Puratchi Thalaivar MGR Young Age Cinema Entry To Tamilnadu Cm Full Life History Here

தமிழக அரசியல் வரலாற்றில் எம்.ஜி.ஆர் எப்படி மிகப்பெரிய ஆளுமையாக விளங்கினாரோ அதே அளவிற்கு தமிழ் சினிமாவிலும் வரலாற்று சுவடுகளை ஆழமாக பதித்து சென்றிருக்கிறார். துள்ளிக்குதித்து ஆடும் நடனம் , வாள் சண்டை , கைகளை உயர்த்தி பாடுவது , உதட்டை கடித்து வசனம் உச்சரிப்பது என தமிழ் சினிமாவில் மாறுபட்ட ஐகானாக திகழ்கிறார் எம். ஜி.ஆர். இன்று விருதுகளை வாங்கி குவிக்கும் பல நடிகர்களுக்கும் எம்.ஜி.ஆர்தான் எங்களின் முன்னோடி என சொல்லக்கேட்டிருக்கிறோம். அவர் திரை பயணத்தை திரும்பி பார்ப்போமா.!
நாடக கம்பெனி :
கும்பகோணத்தில் குடியிருந்த எம்.ஜி.ஆர் அங்குள்ள ஆனையடி நகராட்சி பள்ளியில் படித்தார். அப்போதிலிருந்தே விளையாட்டு , நாடகம் என்றால் எம்.ஜி.ஆருக்கு பிரியாமாம். கூடவே ஜவ்வு மிட்டாயும். அந்த மிட்டாய் வாங்க காசில்லாத சமயங்களில் வசதி படைத்த பல நண்பர்கள் , எம்.ஜி.ஆருக்கு அதனை வாங்கி கொடுப்பார்களாம். ஒரு முறை எம்.ஜி ஆர் புகழ்பெற்ற ராமாயண கதைக்களத்தில் ‘லகுசா’ கதாபாத்திரம் ஒன்றில் நடித்திருக்கிறார்.
அவரின் நடிப்பு திறனை கண்ட நாராயணன் நாயர் என்பவர்  ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி என்னும் நாடக குழுவின் எம்.ஜி .ஆரை சேர்த்து விட்டிருக்கிறார்.  சிறப்பாக சென்றுக்கொண்டிருந்த நாடக நாட்களில் ,டீன் -ஏஜை எட்டிய எம்.ஜி.ஆருக்கு குரல் உடைய தொடங்கியிருக்கிறது. அந்த சமயத்தில் இனி தன்னால் பாடி நடிக்க முடியாதே என்ற தயக்கத்தில் இருந்திருக்கிறார் எம்.ஜி.ஆர். அப்போதுதான் பிரபல உறையூர் நாடக கம்பெனியில் இருந்து அவரையும், அவரது அண்ணன் சக்கரபாணியையும் நாடக குழுவின் இணையும் படி அழைப்பு வந்திருக்கிறது.
இந்த நாடக குழுவில் கதாநாயகனாக இருந்துவிட்டு , மீண்டும் தனது குரலால் பின்னுக்கு தள்ளப்பவோமே ..அந்த நிலைக்கு தள்ளப்படுவதற்கு முன்னதாகவே இங்கிருந்து வெளியேறிவிட வேண்டும் என எண்ணிய எம்.ஜி.ஆர்  1930 ஆம் ஆண்டு உறையூர் நாடக கம்பனியில் இணைந்தார். அந்த குழுவில் எம்.ஜி.ஆருக்கு சிறந்த அங்கீகாரம் வழங்கப்பட்டது. சிறப்பு நாடகங்களில் நடிக்கவும் அவர் அழைத்துச்செல்லப்பட்டார். அப்படித்தான் ஒருமுறை பர்மாவிற்கு சென்று திரும்பிய அவரை , மீண்டும் ஒரிஜினல் பாய்ஸ் குழுவில் இணையும்படி அழைப்பு வந்திருக்கிறது. அப்போது மீண்டும் அழைப்பை ஏற்று குழுவில் இணைந்துள்ளார்.
அதன் பிறகு தொடர்ந்து வாள் பயிற்சி, கத்தி சண்டை, கம்பு சண்டை என அனைத்து போர் விளையாட்டையும் கற்றுக்கொள்ள தொடங்கியிருக்கிறார்.
