திருமணம் செய்துகொள்வதாக கூறி பெண்ணிடம் பாலியல் உறவு கொள்வது பாலியல் வன்கொடுமையா? நீதிமன்றம் பரபர

திருமணம் செய்து கொள்வதாக கூறிவிட்டு, பாலியல் உறவு கொள்வதும் பெற்றோர் சம்மதிக்காததால் உறவை முறித்துக்கொள்வதும் பாலியல் வன்கொடுமையாக கருத முடியாது என மும்பை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

திருமணம் செய்து கொள்வதாக கூறி பெண் ஏமாற்றப்பட்டாரா?

குற்றம்சாட்டப்பட்ட நபரும் பாதிக்கப்பட்ட பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். கடந்த 2019ஆம் ஆண்டு, காதலித்து வந்த சமயத்தில் இருவரும் பாலியல் உறவில் ஈடுபட்டுள்ளனர். பின்னர், அந்த நபருக்கு வேறொரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் நடந்திருப்பதும், அவர் திருமணம் செய்யப் போவதும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தெரியவந்தது.

இதையடுத்து, நாக்பூரில் உள்ள காவல்நிலையத்தில் அந்த பெண் புகார் அளித்தார். குற்றம் சாட்டப்பட்ட நபரை வரவழைக்கப்பட்டபோது, ​​அவர் புகார்தாரரை திருமணம் செய்யத் தயாராக இருப்பதாகவும், ஆனால் அவரது பெற்றோர் திருமணத்திற்கு ஒப்புக் கொள்ளவில்லை என்றும் அவர் காவல்துறை அதிகாரிகளிடம் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பெண், குற்றம்சாட்டப்பட்ட நபரின் தந்தையை சந்திக்கச் சென்றார். அப்போது, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தனது மகனை திருமணம் செய்து வைப்பதில் விருப்பமில்லை என்று அவர் கூறியுள்ளார். இதனால், குற்றம் சாட்டப்பட்டவர் மீது இந்திய தண்டனை சட்டம் பிரிவு 376(2)(n) கீழ் நாக்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

மும்பை உயர் நீதிமன்றம் பரபரப்பு கருத்து:

குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பிறகு, வழக்கில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும் என்று குற்றம் சாட்டப்பட்டவர் செஷன்ஸ் நீதிமன்றத்தை அணுகியுள்ளார். ஆனால், குற்றம் சாட்டப்பட்டவரை விடுவிக்க மறுத்த செஷன்ஸ் நீதிமன்றம், உயர் நீதிமன்றத்தை அணுகும்படி தெரிவித்தது.

எனவே, வழக்கில் இருந்து விடுவிக்கும்படி குற்றம்சாட்டப்பட்ட நபர் மும்பை உயர் நீதிமன்ற நாக்பூர் கிளையில் மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த நீதிபதி M.W. சந்த்வானி, "திருமணம் செய்து கொள்வதாக கூறி, பெண்ணுடன் பாலியல் உறவில் கொண்டு, ஆனால், பெற்றோர் சம்மதிக்காத காரணத்தால் திருமணம் செய்து கொள்ள மறுத்த குற்றம்சாட்டப்பட்ட நபரை" விடுவிக்க உத்தரவிட்டார்.

"திருமணத்திற்கு பெற்றோர் ஒப்பு கொள்ளாத காரணத்தால் கொடுத்த வாக்குறுதியை அவர் நிறைவேற்றவில்லை. இதனாலேயே, இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 375 (பாலியல் வன்கொடுமை) கீழ் தண்டனைக்குரிய குற்றத்தை மனுதாரர் (குற்றம்சாட்டப்பட்ட நபர்) செய்தார் என சொல்ல முடியாது.

சூழ்நிலை காரணமாக அவர் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. என்ன நடக்கும் என்பதை குற்றம்சாட்டப்பட்ட நபர் ஊகிக்க முடியாது. அது, அவருக்கு அப்பாற்பட்ட விஷயம். திருமணம் செய்து கொள்ள வேண்டும் என எண்ணம் இருந்தபோதிலும், பாதிக்கப்பட்ட பெண்ணை அவரால் திருமணம் செய்து முடியவில்லை.

திருமணம் செய்து கொள்ள பாதிக்கப்பட்ட பெண் தான் முதலில் மறுத்துள்ளார். வேறு ஒரு பையனை திருமணம் செய்து கொள்வதாக குற்றம்சாட்டப்பட்டவரிடம் தெரிவித்தார். குற்றம்சாட்டப்பட்ட நபர், வேறொரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் செய்தபோதுதான், பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்துள்ளார்" என நீதிபதி தெரிவித்துள்ளார்.

Source link