காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி 2024 (Kanchipuram Lok Sabha Constituency 2024 )
காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் ( Kancheepuram Lok Sabha constituency ) 1951 ஆம் ஆண்டு ஒரு தேர்தல் நடைபெற்றது. அதன் பிறகு செங்கல்பட்டு தொகுதியாக இருந்து வந்தது. 2008ஆம் ஆண்டில் செய்யப்பட்ட தொகுதி மறுசீரமைப்பின்போது இந்தத் தொகுதி புதியதாக உருவாக்கப்பட்டது. அதன் பிறகு 2009 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை தேர்தல் நடைபெற்று வருகிறது. இத்தொகுதியானது தனித்தொகுதி ஆகும். செங்கல்பட்டு நாடாளுமன்ற தொகுதியாக இருந்தபொழுது, இடம் பெற்றிருந்த சட்டமன்றத் தொகுதிகள் – திருப்போரூர் (தனி), செங்கல்பட்டு, மதுராந்தகம், அச்சரப்பாக்கம் (தனி), உத்திரமேரூர், காஞ்சிபுரம். இதனையடுத்து காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியாக மறுசீரமைக்கப்பட்டு, காஞ்சிபுரம், உத்திரமேரூர், மதுராந்தகம் (தனி ) , செய்யூர் (தனி), திருப்போரூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியாக மறுசீரமைக்கப்பட்டது.
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள்
காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் க. செல்வம், அதிமுக சார்பில் பெரும்பாக்கம் இராஜசேகர் , பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் ஜோதி வெங்கடேசன் , நாம் தமிழர் கட்சி சார்பில் சந்தோஷ் குமார் உள்ளிட்ட 11 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் பிரதான கட்சிகளை சார்ந்த திமுக ,அதிமுக, பாமக ஆகிய கட்சிகள், தொகுதி முழுவதும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில் தேர்தல் திருவிழா களைகட்ட தொடங்கியுள்ளது .
திமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு
செங்கல்பட்டு மாவட்டம் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் செல்வம் அவர்கள் கருங்குழி, மொறப்பாக்கம், தண்டலம், கழனிபாக்கம் வேடந்தாங்கல் ஆகிய பகுதிகளில் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்பொழுது தண்டலம் பகுதியில், விவசாய டிராக்டரில் சென்றபடி வாக்கு சேகரித்தார் .
அப்போது அவர் பேசுகையில், “நான் வேட்பாளராக வரவில்லை ஒரு விவசாயியாக வந்துள்ளேன் நானும் ஒரு சிறு கிராமத்தில் பிறந்த விவசாயி குடும்பத்தில் பிறந்து தான் நான் இந்த நிலைமைக்கு வந்துள்ளேன்” எனக் கூறி உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்தார் அப்பொழுது அவருக்கு மாலை அணிவித்தும் ஆரத்தி எடுத்தும் வரவேற்புரைத்தனர். இந்த நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் கா. சுந்தர் எம்எல்ஏ அச்சிறுபாக்கம் வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் ஜி.தம்பு உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தொடரும் பிரச்சாரங்கள்
தொடர்ந்து காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் முக்கிய அரசியல் கட்சியினர் பல்வேறு வழிகளில் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். வேட்பாளர்கள் பிரச்சாரத்தை தவிர்த்து, வேட்பாளருக்கு ஆதரவாக கூட்டணி கட்சியினர் மற்றும் கட்சியின் நட்சத்திர பேச்சாளர்கள் பிரச்சாரம் மேற்கொண்டு வருவது பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இதுபோக நிர்வாகிகள் வீடு தோறும் சென்று துண்டு பிரசுரங்களை வழங்கியும் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி உள்ளனர் .
தேர்தலுக்கு சில நாட்களே உள்ள நிலையில், இறுதி நேர பிரச்சாரத்திற்கும் அரசியல் கட்சியினர் தயாராகி வருகின்றனர். இதனால் காஞ்சிபுரம் தொகுதி முழுவதும் தேர்தல் திருவிழா களைகட்ட துவங்கி உள்ளது. இதுபோக இரவு நேரங்களில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில், முக்கிய அரசியல் கட்சி சார்பில் பிரச்சார பொதுக்கூட்டங்களும் நடைபெற்று வருகிறது. பிரச்சார பொதுக்கூட்டங்களில் பிரதான கட்சியை சார்ந்த நட்சத்திர பேச்சாளர்கள், கட்சித் தலைவர்கள் ஆகியோர் கலந்துகொண்டு வேட்பாளருக்கு ஆதரவாக வாக்குகளை சேகரித்து வருகின்றனர்.
மேலும் காண