சென்னை வேளச்சேரி மேம்பாலத்தில் இருந்து பெண் ஒருவர் குதித்து தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வேளச்சேரி விஜயநகர் பேருந்து நிலையத்தில் இரண்டடுக்கு மேம்பாலம் உள்ளது. இங்கு, காதல் ஜோடிகள், ஆண்கள், பெண்கள் என பல்வேறு தரப்பினர், மேம்பாலத்தில் நின்று பொழுதை கழிப்பது வழக்கம்.
இந்நிலையில், இந்த மேம்பாலத்தின் கீழ் பெண் ஒருவர் ரத்த வெள்ளத்தில் கிடப்பதை பார்த்த அப்பகுதி மக்கள், அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அந்த பெண் உயிரிழந்தார்.
இதையடுத்து தகவலறிந்து சென்று உடலை கைப்பற்றி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, உயிரிழந்தவர் செம்பாக்கத்தை சேர்ந்த சுதா(30) என்று தெரிய வந்தது.
இவர் இருசக்கர வாகனத்தில் தரமணியில் இருந்து வந்து, வேளச்சேரி மேம்பாலத்தின் ஏறி, ஓரமாக நிறுத்திவிட்டு, தலைக்கவசம் மற்றும் செருப்பை கழட்டி வைத்துவிட்டு குதித்துள்ளார். 40 அடி உயரத்தில் இருந்து குதித்ததால் படுகாயமடைந்து உயிரிழந்துள்ளார்.
சுதாவுக்கு கடந்த 2020ம் ஆண்டு நன்மங்கலத்தை சேர்ந்த கார்த்திக்(33) என்பவருடன் திருமணம் நடந்து,3 வயதில் மகன் உள்ளார். அதே நேரத்தில், இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு 3 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வந்ததாக தெரிகிறது.
இதனால், டிசம்பர் மாதம் விவாகரத்து கேட்டு கார்த்திக் வழக்கு தாக்கல் செய்ததாகவும், ஆனால், சுதாவுக்கு விவாகரத்து வழங்க விருப்பம் இல்லை என்று கூறியதாகவும் கூறப்படுகிறது.
சில நாட்களுக்கு முன்பு நன்மங்கலத்திற்கு சென்று சுதா பேச்சுவார்த்தை நடத்தியபோது, நீதிமன்றத்தின் மூலம் தீர்வு காணலாம் என்று கார்த்திக் கூறியதாக தெரிகிறது.
இதனால் மனமுடைந்து காணப்பட்ட சுதா, மேம்பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதே நேரத்தில், கோட்டாட்சியர் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.