சினிமா எண்ட்ரி :
எம்.ஜி.ஆரின் முதல் படம் சதி லீலாவதி என்பது அவரது ரசிகர்களுக்கு நன்றாகவே தெரியும். அந்த வாய்ப்பு எப்படி கிடைத்தது தெரியுமா? எம்.ஜி.ஆர் நாடகங்களில் நடித்துக்கொண்டிருக்கும் பொழுது, எம்.கந்தசாமி முதலியாரின் மகன் எம்.கே ராதா கதாநாயகனாக நடிக்க அந்த படத்தில் எம்.ஜி.ஆருக்கு காவல்துறை அதிகாரியாக நடிக்க வாய்ப்பு வாங்கிக்கொடுத்திருக்கிறார் எம்.கந்தசாமி. எல்லிஸ் .ஆர்.டங்கன் இயக்கத்தில், மனோரமா ஃபிலிம்ஸ் தயாரிக்க 1936 ஆம் ஆண்டு வெளியான அந்த படத்தில் எம்.ஜி.ஆர் கதாபாத்திரத்தின் பெயர் ரெங்கைய நாயுடு.  அதன் பிறகு எல்லிஸ்.ஆர்.டங்கன் இயக்கத்தில் உருவான டங்கன் படத்தில் இஸ்லாமிய இளைஞராக நடித்திருந்தார். அதன் பிறகு வீர ஜெகதீஸ், மாயா மச்சீந்திரா, பிரகலாதா உள்ளிட்ட படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்தார் எம்.ஜி.ராமச்சந்திரன் .

பாகவதர் கைது!
எம்.ஜி.ஆர் சினிமாவில் நுழைந்த காலக்கட்டத்தில் , சினிமாவில் கொடிக்கட்டி பறந்தவர்கள் பி.யு.சின்னப்பாவும் , தியாகராஜ பாகவதரும். தமிழ் சினிமா என்னதான் இன்றைக்கு பல மாற்றங்களை கண்டிருந்தாலும், போட்டி நடிகர்களின் ஆதிக்கம் மட்டும் தொன்று தொட்டு வருகிறது போலும்! சரி விஷயத்திற்கு வருவோம்.. எம்.ஜி.ஆர் 1941 ஆம் ஆண்டு வெளியான அசோக்குமார் திரைப்படத்தில் முதன் முதலாக தியாகராஜ பாகவதருடன் தனது திரையை பகிர்ந்துக்கொண்டார். அதே போல ஹரிச்சந்திரா திரைப்படத்தில் அமைச்சராக நடித்து , பி. யு. சின்னப்பாவுடன் தனது திரையை பகிர்ந்துக்கொண்டார்.
அதன் பிறகு சாலிவாகனன், மீரா, ஸ்ரீமுருகன் என அடுத்தடுத்த படங்களில் கிடைத்த வேடங்களில் எல்லாம் நடித்தார் எம்.ஜி.ஆர்.  அப்போதுதான் தமிழ் சினிமாவில் ஆளுமையாக இருந்த சின்னப்பா மற்றும் பாகவதரின் நிலை சரிய தொடங்கியது. 1944 ஆம் வருடம் நவம்பர் 27-ல் லட்சுமி காந்தன் கொலைவழக்கில் கைதானார் பாகவதர். அப்போது மிகப்பெரிய வெற்றிடம் ஒன்று உருவானது. அதனை பூர்த்தி செய்ய இயக்குநர்கள் எம்.ஜி.ஆரை பயன்படுத்திக்கொண்டனர். வசீகரிக்கும் சிரிப்பும், கச்சிதமான உடலமைப்பும் கொண்ட ராமச்சந்திரன் தனது கதைக்கு பொருத்தமாக இருப்பார் என எண்ணிய  இயக்குநர் மோகன் எம்.ஜி.ஆரை நாயகனாக வைத்து ராஜகுமாரி என்னும் திரைப்படத்தை எடுத்திருந்தார். படத்திற்கு அமோக வரவேற்பு. இருந்தாலும் இனி  நடித்தால் கதாநாயகன்தான் என அடம்பிடிக்காமல், தொடர்ந்து அடுத்தடுத்த படங்களிலும் துணை கதாபாத்திரத்தில் நடித்தார் எம்.ஜி.ஆர்.
பி.யு.சின்னப்பா மறைவு ! 
