Rahul Gandhi Assets including Land Shared With Priyanka Gurugram Office Mutual funds stock markets


Rahul Gandhi Assets: நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கு இன்னும் 15 நாள்களே உள்ள நிலையில், அரசியல் களம் உச்சக்கட்ட பரபரப்பை எட்டியுள்ளது. இந்த மாதம் 19ஆம் தேதி தொடங்கும் வாக்குப்பதிவு மொத்தம் 7 கட்டங்களாக ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
ராகுல் காந்தியின் சொத்து மதிப்பு எவ்வளவு?
நாடு முழுவதும் முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் 102 தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் முடிவடைந்த நிலையில், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடக்கும் 89 தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் தற்போது நடைபெற்று வருகிறது.
கேரளாவில் உள்ள 20 தொகுதிகளுக்கும் இந்த மாதம் 26ஆம் தேதி இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. கேரளாவில் உள்ள வயநாடு தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
அதில், குறிப்பிடப்பட்டுள்ள சொத்து விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. அதன்படி, ராகுல் காந்திக்கு மொத்தமாக 20 கோடி ரூபாய் சொத்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், தனக்கு சொந்தமாக வீடோ காரோ இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அசையும் அசையா சொத்துக்களின் விவரம்:
ராகுல் காந்திக்கு அசையும் சொத்துக்களாக 9.24 கோடி ரூபாய் உள்ளது. ரொக்கமாக 55,000 ரூபாய் பணமும் வங்கியில் 26.25 லட்சம் ரூபாய் பணமும் பங்கு மற்றும் பத்திரங்களாக 4.33 கோடி ரூபாயும் அவரிடம் உள்ளது. அதோடு, 3.81 கோடி ரூபாய் மதிப்புள்ள மியூச்சுவல் ஃபண்ட், 15.21 லட்சம் தங்கப் பத்திரங்கள், 4.20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளும் உள்ளது.
இதை தவிர்த்து, ராகுல் காந்திக்கு அசையா சொத்துக்களாக 11.15 கோடி ரூபாய் உள்ளது. அதன்படி தனக்கும் சகோதரி பிரியங்கா காந்திக்கு சொந்தமாக டெல்லியின் மெஹ்ராலியில் விவசாய நிலம் உள்ளது. இதை பரம்பரை சொத்து என ராகுல் காந்தி வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
ஹரியானா மாநிலம் குருகிராமில் சொந்தமாக அலுவலக இடம் உள்ளதாகவும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளதார். இதன் மதிப்பு தற்போது 9 கோடி ரூபாய்க்கு மேல். 
தனக்கு எதிராக காவல்துறை பதிவு செய்த வழக்குகளின் விவரங்களையும் ராகுல் காந்தி வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ளார். பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டதாக ராகுல் காந்தி மீது போக்சோ வழக்கு நிலுவையில் உள்ளது.
தனக்கு எதிராக பாஜகவினர் பலர் அவதூறு வழக்கு பதிவு செய்துள்ளதாகவும் வேட்புமனுவில் தெரிவித்துள்ளார். நேஷனல் ஹெரால்டு விவகாரத்தில் தனக்கு எதிராக குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
வயநாட்டை தவிர்த்து உத்தர பிரதேசத்தில் உள்ள அமேதி தொகுதியிலும் ராகுல் காந்தி போட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது.
 

மேலும் காண

Source link