Lok Sabha Election: நெருங்கும் மக்களவைத் தேர்தல்! அதிக தொகுதிகளில் போட்டியிட ஆர்வம்காட்டும் திமுக

நாடு முழுவதும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மக்களவைத் தேர்தல் இன்னும் ஓரிரு மாதங்களில் நடைபெற உள்ளது. இந்திய தேர்தல் ஆணையம் மக்களவைத் தேர்தலுக்கான தேதியை இதுவரை அறிவிக்காவிட்டாலும், கடந்த ஓராண்டாகவே அரசியல் கட்சிகள் அந்த பணியைத் தொடங்கிவிட்டன.

மக்களவைத் தேர்தல்:

மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 16ம் தேதி நடைபெறும் என்று தகவல்கள் வௌியாகியுள்ளது. தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலுக்கான பணிகளை தமிழ்நாட்டில் தி.மு.க. தொடங்கியுள்ளது. கடந்த வாரம் தேர்தல் பணிகளை கண்காணிக்க, தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை நடத்த என 3 குழுக்களை தி.மு.க. அமைத்தது.

ஆளுங்கட்சியான தி.மு.க. சட்டசபையில் பலத்துடன் இருப்பது போல கூட்டணியிலும் பலத்துடன் உள்ளது. தமிழ்நாட்டில் மிகவும் பலம் வாய்ந்த கூட்டணியாக தற்போது தி.மு.க. உள்ளது. காங்கிரஸ், மார்க்சிஸ்ட், கம்யூனிஸ்ட், ம.தி.மு.க., வி.சி.க., இந்திய யூனியன் முஸ்லீம் லீக் என செல்வாக்கு மிகுந்த கட்சிகள் தி.மு.க.வின் கூட்டணியில் உள்ளன. தி.மு.க. ஆட்சியை கைப்பற்றிய பிறகு, கமல்ஹாசனும் தி.மு.க.விற்கு ஆதரவாகவே செயல்பட்டு வருகிறார்.

அதிக தொகுதிகளில் போட்டியிட தி.மு.க. ஆர்வம்:

இதனால், வரும் தேர்தலில் அவர் தி.மு.க.வுடன் கூட்டணி அமைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மக்களவைத் தேர்தலில் தான் போட்டியிடுவதை உறுதி செய்த கமல்ஹாசன், எந்த தொகுதி என்பதை பின்னர் அறிவிப்பதாக ஏற்கனவே கூறினார். இந்த முறை ஏற்கனவே உள்ள கட்சிகளுடன் கமல்ஹாசன் கட்சியும் இணையும் என்பதால் தி.மு.க. கூட்டணி மேலும் பலப்படும் என்று கருதப்படுகிறது.

அதேசமயம், கூட்டணி கட்சிகள் அதிகளவில் இருப்பதால் எந்தளவு பலம் உள்ளதோ, அதே அளவு தொகுதியை பங்கீடு செய்வதிலும் சிக்கல் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த முறை தி.மு.க.விற்கு 20, கூட்டணி கட்சிகளுக்கு 20 என்று தி.மு.க. கூட்டணியினர் பங்கீடு செய்து கொண்டனர். ஆனால், இந்த முறை ஆளுங்கட்சி என்பதால் தி.மு.க. அதிக தொகுதிகளில் போட்டியிட ஆர்வம் காட்டுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

காங்கிரசுக்கு எத்தனை இடங்கள்?

கடந்த முறை காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகளை தி.மு.க. வழங்கியது. ஆனால், இந்த முறை 10 தொகுதிகள் காங்கிரஸ் கட்சிக்கு வழங்கப்படுமா? என்பது கேள்விக்குறி என்றே தெரிகிறது. காங்கிரஸ் கட்சிக்கு வாக்கு சேகரிப்பதற்காக ராகுல்காந்தி தொடர் நடைபயணம் மேற்கொண்டாலும், வட இந்தியாவில் பா.ஜ.க.வின் செல்வாக்குக்கு சவால் விடும் அளவில் அமையவில்லை என்றே கருத்துக்கணிப்புகள் கூறுகிறது. குறிப்பாக, ராமர் கோயில் திறப்பு விழாவிற்கு பிறகு பா.ஜ.க. மற்றும் மோடியின் செல்வாக்கு பன்மடங்கு அதிகரித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், காங்கிரஸ் மத்தியில் பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தாது என்ற கோணத்தில் தி.மு.க. கருதினால் அவர்களுக்கு, கடந்த முறை போல 10 தொகுதிகளை தர தி.மு.க. தயக்கம் காட்டும் என்றே கருதப்படுகிறது. மேலும், இந்த முறை தி.மு.க. 20 முதல் 25 தொகுதிகள் வரை போட்டியிட ஆர்வம் காட்டுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

கூட்டணி பங்கீட்டில் நெருக்கடி:

கூட்டணி கட்சிகளை திருப்திப்படுத்தும் விதமாகவும், அதேசமயம் தங்களுக்கு போதிய வாய்ப்பை உருவாக்கிக் கொள்ளவும் தி.மு.க. விரும்புகிறது. இதனால், தொகுதி பங்கீட்டில் இந்த முறை இழுபறி ஏற்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த முறை மாநிலங்களவைத் தொகுதிகளும் கூட்டணி பங்கீட்டில் கூட்டணி கட்சிகளுக்கு தி.மு.க. வழங்கியது. இந்த முறை அதுபோல வழங்குமா? என்பதும் கேள்விக்குறியே ஆகும்.

தி.மு.க.வுடனான கூட்டணி பங்கீட்டில் மற்ற கட்சிகளுக்கு கடந்த முறை வழங்கப்பட்ட தொகுதிகள் வழங்கப்பட்டாலும், காங்கிரசுக்கு 10 இடங்கள் வரை இந்த முறையும் வழங்கப்படுமா? என்பதும் மிகுந்த கேள்விக்குறியாகவே உள்ளது. காங்கிரஸ் கட்சி கடந்த முறை அதிக இடங்கள் கேட்டு 10 தொகுதிகள் மட்டுமே தி.மு.க. வழங்கியது. இந்த முறையும் குறைந்தது 10 தொகுதிகளையாவது வாங்கிவிட வேண்டும் என்று காங்கிரசும் ஆர்வம் காட்டி வருகிறது. இதனால், கடந்த முறையை காட்டிலும் இந்த மக்களவைத் தேர்தலில் தி.மு.க. கூட்டணி பங்கீடு இந்த முறை மிகவும் சிக்கலானதாக இருக்கும் என்று அரசியல் வல்லுனர்கள் கருதுகின்றனர்.

Source link