1950 ஆம் காலக்கட்டம்தான் எம்.ஜி.ஆர் தமிழ் சினிமாவில் கோலோச்சிய முக்கிய காலக்கட்டம் . தொடர்ந்து துணை கதாபாத்திரத்தில் நடித்தவர், ராஜகுமாரி திரைப்படத்திற்கு பிறகு  மருதநாட்டு இளவரசி என்னும் திரைப்படத்தில் மீண்டும் கதாநாயகனாக நடிக்க தொடங்கினார். அதே ஆண்டு மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் முதன் முறையாக மந்திர குமாரி திரைப்படமும் வெளியானது. மாஸ் காட்டும் இளவரசன் கதாபாத்திரத்தில் தோன்றிய எம்.ஜி.ஆரை ரசிகர்கள் கொண்டாடினர்.
சண்டைக்காட்சிகளை வித்தியாசமாக நடித்து அசத்தினார் எம்.ஜி.ஆர். சிறுவயதிலேயே போர் கலைகளை கற்றவருக்கு சொல்லியா தரவேண்டும்? 1951 ஆம் ஆண்டு பி.யு.சின்னப்பா திடீரென விபத்து ஒன்றில் காலமானார். தவிர்க்க முடியாத ஆளுமையாக விளங்கிய அவரின் வெற்றிடமும் எம்.ஜி.ஆர் பக்கம் இயக்குநர்களை படையெடுக்க வைத்தது. பி.யு சின்னப்பா இரண்டு கைகளால் வாள் வித்தையில் சிறந்து விளங்கினார், அவரை போலவே எம்.ஜி.ஆரும்  இரண்டு கைகளில் வாள்களை சுழற்றுவதில் கெட்டிக்காரர்.  சின்னப்பா ராஜபாட்டையாக வேடமிட்ட காலங்களில், அவருக்கு யுவதியாக நடித்தவர் எம்.ஜி.ஆர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கெத்து காட்டிய எம்.ஜி.ஆர் ! 
இருபெரும் ஆளுமைகளின் வெற்றிடத்தை கச்சிதமாக பயன்படுத்திய எம்.ஜி.ஆர், தகுந்த கதைகளில் , சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி கவனம் பெற்றார். 1954-ல் வெளிவந்த “மலைக்கள்ளன்”  திரைப்படத்திற்கு ஜனாதிபதி விருது கிடைத்தது. 150 நாட்கள் வெற்றிநடை போட்ட இந்தப் படம் எம்.ஜி.ஆரின் வெற்றிப் பாதையில் ஒரு மைல் கல்லாக அமைந்தது. அதன் பிறகு சிவாஜி கணேசனும் ரேஸில் கலந்துக்கொள்ள இருவரின் நடிப்பில் கூண்டுக்கிளி திரைப்படம் வெளியானது.

அலிபாபாவும், 40 திருடர்களும்:
அதுமட்டும்தான் இருவரும் சேர்ந்து நடித்த ஒரே படம். அந்த படத்தை தொடர்ந்து புகழ்பெற்ற இசை ஜாம்பவான்கள் விஸ்வநாதன் – ராமமூர்த்தி இசையில் குலேபகாவலி திரைப்படத்தில் நடித்தார் எம் .ஜி.ஆர்.  பின்னர் இந்திய சினிமாக்கள் மெல்ல மெல்ல கலர் திரைப்படங்களுக்கு மாற ,மார்டன் தியேட்டர்ஸ் தயாரிப்பில் , டி. ஆர். சுந்தரம் இயக்கத்தில் வெளியானது தமிழ் சினிமாவின் முதல் கலர் திரைப்படம் அலிபாபாவும் நாற்பது திருடர்களும். தமிழ் சினிமாவின் முதல் கலர் திரைப்படத்தில் நடித்த பெருமைக்கு சொந்தக்காரர் எம்.ஜி.ஆர்.  அந்த படத்தின் வெற்றியை நான் சொல்ல தேவையில்லை , பல மாயாஜாலங்களை கலரில் பார்த்த ரசிகர்கள் படத்தை கொண்டாடினர். 
எம்.ஜி.ஆருக்கு பல படங்களில் வில்லனாக நடித்த எம்.ஆர்.ராதா , நிஜ வாழ்க்கையிலும் எதிரியாகவே கருதப்பட்டார். பட விவகாரம் ஒன்றிற்காக எம்.ஜி.ஆர் வீட்டிற்கு பேச்சுவார்த்தை நடத்த சென்ற எம்.ஆர்.ராதா , எம்.ஜி.ஆரை துப்பாக்கியால் சுட்டதாகவும் தகவல்கள் உள்ளது. சிலர் படப்பிடிப்பின்போது துப்பாக்கியால் சுட்டதாகவும் கூறுகின்றனர். அங்கு என்னதான் நடந்தது என்பது இன்றளவும் புரியாத புதிராக உள்ளது. அதன் பிறகு எம்.ஜி.ஆரின் குரல் முற்றிலும் மாறுபட்ட ஒன்றாக மாறிப்போனது. அதையும் ஐகானாகவே உருவாக்கிச்சென்றார் எம்.ஜி.ஆர்
இயக்குநர் அவதாரம்! 
