‘முன்பே வா என் அன்பே வா…’ என தேன் போல இனிமையான குரலால் ஒட்டுமொத்த இசை ரசிகர்களையும் கவர்ந்தவர் பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷல். இந்த இசை மகளின் 39வது பிறந்தநாள் இன்று.
ஆரம்ப கால பயணம் :
மேற்கு வங்க மாநிலத்தில் பிறந்த ஸ்ரேயா கோஷலுக்கு 4 வயது முதல் இசை மீது மிகுந்த ஆர்வம் இருந்ததால் அவரின் தயார் ஷர்மிஸ்தாவே பாடல் பயிற்சிகளை கற்று கொடுக்க துவங்கினார். ஆஸ்தான குருவாக இருந்த ஷ்ரேயாவின் அம்மா ஷர்மிஸ்தா ஒத்திகைகளில் உதவுவதோடு மகளின் வெற்றிப்பயணத்தில் உறுதுணையாய் இருந்தார். இந்துஸ்தானி கிளாசிக்கல் இசையிலும் முறையான பயிற்சி பெற்ற ஸ்ரேயா கோஷல் அகில இந்திய அளவில் நடைபெற்ற இசை போட்டியில் கலந்து கொண்டு முதல் முறையாய் வெற்றியை ருசித்தார்.
முதல் வாய்ப்பே அசத்தல் :
2000ம் ஆண்டு ஜீ தொலைக்காட்சியில் நடைபெற்ற ‘சரிகமப’ இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு டைட்டில் வின்னராக வெற்றி பெற்றார். அந்நிகழ்ச்சி மூலம் சஞ்சய் லீலா பன்சாலியின் தாயார் ஸ்ரேயாவின் இனிமையான குரலால் ஈர்க்கப்பட்டு அவரை சிபாரிசு செய்ததன் மூலம் 2002ம் ஆண்டு வெளியான பன்சாலியின் ‘தேவதாஸ்’ படத்திலேயே பாடகியாக அறிமுகப்படுத்தினார். முதல் படத்திலேயே ஐந்து பாடல்களையும் பாடிய பெருமை ஸ்ரேயா கோஷலையே சேரும். அதே போல முதல் பாடலுக்காக தேசிய விருதையும் பெற்றார். அவர் ஒத்திகை பார்த்ததே ஒரிஜினல் பாடலாக பதியப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
முதல் தமிழ் பாடல் :
2015ம் ஆண்டு தனது நீண்ட கால நண்பர் ஷிலாதித்யா முகோபாத்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதியினருக்கு இரண்டு வயதில் ஒரு மகன் இருக்கிறார். 2002ம் ஆண்டு வசந்தபாலன் இயக்கத்தில், இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா இசையில் வெளியான ‘ஆல்பம்’ படத்தில் இடம் பெற்ற ‘செல்லமே செல்லம்’ என்ற பாடலின் மூலம் தான் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், யுவன் சங்கர் ராஜா,கார்த்திக் ராஜா, கீரவாணி, தேவா, ஹாரிஸ் ஜெயராஜ், தேவி ஸ்ரீ பிரசாத், ஜி.வி.பிரகாஷ், விஜய் ஆண்டனி உள்ளிட்ட அனைத்து இசையமைப்பாளர்களின் இசைக்கும் குரல் கொடுத்துள்ளார்.
எக்கச்சக்கமான விருதுகள் :
தமிழ் மட்டுமின்றி ஹிந்தி, தெலுங்கு மலையாளம், கன்னடம், பெங்காலி என பல மொழிகளில் எக்கச்சக்கமான பாடல்களை பாடியுள்ளார். தேவதாஸ் (இந்தி), பாஹலி(இந்தி), ஜப் வி மேட் (இந்தி), ஜோக்வா(மராத்தி), அந்தஹீன் (பெங்காலி) உள்ளிட்ட 5 படங்களுக்கு தேசிய விருது வென்றார். மேலும் ஃபிலிம்பேர் விருது, தமிழக அரசு விருது, அப்ஸரா விருது, குளோபல் விருது, ஏசியாநெட் விருது உள்ளிட்ட ஏராளமான விருதுகளை தன்னுடைய 40 வயதுக்குள் பெற்று சாதனை படைத்துள்ளார் ஸ்ரேயா கோஷல். 90’s கிட்ஸ்களின் ஃபேவரட் பாடகிகளில் நிச்சயம் ஒரு முக்கியமான இடத்தை பிடித்துள்ளார் ஸ்ரேயா கோஷல். இசை துறையில் சாதித்த எத்தனையோ சாதனையாளர்கள் உள்ளனர். மற்றவர்களை தங்களுடைய குரலால் வசீகரிக்க கூடிய உன்னதமான இந்த கலைஞர்கள் அனைவருமே பூமிக்கு கிடைத்த மிகப்பெரிய வரம்.
மேலும் காண