Femi9 Nayanthara Opens Up Sanitary Napkins And Awareness | Femi9 Nayanthara : ”மாதவிடாய் பற்றி பேசுவதே பெரிய மாற்றம்”

Femi9 Nayanthara : ”மாதவிடாய்க்கு பயன்படுத்தும் நாப்கின் பற்றி பொதுவெளியில் பேசுவதையே பெரிய மாற்றமாக பார்க்கிறேன்” என நடிகை நயன்தாரா கூறியுள்ளார்.
 
தமிழ் சினிமாவில் ஐயா படம் மூலம் அறிமுகமான நயன்தாரா ரஜினி, விஜய், அஜித் என முன்னணி ஹீரோக்களுடன் நடித்து பிரபலமானார். தொடர்ந்து தனித்துவமான படங்களிலும், ஆக்‌ஷன் காட்சிகளிலும் நடித்த நயன்தாரா தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அழைக்கப்படுகிறார். கடந்த ஆண்டு ஷாருக்கானுடன் இணைந்து நயன்தாரா நடிப்பில் வெளிவந்த ஜவான் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.1000 கோடியை தாண்டி வசூலில் சாதனை படைத்தது.
 
அண்மையில் நயன்தாரா நடிப்பில் வெளிவந்த அன்னபூரணி படம் விமர்சனம் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. நடிப்பில் மட்டுமில்லாமல் தொழில்துறையிலும் நயன்தாரா கலக்கி வருகிறார். அழகு சாதன பொருட்களை 9ஸ்கின் என்ற நிறுவனத்தை கடந்த ஆண்டு தொடங்கினார். அதன் தொடர்ச்சியாக ஃபெமி 9  (Femi 9) சானிட்டரி நாப்கின் விற்பனை நிறுவனத்தையும்   நயன்தாரா தொடங்கியுள்ளார். தனது நிறுவனத்தின் பொருட்களின் விளம்பரங்களுக்கு நயன்தாராவே மாடலாகவும் நடித்து வருகிறார். 
 
இந்த நிலையில் சேலத்தில் நடந்த தனியார் கல்லூரி விழாவில் பங்கேற்ற நயன்தாரா பெண்களின் மாதவிடாய் குறித்தும், சானிட்டரி நாப்கின் குறித்தும் பேசியுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், “ஃபெமி9 சானிட்டரி நாப்கின் நிறுவனத்தை தொடங்கி இருப்பதை சுயநலமா இல்லையான்னு சிலர் கேட்கறாங்க. இதில் சுயநலம் இருக்குதான். ஆனால், அந்த சுயநலத்திற்கு பின்னால் இருக்கும் பொதுநலமும் அதை நியாயப்படுத்துகிறது.  நாங்கள் சமூகத்தின் மீது அக்கறை கொண்டு இருக்க விரும்புகிறோம். பெண்கள் அவர்களுக்கு தேவையானதை வாங்க அப்பாவிடமோ அல்லது அண்ணனிடமோ காசு கேட்க வேண்டிய அவசியம் இல்லை. அவர்களே சுயமாக சம்பாதிக்க தொடங்கி விட்டனர்.
 
மாதவிடாய் குறித்த விழிப்புணர்வு நம் நாட்டில் உள்ள ஒவ்வொரு பெண்ணையும் சென்று சேரவில்லை என்று நினைக்கிறேன். இதற்கு முன்னாடி எந்த ஒரு சானிட்டரி நாப்கினுடைய பெயரையும் நாம் சொன்னது கிடையாது. ஆனால் இன்று ஒரு மேடையில் இத்தனை ஆண்கள் மற்றும் பெண்களின் முன்னிலையில் சானிட்டரி நாப்கின் குறித்து நாம் பேசுகிறோம். இதுவே பெரிய மாற்றம் தான். ஃபெமி 9 நிறுவனத்தின் நோக்கம் மாதவிடாய் பற்றிய விழிப்புணர்வு நம் நாட்டில் உள்ள ஒவ்வொரு பெண்ணுக்கும் போய் சேர வேண்டும்” என்று கூறியுள்ளார். 
 

Source link