பல்வேறு தொழில்முனைவோர்களின் பன்முகத்தன்மையை வெளிப்படுத்தும் வகையில், இந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில், The Startup TN Pavillion 8000 சதுர அடியில் 23 வெவ்வேறு துறைகளின் 41 அரங்குகளை அமைத்துள்ளது. இதில் முழுக்க முழுக்க பெண்களால் நடத்தப்படும் 10 ஸ்டார்ட்அப்களும் அடங்கும். மேலும் 20 அரங்குகள் அரசின் அங்கீகாரம் பெற்றவை.
இது தமிழ்நாடு உள்கட்டமைப்பு நிதி மேலாண்மை கழகத்தின் ஆதரவுடன் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக தமிழ்நாடு ஆதி திராவிட/ பழங்குடியின மானிய நிதி மற்றும் தமிழ்நாடு தொடக்க விதை நிதி (TANSEED) ஆகியவற்றின் கீழ் பயனடைந்த அரங்குகளும் இதில் இடம்பெற்றுள்ளன.
இந்த அரங்குகள் முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில் 8000 சதுர அடியில் அமைக்கப்பட்டு, 50 -க்கும் மேற்பட்ட அமர்வுகள் மூலம், முதலீட்டு வாய்ப்புகளைத் தேடும் நம்பிக்கைக்குரிய 200 முதலீட்டாளர்களை ஈர்க்க திட்டமிட்டுள்ளது. கூடுதலாக, வணிக சந்திப்புகள் மூலம் கூட்டணி வர்த்தகங்களை ஊக்கப்படுத்தும் திட்டத்தோடும் செயல்படுகிறது. குறிப்பாக 30 புதுமையான தயாரிப்புகள் இந்த அரங்கில் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.
பார்வையாளர்கள், முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில் ஒவ்வொரு அரங்கிலும் சிறப்பு பேச்சாளராக வல்லுனர்கள் உரைகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. யுசி பெர்க்லி, சென்டர் ஃபார் கார்ப்பரேட் இன்னோவேஷனின் நிர்வாக இயக்குனர் பேராசிரியர் சாலமன் டார்வின், தலித் இந்தியன் சேம்பர் ஆஃப் காமெர்சின் நிறுவன தலைவர் மிலிந்த் காம்ப்ளே, ஸ்டார்ட் அப் ஜெனோம் நிறுவனர் மார்க் பென்செல், தைரோகேர் நிறுவனத்தின் நிறுவனர் ஆரோக்கியசாமி வேலுமணி உள்ளிட்டோர் இந்த அரங்குகளில் உரையாற்ற உள்ள முக்கியமான நபர்கள் ஆவர்.
சென்னை வர்த்தக மையத்தில் இரண்டு நாட்கள் நடைபெறும் ‘உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024’ – ஐ தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் இலக்கினை எட்டுவதற்கான செயல்திட்ட அறிக்கை, தமிழ்நாடு குறை கடத்தி மற்றும் மேம்பட்ட மின்னணுக் கொள்கை 2024-ஐ முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார். பல்வேறு நிறுவனங்களின் முடிவுற்ற பணிகளைத் தொடங்கி வைத்தும், முன்னணி பன்னாட்டு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டும் புதிய திட்டப் பணிகளுக்கும் முதலமைச்சர் அடிக்கல் நாட்டியது குறிப்பிடத்தக்கது.