As per Bengaluru special court orders former cm Jayalalithaa’s gold and diamond jewelleries coming to Tamil Nadu | Jayalalitha Assets: தமிழகம் வருகிறது ஜெயலலிதாவின் தங்க, வெள்ளி நகைகள்


Jayalalitha Assets: மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல்  செய்யப்பட்ட, தங்க மற்றும் வைரக் நகைகள் 6 பெட்டகங்களில் தமிழகம் கொண்டு வரப்பட உள்ளன.
ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு:
சொத்து குவிப்பு வழக்கில் மறைந்த முதலமைச்சர்  ஜெயலலிதா, சசிகலா உள்பட 4 பேருக்கு, கடந்த 2014ம் ஆண்டு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனையும் 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டது. மேல்முறையீட்டு மனுவின் விசாரணையின் முடிவில் ஜெயலலிதா மரணம் அடைந்த நிலையில், குற்றம்சாட்டப்பட்ட மற்ற மூவரை குற்றவாளி என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.  இந்த வழக்கு விசாரணைக்கான கர்நாடக அரசின் செலவினங்களுக்காக, ஜெயலலிதாவிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பொருட்களை ஏலம் விட வேண்டும் என பொதுநல வழக்கு தொடரப்பட்டது.
ஜெயலலிதா சொத்துகளை ஏலம் விட உத்தரவு:
மனுவை விசாரித்த கர்நாடக முதன்மை மாநகர சிவில் மற்றும் செசன்ஸ் நீதிமன்றம், ஜெயலலிதாவின் அனைத்து சொத்துக்களையும் ஏலம் விட்டு நடவடிக்கை எடுக்கும்படி கடந்த ஜனவரி மாதம் உத்தரவிட்டது. இந்த பணிகளை மேற்கொள்வதற்காக சிறப்பு வழக்கறிஞரையும் கடந்த ஆண்டு கர்நாடக அரசு நியமித்து இருந்தது. இதனிடையே, ஜெயலலிதாவின் சொத்துகளை ஏலம் விடுவது தொடர்பான மனு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த மாதம் விசாரணைக்கு வந்தது.
சிறப்பு நீதிமன்றம் உத்தரவு:
விசாரணையின் முடிவில், “நகைகளை ஏலம் விடுவதற்கு பதிலாக, தமிழக அரசின் உள்துறை மூலம் ஒப்படைத்து தமிழகத்திற்கு மாற்றுவது நல்லது. செயலாளருக்கு நிகாரன அதிகாரிகள் காவலர்களுடன் வந்து நகைகளைப் பெற்றுக்கொள்ளலாம். கர்நாடகாவில் நடத்தப்பட்ட வழக்கு விசாரணை செலவுக்காக ரூ.5 கோடியை கர்நாடகா அரசுக்கு வழங்க வேண்டும். சென்னையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கிக் கிளையில் ஜெயலலிதா தொடர்பான நிரந்தர வைப்புத் தொகை கணக்கிலிருந்து இந்த பணம் செலுத்தப்பட வேண்டும்” என பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
தமிழகம் வரும் ஜெயலலலிதாவின் நகைகள்:
நீதிமன்ற தீர்ப்பின்படி, மார்ச் 6 அல்லது 7ம் தேதி தமிழக அதிகாரிகள் பெங்களூருவிற்கு நேரில் சென்று,  28 கிலோ தங்கம், வைர நகைகள், 800 கிலோ வெள்ளி நகைகளை 6 பெட்டகங்களில் தமிழகத்திற்கு கொண்டு வர உள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து, அந்த நகைகள் ஏலத்தில் விடப்படுமா இல்லையா என்பது விரைவில் அரசு தரப்பில் தெரிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக சொத்துகுவிப்பு வழக்கில் ஜெயலலிதாவிடமிருந்து, வைரம், முத்து, பவளம் உள்ளிட்ட விலை உயர்ந்த கற்கள், தங்க நகைகள், 800 கிலோ வெள்ளி பொருட்கள், 11 ஆயிரத்து 344 விலை உயர்ந்த புடவைகள், 44 குளிர்சாதன இயந்திரங்கள், 91 கைக்கடிகாரங்கள், 27 சுவர் கடிகாரங்கள், 86 மின்விசிறிகள், 146 அலங்கார சேர்கள், 81 தொங்கு விளக்குகள், 20 சோபா செட்கள், 250 சால்வைகள், 12 குளிர்பதன பெட்டிகள், 10 தொலைக்காட்சி பெட்டிகள், 8 சிவிஆர் கருவிகள், 140 வீடியோ கேசட்டுகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தகக்து.

மேலும் காண

Source link