ICC Women’s T20I Team Of The Year For 2023 Announced Deepti Sharma Features As Lone Indian | 2023ம் ஆண்டின் சிறந்த மகளிர் டி20 அணி! இந்திய வீராங்கனை ஒருவருக்குத்தான் இடம்

ஐ.சி.சி. ஆண்டுதோறும் சிறந்த டி20 அணி, சிறந்த ஒருநாள் போட்டி, சிறந்த டெஸ்ட் அணியை அறிவிப்பார்கள். மகளிர் அணி, ஆடவர் அணி இரண்டு அணிகளும் ஆண்டுதோறும் அறிவிக்கப்படுவார்கள். அந்த வகையில் கடந்தாண்டுக்கான சிறந்த மகளிர் டி20 அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறந்த மகளிர் டி20 அணி:
ஐ.சி.சி. அறிவித்துள்ள சிறந்த மகளிர் டி20 அணியின் விவரம்: சமரி அதபத்து (கேப்டன்) பெத் மூனி ( விக்கெட் கீப்பர்), லாரா வோல்வார்ட், ஹேலி மேத்யூஸ், நாத் ஸ்சிவியர் ப்ரூன்ட், அமெலியா கெர், எல்லீஸ் பெர்ரி, ஆஷ் கார்ட்னர், தீப்தி சர்மா, சோஃபி எக்லெஸ்டோன், மேகன் ஸ்கட்.
ஐ.சி.சி. அறிவித்துள்ள சிறந்த மகளிர் அணியில் இந்திய வீராங்கனை தீப்தி சர்மாவிற்கு மட்டுமே இடம் கிடைத்துள்ளது. 1997ம் ஆண்டு உத்தரபிரதேசம் ஆக்ராவில் பிறந்த தீப்தி சர்மா இடது கை பேட்டிங் மற்றும் இடது கை பந்துவீச்சாளரும் ஆவார். அவர் இதுவரை 4 டெஸ்ட் போட்டியில் ஆடி 4 அரைசதங்களுடன் 317 ரன்களும், 86 ஒருநாள் போட்டியில் ஆடி 1 சதம், 12 அரைசதங்களுடன் 1982 ரன்களும், 104 டி20 போட்டிகளில் ஆடி 2 அரைசதங்களுடன் 1015 ரன்கள் எடுத்துள்ளார்.
தீப்தி சர்மா:
பேட்டிங் மட்டுமின்றி பந்துவீச்சிலும் அசத்தும் தீப்தி சர்மா டெஸ்ட் போட்டிகளில் 16 விக்கெட்டுகளையும், ஒருநாள் போட்டிகளில் 100 விக்கெட்டுகளையும், டி20 போட்டியில் 113 விக்கெட்டுகளையும் கைப்பற்றிய வீராங்கனை என்பது குறிப்பிடத்தக்கது. ஐ.சி.சி. அறிவித்த சிறந்த மகளிர் டி20 அணியில் வேறு எந்த முன்னணி வீராங்கனைகளுக்கும் அணியில் இடம் கிடைக்கவில்லை.
கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த சமரி அதபத்து மகளிர் டி20 உலகக்கோப்பையில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக 50 பந்துகளில் 68 ரன்கள் அடித்து அசத்தினார். அவர் 2023ம் ஆண்டு மட்டும் டி20 போட்டிகளில் 470 ரன்கள் விளாசியுள்ளார். ஸ்ட்ரைக் ரேட் 130.91 ஆக வைத்துள்ளார்.
வீராங்கனைகள்:
ஆஸ்திரேலியாவின் மிகச்சிறந்த கிரிக்கெட் வீராங்கனையான பெத் மூனிக்கும் சிறந்த அணியில் இடம்கிடைத்துள்ளது. அவர் உலகக்கோப்பை டி20யில் மட்டும் 410 ரன்கள் விளாசியுள்ளார். அணியில் இடம்பிடித்துள்ள தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த லாரா வோல்வார்ட்த் கடந்த டி20 உலகக்கோப்பையில் 586 ரன்களை விளாசினார். கடந்த  ஆண்டு டி20 உலகக்கோப்பையில் 700 ரன்களை ஹேலி மேத்யூஸ், 19 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தியுள்ளார்.
சிறந்த சுழற்பந்துவீச்சு வீராங்கனையான அமெலியா கெர் 2023ம் ஆண்டில் அற்புதமாக ஆடியுள்ளார். மேலும், சோபி எக்லெஸ்டன் மற்றும்  ஆஷ் கார்ட்னர் ஆகியோரும் தத்தம் நாட்டு அணிகளுக்காக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஐ.சி.சி. அறிவித்த சிறந்த மகளிர் டி20 அணியில் இடம்பிடித்த ஒரே இந்திய வீராங்கனையான தீப்தி சர்மாவிற்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
மேலும் படிக்க: IND vs ENG: இந்திய மண்ணில் 12 ஆண்டுகால வறட்சியை முறியடிக்குமா இங்கிலாந்து..? புள்ளிவிவரங்கள் சொல்வது என்ன?
மேலும் படிக்க: Cheteshwar Pujara: முதல் தர போட்டியில் 20,000 ரன்கள்.. கவாஸ்கர், சச்சின், டிராவிட்டின் சிறப்பு கிளப்பில் நுழைந்த புஜாரா!

Source link