Shamar Joseph Becomes 1st West Indian To Become ICC Player Of The Month

கரிபீயன் புயல்:
அண்மையில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் முதல் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஷமர் ஜோசப் எடுத்த முதல் விக்கெட்டே ஸ்மித்தின் விக்கெட்தான். ஸ்மித் ஓப்பனராக இறங்கிய முதல் போட்டியிலேயே ஷமரிடம் தனது விக்கெட்டைப் பறிகொடுத்தார். தொடர்ந்து ஸ்டார்க், லயான் ஆகியோர்களையும் முட்டி மோதி வீழ்த்தி அறிமுகப் போட்டியிலேயே அதிலும் ஆஸ்திரேலியாவில் வைத்து ஐந்து விக்கெட்டை வீழ்த்தினார் ஷமர். 
அதேபோல், முதல் இன்னிங்ஸில் 36 ரன்களை வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எடுத்துக்கொடுத்தார். முதல் போட்டியில் 20 ஓவர்கள் வீசிய இவர் 5 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். அதன் பின்னர் 2-வது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டார்க்கின் யார்க்கர் பந்துவீச்சு, ஷமர் ஜோசப்பின் காலை பதம் பார்த்தது. இதனால், அவர் தொடர்ந்து விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்த நிலையில், 2-வது இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணியை வாரி சுருட்டினார். அதன்படி, 11 ஓவர்கள் மட்டுமே வீசி 68 ரன்களை விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினார்.
கரீபியனில் உள்ள பராகரா என்ற கிராமத்தில் பிறந்து கூலித்தொழிலாளியாக வேலையைத் தொடங்கியவர். பின்னர் செக்யூரிட்டியாக 12 மணி நேர ஷிஃப்டில் பணியாற்ற அங்கிருந்து கிரிக்கெட் மீது இருந்த ஆர்வத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக முதல் தர போட்டிகளில் விளையாடிய அவர், ஆஸ்திரேலிய அணி சுற்றுப் பயணத்தில் முதன் முறையாக இடம்பிடித்து  காபா டெஸ்டில் பிளேயிங் லெவனில் இடம்பிடித்து  வெஸ்ட் இண்டீஸ் அணியின் வரலாற்று சாதனையின் நாயகனாக  மிளிர்ந்தார்.
 ICC Player Of The Month Award:
இந்நிலையில் தான் தற்போது ICC Player Of The Month என்ற விருதை வென்றிருக்கிறார் ஷமர் ஜோசப். அந்த வகையில் இந்த விருதை வெல்லும் முதல் வெஸ்ட் இண்டீஸ் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இது தொடர்பாக பேசிய ஷமர் ஜோசப், “இந்த விருதை வென்றதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். உலக அரங்கில் இப்படியொரு விருதைப் பெறுவது சிறப்பு. அவுஸ்திரேலியாவில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாடிய ஒவ்வொரு தருணத்தையும் நான் முழுமையாக அனுபவித்தேன், குறிப்பாக கபாவில் நடந்த இறுதி நாளில் நடந்த மேஜிக்கை. போட்டியில் வெற்றி பெற விக்கெட் எடுப்பது கனவாக இருந்தது” என்று கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், “இது எனக்கு உண்மையிலேயே மறக்கமுடியாத தருணம், நான் தொடர்ந்து கடினமாக உழைக்க விரும்புகிறேன் மேலும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக எனது பந்து வீச்சின் மூலம் வெற்றிகளை பெற்றித்தர விரும்புகிறேன். தேவைப்படும் போது பேட்டிங்கின் மூலமும் எனது அணிக்கு வெற்றியை பெற்றுக்கொடுப்பேன். 
ஆஸ்திரேலியாவில் இருந்த சக வீரர்கள் மற்றும் உதவி ஊழியர்களுக்கு நான் நன்றி சொல்ல விரும்புகிறேன். நான் விருதை பெறுவேன், ஆனால் இது அணிக்காகவும், வெஸ்ட் இண்டீஸில் உள்ள அனைத்து ரசிகர்களுக்காகவும்” என்று ஷமர் ஜோசப் கூறியுள்ளார். முன்னதாக ,கடந்த சில நாட்களுக்கு முன்பு ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவதற்காக ஷமர் ஜோசப்பை லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி  3 கோடி ரூபாய்க்கு வாங்கியது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: India vs England 3rd Test: இந்தியா vs இங்கிலாந்து 3-வது டெஸ்ட்… இதுவரை ராஜ்கோட் மைதானத்தின் நிலவரம் என்ன? விவரம் இதோ!
மேலும் படிக்க:India vs England Test: இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவேஷ் கானை நீக்கியது ஏன்? ஆகாஷ் சோப்ரா கேள்வி!

Source link