விழுப்புரத்தில் உலக நன்மை வேண்டி திருநங்கைகள் திருவிளக்கு பூஜை செய்து வழிபாடு

விழுப்புரம்: உலக நன்மை வேண்டி திருநங்கைகள் திருவிளக்கு பூஜை செய்து வழிபாடு நடத்தினர்.

மாரியம்மன் கோவில் 3-ம் பாலினமாக கருதப்படும் திருநங்கைகள், தங்களுடைய குல தெய்வமாக கூவாகம் கூத்தாண்டவரை பாவித்தாலும், அங்காள பரமேஸ்வரியம்மனை அதிகம் வழிபடுவதை வழக்கமாக கொண்டு வருகின்றனர். ஆண்டுதோறும் தை அமாவாசை நாட்களில் உலக நன்மை வேண்டி திருநங்கைகள், அங்காளம்மனுக்கு வழிபாடு நடத்துவது வழக்கம். அதுபோல் இந்த ஆண்டும் தை அமாவாசையான நேற்று, விழுப்புரம் அருகே அய்யங்கோவில்பட்டு கிராமத்தில் திருநங்கைகளால் கட்டப்பட்ட சமயபுரம் மாரியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

திருவிளக்கு பூஜை

இதையொட்டி காலை 7 மணியளவில் விநாயகருக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பின்னர் 8 மணியளவில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டன. அதனை தொடர்ந்து மாலை 6.30 மணிக்கு திருவிளக்கு பூஜை நடந்தது.

இதில் திருநங்கைகள் பலர் கலந்துகொண்டு உலக நன்மை வேண்டியும், நாட்டு மக்கள், திருநங்கைகள் அனைவரும் நலம்பெற வேண்டியும், மழை பெய்ய வேண்டியும், விவசாயம் செழிக்கவும் பெண்களுக்கு நிகராக திருவிளக்கு பூஜை செய்தனர். முதலில் திருவிளக்கிற்கு குங்குமத்தினால் அர்ச்சனை செய்தனர். பின்னர் புஷ்பங்களால் பூஜை செய்து வழிபாடு நடத்தினர்.

சாமி தரிசனம்

தொடர்ந்து, அம்மனுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான திருநங்கைகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

இதுகுறித்து திருநங்கைகளிடம் கேட்டபோது அவர்கள் கூறுகையில், ஆண்டுதோறும் உலக நன்மைக்காகவும், நாட்டு மக்கள் நலம்பெறவும் கூத்தாண்டவர், அங்காளம்மனை மனமுருகி இந்த திருவிளக்கு பூஜையை நடத்தி வருகிறோம். இந்த பூஜையை நடத்துவதன் மூலம் எங்களுக்குள் இருக்கிற உடல்ரீதியான பாதிப்புகள் நிவர்த்தியாகி விடும் என நாங்கள் ஐதீகமாக கருதுகிறோம் என்றனர். இதற்கான ஏற்பாடுகளை விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் மாவட்ட தலைவர் ராமமூர்த்தி, மாத்ரு சக்தி பிரிவின் மாவட்ட அமைப்பாளர் சுபாஷினி, துர்கா வாகினி அமைப்பின் மாவட்ட அமைப்பாளர் புஷ்பா ஆகியோர் செய்திருந்தனர்.

Source link