செய்து தீர்ப்பளித்தது. இதையடுத்து, தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் பெற்ற நிதி தொடர்பான விவரங்களை வெளியிடவும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கிக்கு உத்தரவிட்டது.
இதன் மூலம் பா.ஜ.க.வின் மிகப்பெரிய ஊழல் வெளியாகி உள்ளதாகவும், கார்ப்ரேட் நிறுவனங்களிடம் இருந்து பெற்ற பணத்தை கொண்டு பல மாநிலங்களில் பாஜக ஆட்சியை கவிழ்த்ததாகவும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. அதோடு, நிதி அளித்த நிறுவனங்களுக்கு ஆதரவாக பாஜக அரசு செயல்படுவதாகவும் சாடி வருகின்றன. இந்நிலையில் தான், தேர்தல் பத்திரங்கள் தொடர்பாக அமித் ஷா விளக்கமளித்துள்ளார்.
மேலும் காண