திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொலை செய்யப்பட்ட செந்தில்குமார் மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்த மோகன், புஷ்பவதி, ரத்தினம்மாள் ஆகிய நான்கு பேரும் பல்லடம் அருகே உள்ள கள்ளக்கிணறு என்ற கிராமத்தில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்றிரவு அங்கு மது அருந்த வந்த வெங்கடேசன் என்பவரும் மற்றும் அவரது கூட்டாளிகள் இரண்டு பேரும் ‘இங்கு ஏன் மது அருந்துகிறீர்கள்’ என்று கேட்ட செந்தில்குமார் மற்றும் அவரது குடும்பத்தினரை வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது நான்கு பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன.
இந்த மருத்துவமனையில் உள்ள குளிரூட்டும் பெட்டி பழுதடைந்து ஏழு மாதங்கள் ஆகியும் சரிசெய்யப்படாததால் நேற்று இரவு உடற்கூறாய்வு செய்யப்படவில்லை.
இந்நிலையில் தனியாரிடம் இருந்து குளிரூட்டும் பெட்டி வாங்கப்பட்டு அதில் உடல்கள் வைக்கப்பட்டுள்ளன.
இதனையடுத்து இன்று உடற்கூறாய்வு செய்யப்பட உள்ளது. இந்த கொலை தொடர்பாக கோவை மேற்கு மண்டல ஐ.ஜி பவானீஸ்வரி நேரில் விசாரணை மேற்கொண்டார்.
மேலும் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் தடுக்க நாமக்கல், கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் இருந்து 700 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பல்லடம் அரசு மருத்துவமனை மற்றும் பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே கொலையாளிகள் மூன்று பேரையும் கைது செய்தால் மட்டுமே இறந்தவர்களின் உடல்களை வாங்குவோம் என அவர்களது உறவினர்கள் தெரிவித்து வருகின்றனர்.