நடிகர் ஜி. வி.பிரகாஷ் குமார் (G V Prakash), நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் இணைந்து நடித்துள்ள டியர் திரைப்படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகியுள்ளது. இளவரசு, ரோஹினி உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தை, ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். நட்மெக் ப்ரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது.
டியர் திரைப்படம்
சென்ற ஆண்டு மணிகண்டன் நடிப்பில் வெளியாகி ஹிட் அடித்த ‘குட் நைட்’ படத்தைத் தொடர்ந்து, குறட்டை விடும் புதுமணப் பெண், அதனால் திருமண வாழ்வில் எழும் சிக்கல்கள் ஆகியவற்றை மையப்படுத்தி இக்கதையும் அமைந்துள்ளது. வரும் ஏப்.11ஆம் தேதி இப்படம் திரைக்கு வரவுள்ள நிலையில், இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு முன்னதாக நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்டு நடிகர் ஜி.வி.பிரகாஷ் பேசியதாவது:
‘வாராவாரம் என் பட ரிலீஸ்’
“வாராவாராம் படம் வருதே எனக் கேட்கிறார்கள். ஆனால் இந்த மூன்று படங்களுமே (ரெபெல், கள்வன், டியர்) 4 ஆண்டுகள் உழைப்பில் உருவான படங்கள். கள்வன் படமும் அப்படி உழைத்தது. ஆனால் அது அனைத்து வேலைகளும் முடித்து, இப்போது தேதி முடிவாகி இப்படி வருகிறது. கடைசியாக வந்த என் மூன்று படங்களிலுமே ஒரு உழைப்பு இருந்தது.
டியர் திரைப்படம் ஐஷூ ஃபிளைட்டில் என்னைப்பார்த்து இந்தக்கதை கேளுங்கள் என்றார். ஐஷூ எனக்குப் பிடித்த நடிகை. ஆனால், இவர் படத்தில் நமக்கு என்ன ரோல் இருக்கும் எனத் தயங்கினேன், கதை கேட்கும்போது படம் பண்ணும் ஐடியா இல்லை. ஆனால் கேட்டவுடன் அழுது விட்டேன். கதை மிகவும் பிடித்திருந்தது. உடனே நடிக்க ஒத்துக்கொண்டேன். ஒரு தம்பதிக்குள் இருக்கும் அழகான டிராமா.
விமர்சனங்களுக்கு பதிலடி
அவங்க இருவருக்கு தான் உள்ளே நடக்கும் பிரச்னை தெரியும், அதை இயக்குநர் அழகாக சொல்லி உள்ளார். இந்தப் படம் லைவ் சவுண்ட் என்பதால் எல்லோரும் போட்டிப் போட்டு நடித்துள்ளோம். எல்லோரும் அருமையாக நடித்துள்ளனர். படம் கண்டிப்பாக உங்களுக்குப் பிடிக்கும். பாடல் வரிகளுக்கும் நன்றாக படத்தில் அமைந்துள்ளன. இளவரசு சாருக்கு மிக அழகான சீன் இந்தப் படத்தில் உண்மையாகவே உள்ளது. படம் பார்த்துவிட்டுச் சொல்லுங்கள்” என ஜி. வி.பிரகாஷ் பேசியுள்ளார்.
முன்னதாக ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் இந்த வார ரிலீஸாக கள்வன் திரைப்படமும், சென்ற மார்ச் மாதம் 22ஆம் தேதி ரெபல் திரைப்படமும் வெளியாகின. மேலும் இந்த இரண்டு திரைப்படங்களுமே கலவையான விமர்சனங்களைப் பெற்ற நிலையில், ஜி.வி.பிரகாஷ் கதையை கவனிக்காமல் வெள்ளிக்கிழமை தோறும் படம் ரிலீஸ் செய்வதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டிருப்பதாக விமர்சனங்கள் எழுந்தன. இவற்றுக்கு பதில் அளிக்கும் வகையில் தற்போது ஜி.வி.பிரகாஷ் பேசியுள்ளார்.
மேலும் காண