Puducherry Graduate Teacher Recruitment 300 Post Application Opens From Today- TNN | Graduate Teacher Recruitment: அரசு பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள்; இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

புதுச்சேரி: அரசு பள்ளிகளில் காலியாக 300 பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.
புதுச்சேரி அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப பள்ளி கல்வித்துறை நடவடிக்கை எடுத்து வருகின்றது. கடந்த சில தினங்களுக்கு முன் 67 விரிவுரையாளர் பணியிடங்களுக்கு பள்ளி கல்வித்துறை சார்பில் அறிவிப்பு வெளியிட்டது. அடுத்து குரூப்-பி அரசிதழ் பதிவு பெறாத பதவியான 300 பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப முடிவு செய்துள்ள பள்ளி கல்வித் துறை விண்ணப்பம் வரவேற்றுள்ளது.
விண்ணப்பம் :
23 ம்தேதி காலை 10 மணி முதல் அடுத்த மாதம் 22 ம்தேதி மாலை 5.45 மணி வரை https://recruitment.py.gov.in என்ற ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்த பிறகு அதனை பதிவிறக்கம்  செய்து, இயக்குனர், பள்ளி கல்வித்துறை, பெருந்தலைவர் காமராஜர் வளாகம், 100 அடி ரோடு, அண்ணா நகர், புதுச்சேரி-605005. என்ற முகவரிக்கு பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர் பணிக்கு என குறிப்பிட்டு, பிப்ரவரி 29ம் தேதி மாலை 5 மணிக்கு அனுப்ப வேண்டும்.
பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா அல்லது மத்திய அரசின் டெட் தேர்வுகளை எழுதி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பொது,இ.டபுள்யூ.எஸ்., பிரிவினர் 90 சதவீத மதிப்பெண்,ஓ.பி.சி., எம்.பி.சி., மீனவர், முஸ்லீம் பிரிவினர் 82 சதவீதம், எஸ்.சி., எஸ்.டி., பி.டி., மாற்றுதிறனாளிகள் 75 சதவீதம் மதிப்பெண் டெட் தேர்வுகளில் எடுத்து இருக்க வேண்டும்.
வயது தளர்வு
பயற்சி பட்டதாரி ஆசிரியர் பணிக்கு 12.02.2024 அன்று 18 வயது முதல் 30 வயதிற்கு மிகாதவர்கள் விண்ணப்பிக்கலாம். இருப்பினும் ஓ.பி.சி., எம்.பி.சி., மீனவர், முஸ்லீம் பிரிவினருக்கு 3 ஆண்டுகள், எஸ்.சி., பிரிவினருக்கு 5 ஆண்டுகள் வயது தளர்வு உண்டு. மாற்று திறனாளிகளுக்கு 45 வயது வரையிலும், எஸ்.சி., பிரிவு மாற்றுதிறனாளிகளுக்கு 50 வயது வரையிலும் விண்ணப்பிக்கலாம். இட ஒதுக்கீடு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள 300 பயற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்கள் பிராந்திய ரீதியாக புதுச்சேரி, காரைக்கால் 286, மாஹே 12, ஏனாம் 2 என்ற அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளன.
புதுச்சேரி, காரைக்கால் பிராந்தியத்திற்கான மொத்தமுள்ள 286 பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் பொது 128, எம்.பி.சி 49, எஸ்.சி 44, ஓ.பி.சி 29, இ.டபுள்யூ.எஸ் 26, மீனவர் 5, முஸ்லீம் 5 இட ஒதுக்கீடு அடிப்படையில் செய்யப்பட உள்ளது. மாற்றுதிறனாளிகளுக்கு உள் ஒதுக்கீடாக 11 இடங்கள் உள்ளன. பாடரீதியாக ஆங்கிலம்-52, கணிதம்-58, லைப் சயின்ஸ்-35, இயற்பியல் அறிவியல்-46, சமூக அறிவியல்-94, பிரெஞ்சு-1 என்ற அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மாகி பிராந்தியத்திற்கு கணிதம்-4, சமூக அறிவியல்-7, பிரெஞ்சு-1 என்ற அடிப்படையிலும், ஏனாமில் கணிதம்-1, சமூக அறிவியல்-1 என்ற அடிப்படையிலும் பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் போது ஏதேனும் சந்தேகம் இருந்தால் அதனை நிவர்த்தி செய்ய உதவி மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. சந்தேகங்களுக்கு 0413-2207369 என்ற எண்ணை அலுவலக நாட்களில் காலை 10 மணி முதல் மதியம் 12.30 மணி வரையிலும், மாலை 3 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் தொடர்பு கொள்ளவும்.

Source link