இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது மற்றும் நான்காவது போட்டிகளிலும் விராட் கோலி விளையாடுவது சந்தேகம்தான். அதன்படி, ராஜ்கோட் மற்றும் ராஞ்சியில் நடக்கும் போட்டிகளில் விராட் கோலி களமிறங்கமாட்டார் என தெரிகிறது.
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் இரண்டு போட்டிகளில் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி விளையாடவில்லை. தனிப்பட்ட காரணங்களுக்காக அணி நிர்வாகத்திடம் அனுமதி கேட்டிருந்தார். இந்தநிலையில், அவரது மனைவி அனுஷ்கா சர்மா இரண்டாவது முறையாக கர்ப்பம் தரித்துள்ளார் என்று கூறப்படுகிறது. இந்த தகவலை ஏபி டி வில்லியர்ஸ் தெரிவித்ததை தொடர்ந்து சமூக வலைதளங்களில் வைரலானது.
பிடிஐ செய்தி அறிக்கையின்படி, விராட் கோலி ஐந்தாவது டெஸ்டிலும் (மார்ச் 7-11) விளையாடமாட்டார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், “ குடும்ப விஷயங்கள் என்று வரும்போது, கிரிக்கெட் வீரருக்கு ஆதரவாக உறுதியாக நிற்கிறது. அவர் இந்திய அணிக்கு எப்போது திரும்ப நினைக்கிறாரோ, அப்போது திரும்பி வரட்டும். இதை பிசிசிஐ மீண்டும் மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளது. இது விராட் கோலியின் தனிப்பட்ட முடிவாகும். தற்போது அவர் இந்த தொடரில் முழுவதுமாக விளையாட வாய்ப்பில்லை” என தெரிவித்தார்.
விராட் கோலி இல்லாதது இந்திய அணிக்கு பெரிய அடி:
இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி விளையாடாதது இந்திய அணிக்கு பெரிய அடி. விராட் கோலி சமீபத்தில் நடைபெற்ற உலகக் கோப்பையில் அதிக ரன்கள் எடுத்த வீரர் சாதனையை முறியடித்தார். இதன் பிறகு, தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்தின் போது கூட, விராட் கோலி சிறப்பாக செயல்பட்டு நிறைய ரன்களை குவித்தார். தற்போது இந்திய அணி மிடில் ஆர்டரில் விராட் கோலி இல்லாமல் தவித்து வருகிறது. விராட் கோலியைத் தவிர, 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அனுபவம் உள்ள எந்த வீரரும் அணியில் இல்லை.
விரைவில் அணி அறிவிப்பா..?
இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டது. பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணிக்கி எதிராக இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரை 1-1 என சமன் செய்தது. தற்போது இரு அணிகளும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற இரு அணிகளும் கடுமையாக போராடும். இரு அணிகள் மோதும் இந்த போட்டி ராஜ்கோட்டில் பிப்ரவரி 15ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரின் மீதமுள்ள மூன்று போட்டிகளுக்கான அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
யார் யார் அணியில் மீண்டும் களமிறங்குவார்கள்..?
டெஸ்ட் போட்டியில் ரவீந்திர ஜடேஜா மற்றும் கே.எல்.ராகுல் திரும்பலாம் என தெரிகிறது. காயம் காரணமாக இருவரும் கடைசி போட்டியில் விளையாடவில்லை. தற்போது, இரு வீரர்களும் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் (என்சிஏ) பிசிசிஐ மருத்துவக் குழுவின் மேற்பார்வையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதே சமயம் விசாகப்பட்டினத்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் ஓய்வு அளிக்கப்பட்ட வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜூம் மீண்டும் களமிறங்கலாம்.
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முகமது சிராஜ் களமிறங்கினார். ஆனால், இங்கிலாந்துக்கு எதிரான இரண்டு இன்னிங்ஸிலும் அவர் விக்கெட் எதுவும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.