தமிழக அரசின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்த உச்சநீதிமன்றம்…

வெளி மாநில ஆம்னி பேருந்துகளை இயக்குவதை தடுக்க கூடாது என தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவிட்டுள்ளது.

வெளி மாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட ஆம்னி பேருந்துகள் அதிக அளவில் தமிழ்நாட்டில் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், அவ்வாறு இயக்கப்படும் பேருந்துகளை தமிழ்நாடு பதிவெண்ணுக்கு மாற்ற வேண்டும் என்று அவகாசம் விதித்த தமிழ்நாடு அரசு, அவகாசம் முடிந்த பின்னர், பேருந்துகள் இயக்க அனுமதிக்கப்படாது என் திட்டவட்டமாக அறிவித்திருந்த‍து.

இதுகுறித்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியதோடு, தமிழ்நாட்டு பதிவெண்ணுக்கு மாற்றுவதற்கான பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்த‍னர். இந்த தடை உத்தரவால், ஆம்னி பேருந்துகளின் உரிமையாளர்கள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்படுவதோடு, தொழிலாளர்களும் கடும் பாதிக்கப்படுவார்கள் என்று ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் சார்பில் அரசுக்கு தெரிவிக்கப்பட்டிருந்த‍து.

அதே நேரத்தில், தமிழ்நாடு அரசின் இந்த உத்தரவுக்கு எதிராக வெளிநாடு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கே.ஆர்.சுரேஷ்குமார் உள்ளிட்டோர், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவை, உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.வி. நாகரத்னா, உஜ்ஜல் புயன் ஆகியோர் அடங்கிய கோடை விடுமுறை அமர்வு  விசாரித்தது.

அப்போது, மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்குரைஞர், வெளி மாநில ஆம்னி பேருந்துகளை தமிழகத்தில் பதிவு செய்யாமல் இயக்க விதிக்கப்பட்டுள்ள தடையால், வெளி மாநில ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக வாதிட்டார்.

இந்த வாத‍த்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், வெளிமாநில ஆம்னி பேருந்துகளை இயக்குவதை தடுக்க‍க் கூடாது என்று, இடைக்கால உத்தரவை பிறப்பித்து உத்தரவிட்டனர். மேலும், இந்த மனு தொடர்பாக, தமிழ்நாடு அரசு பதிலளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.