வீரா படத்தில் இடம்பெற்ற பாடல் ஒன்றை நடிகர் ரஜினிகாந்த் மாற்றச் சொன்ன சம்பவத்தை நடிகர் சுப்பு பஞ்சு நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
1994 ஆம் ஆண்டு ரஜினிகாந்த், மீனா, ரோஜா, செந்தில், வடிவுக்கரசி, சார்லி என பலரின் நடிப்பில் வெளியான படம் “வீரா”. இளையராஜா இசையமைத்த இப்படத்தை பஞ்சு அருணாச்சலம் தயாரித்திருந்தார். நகரத்துக்கு பாடுவதற்காக வந்து ஆசைப்பட்டு சந்தர்ப்ப சூழ்நிலையால் ரோஜா, மீனா இருவரையும் திருமணம் செய்து, அதிலிருந்து எப்படி தப்பிக்கிறார் என்பது இப்படத்தின் கதையாக அமைக்கப்பட்டிருந்தது. முழுக்க முழுக்க காமெடி ஜானரில் உருவாக்கப்பட்ட இப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
இது 1992 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான அல்லரி மொகுடு என்ற படத்தின் ரீமேக் ஆகும். இந்த படத்தை சுரேஷ் கிருஷ்ணா இயக்க மறுத்து விட்டார். ரஜினியை வைத்து அண்ணாமலை படத்தை இயக்கி மிகப்பெரிய வெற்றியை கொடுத்த நிலையில் இப்படி ஒரு காமெடி படத்தை எடுக்க முடியாது என சொன்னார். ஆனால் ரஜினிகாந்த் வித்தியாசமான படம் கொடுக்க வேண்டுமென சொன்னதால் பின்னர் இயக்கினார்.
இந்த படத்தில் கொஞ்சி கொஞ்சி, மலைக்கோவில் வாசலிலே, வாடி வெத்தலை, மாடத்திலே கன்னி மாடத்திலே என அத்தனை பாடல்களும் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. இதனிடையே இந்த படத்தில் மலைக்கோவில் வாசலிலே, கொஞ்சி கொஞ்சி பாடல் உருவான விதத்தை நடிகர் சுப்பு பஞ்சு நேர்காணல் ஒன்றில் தெரிவித்திருந்தார்.
அதில், “கொஞ்சி கொஞ்சி பாடலும், மலைக்கோவில் வாசல் பாடலுக்கு முன்னாடி வேறொரு வரிகளை வைத்து பாடல் எழுதியிருந்தோம். ஷூட்டிங் ஆரம்பிப்பதற்கு முன்னாடி, இந்த 2 பாடல்களும் ரஜினிக்கும் சுத்தமாக பிடிக்கவில்லை.
என்ன காரணம் எனவும் தெரியவில்லை. தெலுங்கில் கொஞ்சி கொஞ்சி பாடல் வேறு மாதிரி இயக்கப்பட்டிருக்கும். அது ரஜினியின் மனதில் பதிந்து விட்டது. அதனால் தமிழில் சரியாக வரவில்லை என ரஜினி என் அப்பாவிடம் சொன்னார். அவர் நீ நடி ரஜினி, செட்டாகவில்லை என்றால் பார்த்துக் கொள்ளலாம் என சொல்லி விட்டார். பின்னர் 2 பாடலில் ஒரு பாடலை ரஜினிக்காக மாற்றி விடலாம். அதேசமயம் கொஞ்சி கொஞ்சி பாடல் கண்டிப்பாக இடம் பெற வேண்டும் என கறாராக சொல்லி விட்டார்.
இளையராஜாவிடம் சென்று ரஜினி இப்படி பாடல் வேண்டாம் என சொல்கிறார், மாற்றிவிடலாம் என தெரிவிக்கப்படுகிறது. அவர் ஏன் இந்த பாடல் நல்லா தானே இருக்கிறது? என கேட்கிறார். நல்ல ஹெவியான ரிதம் இருக்க வேண்டும் என நினைக்கிறார் என சொன்னதும், அவ்வளவு தானே இந்த பாடலை கேளு என சொல்லிவிட்டு “மலைக்கோவில் வாசலில்” பாடலை உருவாக்கினார். நீங்கள் அந்த பாடலை நன்றாக கேட்டால் டிரம்ஸ் இசை மாதிரி பீட் இருக்கும்” என சுப்பு பஞ்சு கூறியிருப்பார்.
மேலும் காண