HBD Jai: பர்த்டே பாய் ஜெய்! தவறவிட்ட ப்ளாக்பஸ்டர் படங்கள் என்னென்ன தெரியுமா?

தமிழ் திரையுலகின் பிரபல நடிகர்களில் ஒருவர் ஜெய். பகவதி படத்தில் நடிகர் விஜய்க்கு தம்பியாக அறிமுகமாகி கோலிவுட்டில் கால் தடம் பதித்த சென்னை 28, சுப்ரமணியபுரம், கோவா உள்ளிட்ட பல படங்களில் நடித்து தமிழின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். இன்று அவருக்கு 40வது பிறந்தநாள் ஆகும்.

பிறந்த நாள் நாயகன் ஜெய் தமிழில் ஏராளமான படங்களில் நடித்தாலும் தனக்கென்று மாபெரும் வெற்றி படம் கொடுத்து பல வருடங்கள் ஆகிவிட்டது என்றே கூறலாம். நடிகர் ஜெய் தவறவிட்டு தமிழில் மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படங்களின் பட்டியலை கீழே காணலாம்.

சிவா மனசுல சக்தி:

சென்னை 28 திரைப்படத்தில் முக்கிய நாயகர்களில் ஒருவராக நடித்த ஜெய்க்கு, இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் சிவா மனசுல சக்தி படத்தில் நடிக்க வாய்ப்பு கிட்டியது. ஆனால், அதே சமயத்தில் சுப்ரமணியபுரம் படத்தில் நடித்துக் கொண்டிருந்த காரணத்தால் அவரால் தாடியை எடுக்க முடியவில்லை. இதனால், அந்த படத்தில் அவர் நடிக்கவில்லை. ஜீவா நடிப்பில் பின்னர் வெளியான சிவா மனசுல சக்தி படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

நாடோடிகள்:

இயக்குனர் சமுத்திரகனி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் நாடோடிகள். சுப்ரமணியபுரம் படத்தின்போது ஏற்பட்ட நட்பின் அடிப்படையில் ஜெய்யை இந்த படத்தில் கதாநாயகனாக்க சமுத்திரகனி விரும்பினார். ஆனால், சில காரணங்களால் அவரால் நடிக்க இயலவில்லை. இதையடுத்து, அந்த படத்தில் தனது நண்பன் சசிகுமாரையே நாயகனாக மாற்றினார்.

விண்ணைத் தாண்டி வருவாயா:

நடிகர் சிம்புவின் திரை வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது விண்ணைத் தாண்டி வருவாயா. அந்த படத்தில் சிம்புவின் உடல்மொழி, வசன உச்சரிப்பு என அனைத்துமே அவரது முந்தைய படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டு இருக்கும். அந்த படத்தில் நாயகனாக நடிக்க முதன்முதலில் கௌதம் மேனன் அணுகியது நடிகர் ஜெய் ஆகும். ஆனால், ஏற்கனவே பல படங்களில் கமிட் ஆகியிருந்த காரணத்தால் ஜெய்யால் அந்த படத்தில் நடிக்க இயலவில்லை. பின்னர், சிம்பு நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது.

ராட்சசன்:

தமிழில் வெளியாகிய த்ரில்லர் படங்களில் எப்போதும் நினைவில் இருக்கும் படங்களில் ஒன்று ராட்சசன். நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் வெளியான இந்த படம் இப்போது பார்த்தாலும் ரசிகர்களை இருக்கை நுனியில் அமர வைக்கும். அந்த படத்தின் கதையை இயக்குனர் ராம்குமார் பல நாயகர்களில் கூறியுள்ளார். அதில் நாயகனாக நடிக்க சம்மதம் தெரிவித்தவர் நடிகர் ஜெய். போலீஸ் கதாபாத்திரத்திற்காக தனது உடல் வடிவமைப்பை ஜெய் மாற்றிக் கொண்டிருந்த சமயத்தில் தயாரிப்பாளர் மாறியதால் ஜெய் ராட்சசன் படத்தை கைவிட வேண்டிய சூழல் உருவானது. பின்னர், விஷ்ணு விஷாலிடமே மீண்டும் கதை சென்று அவர் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்றது.

தமிழ் சினிமாவின் மிகவும் முக்கியமான நடிகரான ஜெய் கடைசியாக அன்னபூரணி படத்தில் நடித்தார். அவரது நடிப்பில் கருப்பர் நகரம் என்ற படம் வெளியீட்டிற்கு தயாராக உள்ளது. இதுதவிர, அட்லீ தயாரிப்பில் ஒரு படத்திலும், மற்றொரு படத்திலும் நடித்து வருகிறார்.

Source link