Farmers Protest 2.0 Farmers call ‘rail roko’ protest; trains in Punjab, Haryana to face disruptions on Sunday


Farmers Protest 2.0: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நண்பகல் 12 மணி தொடங்கி பிற்பகல் 4 மணி வரை,  விவசாயிகள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
விவசாயிகள் ரயில் மறியல் போராட்டம்:
சம்யுக்தா கிசான் மோர்ச்சா (அரசியல் சாராதது) மற்றும் கிசான் மஸ்தூர் மோர்ச்சா ஆகிய அமைப்புகள்,  பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் கிட்டத்தட்ட 60 இடங்களில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளன. இது தவிர, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தமிழ்நாடு, கர்நாடகா, தெலுங்கானா மற்றும் பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் ரயில் மறியல் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நண்பகல் 12 மணி தொடங்கி மாலை 4 மணி வரையிலான இந்த போராட்டத்தில், பார்தி கிசான் யூனியன் (ஏக்தா உக்ரஹான்), பார்தி கிசான் யூனியன் (டகவுண்டா-தானர்), மற்றும் கிராந்திகாரி கிசான் யூனியன் ஆகிய அமைப்புகளும் பங்கேற்பதாக தெரிவித்துள்ளன.
ரயில் சேவை முடங்கும் அபாயம்:
விவசாயிகளின் போராட்டத்தால் பஞ்சாப் மற்றும் ஹரியானாவில், ரயில் சேவை கடுமையாக பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பிட்ட சில பகுதிகளில் ரயில் போக்குவரத்து முற்றிலும் முடங்கும் சூழலும் உள்ளது. இதேபோன்று தமிழ்நாடு உள்ளிட்ட மற்ற பகுதிகளில் ரயில் சேவை குறிப்பிட்ட நேரத்தில் பாதிக்கப்படலாம். இதைமுன்னிட்டு, அம்பாலாவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது, மேலும் பல விவசாய சங்கத் தலைவர்களின் வீடுகள் முன்பு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
விவசாயிகள் போராட்டம்:
விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை, விவசாயக் கடன் தள்ளுபடி, சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்துதல், விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் மற்றும் 2021ம் ஆண்டு நடைபெற்ற போராட்டத்தின் போது விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை முன்வைக்கின்றனர். இதுதொடர்பாக கடந்த மாதம் 13ம் தேதி முதல் டெல்லியை நோக்கி பேரணியாக செல்லும் போராட்டத்தை விவசாயிகள் முன்னெடுத்துள்ளனர்.
விவசாயி உயிரிழப்பு:
டெல்லி எல்லைக்குள் நுழையாமல் ஹரியானா எல்லையில் ஏராளமான பாதுகாப்பு படை வீரர்கள் குவிக்கப்பட்டு, விவசாயிகள் தடுத்து நிறுத்தப்பட்டனர். கண்ணீர் புகை குண்டுகளை கொண்டும் தாக்கப்பட்டனர். இதில் ஒரு விவசாயி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து டெல்லியை முற்றுகையிடும் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது. ஆனாலும் விவசாயிகள் பஞ்சாப் மற்றும் ஹரியானா இடையேயான ஷம்பு மற்றும் கானௌரி எல்லைப் பகுதிகளில் முகாமிட்டுள்ளனர். தொடர்ந்து நாடு முழுவதும் இருந்து விவசாயிகள் டெல்லிக்கு வரவேண்டும் என அழைப்பு விடுதனர். இந்நிலையில் தான், இன்று ரயில் மறியல் போராட்டம் நடைபெற உள்ளது. இதுதொடர்பாக பேசியுள்ள விவசாய சங்கங்கள், ”அரசாங்கம் தனது பொறுப்பில் இருந்து ஓடக்கூடாது. நாட்டின் விவசாயிகளைக் காப்பாற்ற, குறைந்தபட்ச ஆதார விலை தொடர்பான சட்டம் இயற்றப்பட வேண்டும்” என வலியுறுத்தியுள்ளனர். 

மேலும் காண

Source link