Tamil Nadu govt Moves Supreme Court Seeking To Direct Union To Release Disaster Relief Funds


மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் மத்திய அரசு நடந்து கொள்வதாக எதிர்க்கட்சிகள் கடும் குற்றச்சாட்டை சுமத்தி வருகின்றன. குறிப்பாக, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு தேவையான நிதி உதவியை வழங்குவதில்லை என மத்திய அரசு மீது புகார் எழுந்த வண்ணம் உள்ளது.
உச்ச நீதிமன்றத்தை நாடும் மாநில அரசுகள்:
கடன் வழங்கும் அளவை உயர்த்தக் கோரி கேரள அரசும் வறட்சி நிவாரண தொகை வழங்கக் கோரி கர்நாடக அரசும் மத்திய அரசுக்கு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அந்த வரிசையில் தற்போது தமிழ்நாடு அரசும் இணைந்துள்ளது. 
கடந்தாண்டு டிசம்பர் மாதம், மிக்ஜாம் புயலால் தமிழ்நாட்டில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டது. மிக்ஜாம் புயலை தொடர்ந்து, தென் தமிழ்நாட்டில் வரலாறு காணாத கனமழை பெய்தது. எனவே, மிக்ஜாம் புயல் பாதிப்பால் ஏற்பட்ட சேதத்திற்கு 19,692.69 கோடி ரூபாயும் தென் தமிழ்நாட்டில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புக்கு நிவாரணமாக 18,214.52 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என மத்திய அரசிடம் தமிழ்நாடு அரசு கோரிக்கை விடுத்தது.
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கடந்தாண்டு டிசம்பர் மாதம் 19ஆம் தேதியும் தமிழ்நாடு தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா இந்தாண்டு ஜனவரி மாதம் 10ஆம தேதியும் இதுதொடர்பாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதினர். 
சட்டப் போராட்டத்துக்கு தயாரான தமிழ்நாடு:
நிவாரண நடவடிக்கைகள் மற்றும் தற்காலிக மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்ள இடைக்கால நிவாரண நிதியாக 2 ஆயிரம் கோடி ரூபாய் வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இயற்கை பேரிடருக்கான நிவாரண தொகையை மத்திய அரசு நிறுத்தி வைத்திருப்பதாக தமிழ்நாடு அரசு குற்றஞ்சாட்டியுள்ளது.
தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மனுவில், “மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்டங்களில் பெய்த வரலாறு காணாத கனமழை என இரட்டை பேரிடர்களால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டுக்கு நிவாரணம் வழங்கப்படவில்லை. பல முறை முறையிட்டும் இந்திய அரசு தேசிய பேரிடர் நிவாரண நிதியில் (NDRF) இருந்து எந்த நிதியும் வழங்கவில்லை.
நிவாரண நிதி வழங்குவது தொடர்பாக மத்திய அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை. இந்திய அரசியலமைப்பு 14 மற்றும் 21வது பிரிவுகளின் கீழ் மக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளது. இது சட்டவிரோதமானது.  தன்னிச்சையானது.
 
தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து நிவாரணத் தொகைக்கு ஒப்புதல் அளிக்கவும், தமிழ்நாட்டுக்கு நிதியை வழங்கவும் உயர்மட்டக் குழுக் கூட்டத்தைக் கூட்டுவதில் உள்துறை அமைச்சகம் தாமதம் செய்துள்ளது. இது, மாநிலத்தின் வளர்ச்சியைத் தடுக்கும் வகையில் உள்ளது. பாதிக்கப்பட்ட குடிமக்களுக்கு மன உளைச்சல் மற்றும் சிரமத்தை ஏற்படுத்துகிறது” என குறிப்பிட்டுள்ளது.

மேலும் காண

Source link