Pongal 2024 Students Put Up Samattva Pongal At The College Gate In Villupuram College Administration Denied Permission

விழுப்புரம் : பொங்கல் திருநாளையொட்டி, இன்று முதல் பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. இதையொட்டி, முன்னதாக, மாணவ, மாணவிகள் தாங்கள் பயிலும் கல்லுாரிகளில் மாணவ, மாணவிகள், பேராசிரியர்களோடு சமத்துவ பொங்கல் வைத்து வழிப்பட்டு வருகின்றனர்.
இதில், விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியில் கல்லுாரியில் ஆண்டுதோறும் மாணவர்கள் சமத்துவ பொங்கல் வைத்து வழிபடுவது வழக்கம். இந்த கல்லுாரி நிர்வாகம் மூலம் இன்று சமத்துவ பொங்கல் வைக்க அனுமதி கோரிய நிலையில், மாணவ, மாணவிகள்  காலை 9.00 மணிக்கு கல்லுாரிக்கு வந்தனர். ஆனால், கல்லுாரி வளாகத்தின் கேட் மூடப்பட்ட நிலையில், நிர்வாகம் மூலம் பொங்கல் வைப்பதற்கான அனுமதியும் மாணவர்களுக்கு மறுக்கப்பட்டது.

இதையடுத்து, மாணவ, மாணவிகள் ஒன்று சேர்ந்து கல்லுாரி கேட்டிற்கு வெளியே பானையில் தீயை மூட்டி பொங்கல் படையிலிட்டு வழிபட்டனர். பின், மாணவ, மாணவிகள் பொங்கலோ, பொங்கல் என கோஷங்கள் எழுப்பியதோடு, கல்லுாரி கேட்டிற்கு வெளியே சாலையில் செல்பி புகைப்படங்கள் எடுத்து மகிழ்ந்தனர்.
தமிழர் திருநாள் 
தமிழர் திருநாளான பொங்கலை உலகெங்கும் உள்ள தமிழ் மக்கள் வெகு விமரிசையாக கொண்டாடுவது வழக்கம். தமிழர் வாழும் அனைத்து இடங்களிலும் வெகு சிறப்பாக கொண்டாடப்படும் பண்டிகையில் ஒன்று இந்த தை பொங்கல். சூரிய கடவுளுக்கும், இயற்கைக்கும் நன்றி செலுத்தும் விதமாக இந்த பண்டிகை தமிழ்நாட்டில் கொண்டாடப்பட்டு வருகிறது.
தை மாதத்தின் முதல் நாள் பொங்கல் கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகைக்கு முதல் நாள் புது பானை, புத்தாடை வாங்குவார்கள். வீட்டின் வாசலில் பொங்கல் கோலம் போடுவார்கள். வீட்டின் முன் புது அடுப்பு வைத்து, புது பானையில் புது அரிசி இட்டு முற்றத்தில் பொங்கல் வைப்பார்கள். புதிய பானைக்கு புதிய மஞ்சளை காப்பாக அணிவர். பொங்கலுக்கு புதிய கரும்பு, புதிய காய்கறிகள் என அனைத்தையும் புதியவற்றையே பயன்படுத்துவார்கள். பானையில் மஞ்சள், குங்குமம் வைத்து பொங்கலிட ஆரம்பிப்பார்கள். பொங்கல் பொங்கி வரும்போது குடும்பத்தில் உள்ள அனைவரும் பொங்கலோ! பொங்கல் என்று மகிழ்ச்சியுடன் வரவேற்பார்கள்.
பொங்கல் பொங்கியதும் அதை சூரிய பகவானுக்கும், கால்நடைக்கும் படைத்து விட்டு பின்பு உண்பார்கள்.

Source link