Rahul Gandhi announces 5 guarantees for youth during Bharat Jodo Nyay Yatra ahead of Lok Sabha election 2024


இந்திய ஒற்றுமை நடைபயணத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, இரண்டாவது யாத்திரையை மேற்கொண்டு வருகிறார் ராகுல் காந்தி. அதன்படி, மணிப்பூரில் தொடங்கப்பட்ட இந்திய ஒற்றுமை நீதி பயணம், நாகாலாந்து வழியாக அஸ்ஸாம், பிகார், மேற்குவங்கம், ஜார்க்கண்ட், ஒடிசா, சத்தீஸ்கர், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் மாநிலங்களை தொடர்ந்து ராஜஸ்தானை அடைந்துள்ளது.
“அரசு பணியிடங்கள் நிரப்பப்படும்”
இன்னும் ஒரு சில நாள்களில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படிப்பட்ட சூழலில், பாஜகவின் கோட்டையாக கருதப்படும் வட மாநிலங்களில் அக்கட்சிக்கு சவால் விடும் வகையில் ராகுல் காந்தி யாத்திரைக்கு காங்கிரஸ் அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது.  
இந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் யாத்திரைக்கு நடுவே மக்கள் மத்தியில் பேசிய ராகுல் காந்தி, இளைஞர்களுக்கு 5 முக்கிய வாக்குறுதிகளை அளித்தார். காலியாக உள்ள அரசு பணியிடங்கள் நிரப்பப்படும் என வாக்குறுதி அளித்த அவர்,  “நாட்டில் 30 லட்சம் அரசுப் பணியிடங்கள் காலியாக உள்ளன. ஆட்சிக்கு வந்த பிறகு, முன்னுரிமை அடிப்படையில், 30 லட்சம் வேலைகளை வழங்குவோம். இந்தியாவின் அனைத்து இளைஞர்களுக்கும் தொழிற்பயிற்சி வழங்கப்படும். அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் பட்டதாரிகள் மற்றும் டிப்ளமோ படித்தவர்களுக்கு இந்தப் பயிற்சி அளிக்கப்படும். 100 நாள் வேலைதிட்டம் போன்றே இந்தப் பயிற்சியை ஒரு சட்டமாக்குவோம். இந்த தொழிற்பயிற்சியின் கீழ், இளைஞர்களுக்கு ஓராண்டு பயிற்சி அளிக்கப்படும். மேலும் பயிற்சியின் போது ரூ.1 லட்சம் உதவித்தொகை வழங்கப்படும்” என்றார். 
இளைஞர்களுக்கு தொழிற்பயிற்சி:
அரசு பணியாளர் தேர்வாணையத்தின் கேள்வித்தாள்கள் தேர்வுக்கு முன்பே கசியவிடப்படுவதை தடுக்க கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என வாக்குறுதி அளித்த ராகுல் காந்தி, “இதைத் தடுக்க, காங்கிரஸ் சட்டம் கொண்டு வரும். போட்டித் தேர்வுகளை அரசே நடத்தும். அவுட்சோர்சிங் செய்யாது” என்றார்.
ஆன்லைன் இயங்குதள தொழிலாளர்கள் குறித்து பேசிய ராகுல் காந்தி, “ஆன்லைன் இயங்குதள தொழிலாளர்களின் சமூக பாதுகாப்பு தொடர்பாக நாடு முழுவதும் சட்டம் இயற்றப்படும். சிறு தொழில்களைத் தொடங்கத் தயாராக இருக்கும் இளைஞர்களுக்கு ஆதரவாக ரூ.5000 கோடியில் ஸ்டார்ட்அப் ஃபண்ட் ஒன்றை உருவாக்குவோம். நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் இந்த ஸ்டார்ட்அப் எடுத்து செல்லப்படும்” என்றார்.
தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி, “எங்கள் தேர்தல் அறிக்கையில், குறைந்தபட்ச ஆதரவு விலையை சட்டப்பூர்வ உத்தரவாதமாக அளித்துள்ளோம். தலித்கள், பழங்குடிகள், ஓபிசிகள் மற்றும் சிறுபான்மையினர் இந்தியாவின் மக்கள் தொகையில் தோராயமாக 90 சதவிகிதம் உள்ளனர். 
ஆனால், பல்வேறு நிறுவனங்களிலும் பட்ஜெட்டிலும் பார்த்தால் அவர்களுக்கு போதுமான பங்கு தரப்படவில்லை. குடியரசுத் தலைவர் ஒரு ஆதிவாசி. ராமர் கோயில் திறக்கப்பட்டபோது அவர் முகத்தை தொலைக்காட்சியில் பார்த்தீர்களா? இல்லை. ஏனென்றால் அவர் ஒரு ஆதிவாசி. ஜனாதிபதியாக இருக்கலாம். ஆனால் ராமர் கோவிலுக்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள்” என்றார்.
 

மேலும் காண

Source link