மதுரை வீரன், தாய்க்குப்பின் தாரம், சக்கரவர்த்தித் திருமகள், ராஜ ராஜன், புதுமைப்பித்தன், மகாதேவி,நாடோடி மன்னன் என பல வெற்றிப்படங்களை கொடுத்தார் எம்.ஜி.ஆர். தாய்க்கு பின் தாரம் திரைப்படத்தில் தேவர் ஃபிலிம்ஸுடன் முதன் முறையாக கூட்டணி  அமைத்தார் எம்.ஜி.ஆர். இந்த திரைப்படத்தில் காளையுடன் சண்டையிடும் காட்சியில் நடிக்க தயக்கம் காட்டினாராம் எம்.ஜி.ஆர் . இதனால் தயாரிப்பாளர் தேவருக்கும் , எம்.ஜி.ஆருக்கும் மன வருத்தம் ஏற்பட்டிருக்கிறது.
இதனால் கோபத்தில் இருந்த தேவர் , தனது அடுத்த படமான நீலமலைத் திருடனில் நடிகர் ரஞ்சனை நடிக்க வைத்திருக்கிறார். அந்த படத்தில் எம்.ஜி.ஆர் நடித்தால் எவ்வளவு வரவேற்பு கிடைக்குமோ அதே அளவிற்கு வரவேற்பு கிடைத்திருக்கிறது.  உடனே எம்.ஜி.ஆர் போட்டிக்கு  எம். ஜி. ஆர். பிக்சர்ஸ் என்னும் சொந்த தயாரிப்பு நிறுவனத்தை உருவாக்கி, தானே இயக்கி , இரட்டை வேடத்தில் நடித்து நாடோடி மன்னன்  என்னும் திரைப்படத்தை வெளியிட்டார். பாதி கலரில் எடுக்கப்பட்ட அந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடிக்க , படத்தின் வெற்றி ரஞ்சன் மீது இருந்த கிரேஸை குறைத்தே விட்டது. அதன் பிறகு ஒரு சில படங்களில் நடித்த ரஞ்சனின் படத்திற்கு வரவேற்பு கிடைக்காததால் , மனைவியுடன் அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார் ரஞ்சன்.
உச்ச நட்சத்திரம் :
கலைவாணர் மரணத்திற்கு பிறகு உச்ச நட்சத்திரமாக ஜொலித்தார் எம்.ஜி.ஆர். திருமணம், குடும்பம் என ஒரு புறம் குடும்ப பொறுப்புகளையும் கவனித்து வந்தார் எம்.ஜி.ஆர்.1966-ல் அன்பே வா, தாலி பாக்கியம் , நான் ஆனையிட்டால் என ஒரே ஆண்டில் 9 படங்கள் எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளியாகின. அந்த சமயத்தில்தான் சிறையில் இருந்த தியாகராஜ பாகவதர்  விடுதலை ஆனார்.  பெரிதாக சினிமாவில் அக்கறை செலுத்தாத பாகவதர், ஒரு சில படங்களில் நடித்தார். அந்த படங்கள் முன்பிருந்த ஹைப்பை அவருக்கு கொடுக்கவில்லை. அதன் பிறகு சினிமாவுக்கு முழுக்கு போட்டுவிட்டார். சினிமா ஒரு பக்கம் அரசியல் ஒரு பக்கம் என படு பிஸியாக இருந்தார் எம்.ஜி.ஆர்.
அரசியலும் சினிமாவும் !
இந்திய அரசியலில் முதன் முதலாவதாக முதல்வரான நடிகர் என்ற பெருமை எப்படி எம்.ஜி.ஆருக்கு சொந்தமோ. அதே போலத்தான் சினிமாவில் முதல் தேசிய விருது பெற்ற நடிகர் என்ற பெருமையும் எம்.ஜி.ஆரையே சேரும். 1972ஆம் ஆண்டில் ரிக்ஷாகாரன் படத்தில் நடித்ததற்காக எம்.ஜி.ஆருக்கு அந்த விருது கிடைத்தது. மக்களுடன் கூடுதல் பிணைப்பை ஏற்படுத்த எண்ணிய எம்.ஜி.ஆர் , சினிமாவோடு தனது அரசியல் பயணத்தையும் தொடங்கினார் . இதனால் காங்கிரஸ் கட்சியில் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்ட எம்ஜிஆர், கதர் ஆடை அணிவதை வழக்கமாக்கிக் கொண்டார். தேசிய அரசியலில் இருந்த எம்.ஜி.ஆரை திராவிட அரசியலுக்கு வர தூண்டியவர் மறைந்த முதல்வர் கருணாநிதி.

