விஜய் தொலைக்காட்சியின் ‘கலக்கப்போவது யாரு’, ‘குக் வித் கோமாளி’ ஆகிய நிகழ்ச்சிகளின் மூலம் தனது தனித்துவ காமெடி மற்றும் பாடி லேங்குவேஜ் மூலம் ரசிகர்களை ஈர்த்து பட்டி தொட்டியெல்லாம் பிரபலாமானவர் பாலா.
கேபிஒய் பாலாவின் உதவிப்பணி
கேபிஒய் பாலா (KPY Bala) என மக்களால் அறியபடும் பாலா தற்போது தொலைக்காட்சி தாண்டி சினிமாவில் பயணித்து வருவதுடன், நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் வலம் வருகிறார். ஆனால் இவற்றையெல்லாம் தாண்டி பாலா தன் உதவும் குணத்தால் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்து வருகிறார்.
சினிமா, தொலைக்காட்சி உலகில் பெயர், புகழை சம்பாதித்து உயரங்களை எட்டி வரும் பாலா, மற்றொருபுறம் மனிதாபிமானத்துடன் பலருக்கும் பல உதவிகளையும் செய்து வருவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார். குழந்தைகள் படிப்பு, போக்குவரத்து உதவி, மிக்ஜாம் புயலின்போது உதவி என தன் சொந்த செலவில் பாலா பேதமின்றி உதவிகள் செய்து வரும் நிலையில், பாலாவின் செயல் இணையத்தில் தொடர்ந்து பாராட்டுகளைப் பெற்று வருகிறது.
வருந்திய இளைஞர்: பைக் வாங்கிக் கொடுத்த பாலா
அந்த வகையில், தற்போது கேபிஒய் பாலா தன்னிடம் பைக் இல்லை என வருந்திய பெட்ரோல் பங்கில் வேலை செய்யும் நபருக்கு தற்போது பைக் வாங்கிக் கொடுத்து அசத்தியுள்ளார்.
பெட்ரோல் போட்டுக் கொண்டு “பைக் இல்லை, ஒரு சைக்கிளுக்கு கூட வழியில்லை” என வருந்திப் பேசிய இளைஞரின் வீடியோ முன்னதாக இணையத்தில் ட்ரெண்டானது. இந்நிலையில், புது டிவிஎஸ் பைக் ஒன்றை வாங்கிக் கொண்டு, பூஜை போட்ட கையுடன் அவர் வேலை செய்யும் பெட்ரோல் பங்குக்கே சென்று பெட்ரோல் போட்டுவிட்டு சர்ப்ரைஸாக பைக்கினை அந்த இளைஞரிடம் ஒப்படைத்து அவரை திக்குமுக்காடச் செய்துள்ளார் பாலா.
லைக்ஸ் அள்ளும் வீடியோ!
இதுகுறித்து தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து பாலா, இவரது வீடியோவை இன்ஸ்டாகிராமில் எதேச்சையாக பார்த்தேன். என்னால் என் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை. வீடியோவில், என்னால் பைக் வாங்க முடியாது என்று கூறினார், ஆனால் அவருக்கு நான் ஒரு பைக்கை பரிசளிக்க முடியும் என என் மனம் சொன்னது. அதனால் என் தம்பிக்கு பைக்கை பரிசாக இந்த பைக்கைக் கொடுத்தேன். லவ் யூ தம்பி. ஏதோ என்னால் முடிஞ்சது” எனப் பதிவிட்டுள்ளார்.
உச்சக்கட்ட மகிழ்ச்சி மற்றும் திகைப்பில் இளைஞர் கண்கலங்கும் இந்த வீடியோ தற்போது ரசிகர்களை இதயங்களை வென்று லைக்ஸ் அள்ளி வருகிறது.
மற்றொருபுறம் பாலா இப்படி உதவிகள் செய்வதற்கு பின் இருப்பவர் யார் எனவும் இணயத்தில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், தன் பின் அவமானமும் கஷ்டமும் மட்டுமே உள்ளது என்றும், எதிர்காலத்தில் பிச்சை எடுத்தாலும் உதவி செய்வேன் என்றும் விளக்கமளித்து பாலா தொடர்ந்து தன் உதவிப் பணிகளை தனியாக மேற்கொண்டு வருகிறார்.
மேலும் காண