DMK Is Elated By The Grand Success Of The Global Investor Meet Chaired By Tamil Nadu Chief Minister Stalin | TN GIM 2024 Investment: ஒரே கல், இரண்டு மாங்காய்: ஜெயலலிதா, ஈபிஎஸ்-ஐ மிஞ்சிய முதலமைச்சர் ஸ்டாலின்

TN GIM 2024 Investment: சென்னை உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் 6 லட்சத்து 64 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான, முதலீடுகளை ஈர்த்துள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
உலக முதலீட்டாளர்கள் மாநாடு:
ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற தமிழ்நாடு அரசின் இலக்கை சாத்தியப்படுத்தும் வகையில், உலக முதலீட்டாளர்கள் மாநாடு வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. இதில் தமிழ்நாட்டில் புதியதாக தொழில்களை தொடங்குவது மற்றும் ஏற்கனவே இருக்கும் தொழில்களை விரிவுபடுத்துவது தொடர்பான பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இந்த ஒப்பந்தங்கள் வாயிலாக தமிழ்நாட்டின் அடுத்த 20 ஆண்டுகளுக்கான வளர்ச்சிக்கு அடித்தளமிடப்பட்டுள்ளது என முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
ரூ.6.64 லட்சம் கோடி முதலீடு:
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கையெழுத்தான ஒப்பந்தங்கள் மூலமாக மொத்தமாக 6 லட்சத்து 64 ஆயிரத்து 180 கோடி ரூபாய் முதலீடுகளாக ஈர்க்கப்பட்டுள்ளன. அதிகபட்சமாக உற்பத்தித் துறையில் அதாவது தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பாக, 3 லட்சத்து 79 ஆயிரத்து 809 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தங்கள் இறுதி செய்யப்பட்டுள்ளன. இந்த ஒப்பந்தங்களால் நேரடி வேலைவாய்ப்பு என்ற வகையில் 14 லட்சத்து 54 ஆயிரத்து 712 நபர்களுக்கும், மறைமுக வேலைவாய்ப்பு என்ற வகையில் 12 லட்சத்து 35 ஆயிரத்து 945 நபர்களுக்கும் வேலை கிடைக்க உள்ளது. அதாவது,  மொத்தமாக 26 லட்சத்து 90 ஆயிரத்து 657 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது ஏற்கனவே நடந்த இரண்டு முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம், ஈர்க்கப்பட்ட முதலீடுகளை காட்டிலும் சுமார் இரண்டு மடங்கு அதிகமாகும்.
ஜெயலலிதா – முதலீட்டாளர்கள் மாநாடு:
தமிழ்நாட்டில் முதலீட்டாளர்கள் மாநாடு என்ற கலாசாரம், முதலில் அதிமுக ஆட்சி காலத்தில், அதிலும் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது தான் தொடங்கியது. அந்த வகையில், கடந்த 2015ஆம் ஆண்டு முதலமைச்சர் ஜெயலலிதா தலைமயில் தான், தமிழ்நாட்டில் முதன்முதலில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. 98 நிறுவனங்களுடன் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம்,  ரூ.2லட்சத்து 42 கோடி அளவுக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.  ஆனால், அதில் சுமார் ரூ.1 லட்சத்து 7 ஆயிரம் கோடி அளவுக்கே உற்பத்தி, எரிசக்தி, தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் முதலீடுகள் வந்தடைந்ததாக தகவல்கள் வெளியாகின. அதாவது,  2015 உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஒப்பந்தம் செய்து கொண்ட சுமார் 72 சதவிகித நிறுவனங்கள் மட்டுமே சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் முதலீடு செய்தன என்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈபிஎஸ் தலைமையில் முதலீட்டாளர் மாநாடு:
ஜெயலலிதா மறைவை தொடர்ந்து முதலமைச்சரான எடப்பாடி பழனிசாமி தலைமையில், 2019ஆம் ஆண்டு இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாடடு நடைபெற்றது. அதில் மேற்கொள்ளப்பட்ட 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம்,  ரூ.3 லட்சத்து 431 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதன்மூலம் 10 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் எனவும் கூறப்பட்டது. ஆனால், அதன் உண்மைத் தன்மை தொடர்பான எந்தவித தகவலும் இதுவரை வெளியாகவில்லை.
திமுகவினர் உற்சாகம்: 
இந்நிலையில் தான் ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டின் மொத்த ஒப்பந்த மதிப்பை காட்டிலும், கூடுதலான அளவிற்கு திமுக ஆட்சியில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இது முதலமைச்சர் ஸ்டாலினின் நிர்வாக திறனையும், திமுக ஆட்சியின் மீது முதலீட்டாளர்கள் கொண்டுள்ள நம்பிக்கையையும் காட்டுகிறது என, கட்சி நிர்வாகிகள் உற்சாகம் அடைந்துள்ளனர். அதோடு, பல தென்மாவட்டங்களுக்கும் இந்த தொழில் முதலீடுகளில் முக்கியத்துவம் கிடைத்துள்ளது. இதனால், அப்பகுதிகளை சேர்ந்த இளைஞர்களுக்கு ஏராளமான வேலைவாய்ப்புகள் உருவாகும். இது எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுகவிற்கு நல்ல பலனை வழங்கும் என அறிவாலய வட்டாரங்கள் நம்பிக்கையுடன் தெரிவிக்கின்றன.

Source link