1953 இல் அண்ணா உருவாக்கிய தி.மு.க.வில் தன்னை இணைத்துக்கொண்டார் எம்.ஜி .ஆர். தொடர்ந்து படங்களில் நடித்து வந்த எம்.ஜி.ஆர் , பாடல்களிலும் வசனங்களிலும் அதிக கவனம் செலுத்த தொடங்கினார். ஒரு பாடல் உருவானால் அது எம்.ஜி.ஆரி நடப்பு சம்பவங்களை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டது. அதற்கு கண்ணதாசனின் வரிகளும் , எம்.எஸ்.வியின் இசையும் பெரிதும் உதவின.  புரட்சி தலைவர் என்ற அடை மொழியை சினிமாவில் உருவாக்கியது அவரது அரசியல் தீவிரம் 1962இல் தனது 50ஆவது வயதில் சட்ட மேலவை உறுப்பினராகவும், 1967இல் எம்எல்ஏ ஆகவும் இருந்தார் எம்ஜிஆர். 1969இல் திமுகவின் பொருளாளராக எம்ஜிஆர் நியமிக்கப்பட்டார். 1969இல் அண்ணாதுரை காலமானார்.  கட்சி இரண்டாக பிரிந்தது. அப்போதுதான் எம்.ஜி.ஆர் அ.தி.மு.கவை தொடங்கினார்.
எம்.ஜி.ஆரும்! ஜெயலலிதாவும்!
எம்.ஜி.ஆரை பற்றி எழுதப்போனால் , ஜெயலலிதாவையும் ….ஜெயலலிதாவை பற்றி எழுதப்போனால் எம்.ஜி.ஆரையும் தவிர்க்க முடியுமா என்ன ?… தீவிர அரசியல் ஒரு பக்கம் இருந்தாலும் , சினிமாவிலும் கவனம் செலுத்தினார் எம்.ஜி.ஆர். குறிப்பாக எம்.ஜி.ஆர் ஜெயலலிதா காம்போவை பார்ப்பதற்காகவே திரையரங்கில் கூட்டம் கூடுதலாக அலை மோதுமாம்.

தன்னை விட 30 வயது இளையவரான ஜெயலலிதாவுடன்  திரைக்கு பின்னால் எம்.ஜி.ஆர் பாராட்டிய நட்பு அவருக்கு நெருக்கமானவர்களுக்கும் , குடும்பத்தினருக்கும் பிடிக்கவில்லை என்றாலும் ஜெயலலிதாவின் சுறுசுறுப்பையும் , புத்திசாலித்தனத்தையும் வெகுவாக ரசித்த எம்.ஜி.ஆர் தனது கட்சியில் அமர்த்தி பல முக்கிய பொறுப்புகளை கொடுத்தார்.
அதன் பிறகு   தமிழகத்தில் மூன்று முறை முதலமைச்சராக இருந்ததார். ஆட்சி அமைத்த காலக்கட்டத்தில் எம்.ஜி.ஆர் கொண்டு வந்த நலத்திட்டங்கள் காலம் கடந்தும் தொடந்து வருகிறது. அதில் பிரதானமானது சத்துணவு திட்டம் . தீவிர அரசியலில் இருந்த காலக்கட்டத்தில் 1984 ஆம காலக்கட்டத்தில் சிறநீரக பாதிப்பு, நீரிழிவு போன்ற பிரச்சனைகளால் அவதியுற்றார் எம்.ஜி.ஆர். தொடர்ந்து ஓய்வில் இருந்த எம்.ஜி.ஆர் 1987ஆம் ஆண்டு டிசம்பர் 24 ஆம் தேதி சென்னையில் உள்ள ராமாவரம் தோட்ட இல்லத்தில் அவர் காலமானார். அவரின் இறப்பிற்கு பிறகு மத்திய அரசு பாரத ரத்னா விருது வழங்கி கவுரவித்தது.
எம்.ஜி.ஆர் என்னும் மருதூர் கோபாலன் மேனன் இராமச்சந்திரனின் பிறந்தநாள் இன்று!

Source link