Vijay Sethupathi Video : என்றைக்கு நான் என்னை புரிந்து கொண்டேனோ அன்றைக்கு வாழ்க்கையை தைரியமாக உடைத்து வெளியே வர ஆரம்பித்து விட்டேன் என நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்த பழைய வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது.
பல படங்களில் துணை வேடங்களில் நடித்து வந்த விஜய் சேதுபதி, தென்மேற்கு பருவகாற்று படம் மூலம் 2010 ஆம் ஆண்டு ஹீரோவானார். மக்கள் செல்வன் என்ற அடைமொழியோடு ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் அவர் இதுவரை 49 படங்களில் நடித்து விட்டார்.அவரின் 50வது படமான மகாராஜா ரிலீசுக்கு தயாராக உள்ளது. இப்படியான நிலையில் பழைய நீயா நானா நிகழ்ச்சிக்கு வருகை தந்த நடிகர் விஜய் சேதுபதி, கல்வி குறித்து பேசிய கருத்துகள் வைரலாகியுள்ளது.
அதில், “என்னுடைய குழந்தையிடம் நான் ஒன்றை சொல்வேன். ஆசிரியர் அல்லது தந்தையை கவர வேண்டும் என்பதற்காக நீ படிக்க வேண்டாம். உனக்கு பிடிச்சா படி இல்லாவிட்டால் பள்ளிக்கூடம் போக வேண்டாம். அடிபட்டு கால் நொண்டிக்கொண்டே பள்ளிக்கு போகணும்ன்னு எல்லாம் அவசியம் இல்ல. படிப்பு என்பது வாழ்க்கை. நீ பள்ளிக்கூடம் போறது என்பது ஆசிரியர் சொல்லி தரும் பாடத்தை கற்றுக் கொள்ள அல்ல. நாளைக்கு நீ சமுதாயத்துல சக மனிதர்களோட பழகப்போற விஷயங்களை தான் கத்துக்கப்போகிறாய். 50 மாணவர்கள் இருக்கிறார்கள் என்றால் ஒவ்வொருவரும் ஒரு ஒரு சிந்தனை கொண்ட இடத்தில் இருந்து வருகிறார்கள். அதுதான் வாழ்க்கை. புத்தகத்தை படித்து மனப்பாடம் செய்வதற்காக பள்ளிக்கூடம் போகவில்லை என்பதை நினைவில் வைத்துக் கொள். இதுதான் நான் என் குழந்தைகளிடம் சொல்வதாகும்.
எனக்கு எதுவுமே வராது என நினைத்துக் கொண்டிருந்தேன். நான் வெளித்தோற்றத்திலும் நன்றாக இல்லை என நினைத்துக் கொண்டிருந்தேன். எனக்கு பேசவோ, சிந்திக்கவோ வராது என நினைத்துக் கொண்டிருந்தேன். என்னிடம் இருந்த ஒரே விஷயம் லாஜிக்காக யோசிப்பது மட்டும் தான். என்னோட வகுப்பில் நான் தான் உயரம் குறைவானவன். அதனால் என்னை விளையாட்டில் சேர்த்துக் கொள்ள மாட்டார்கள்.
அதேபோல் சீக்கிரமாக பள்ளியில் சேர்த்து விட்டதால் என்னை விட வகுப்பறையில் எல்லாரும் ஒரு வயது பெரியவர்கள். இவை எல்லாமே சேர்த்து என்னை ஒரு அழுத்ததிற்கு தள்ளிக்கொண்டே இருந்தது. ஆனால் என்றைக்கு நான் என்னை புரிந்து கொண்டேனோ அன்றைக்கு வாழ்க்கையை தைரியமாக உடைத்து நான் வெளியே வர ஆரம்பித்து விட்டேன். நான் அப்படி வந்து பார்க்கும்போது தான் வெளியே புத்திசாலின்னு நினைச்சிட்டு இருந்த பல பேரு முட்டாளுன்னு புரிஞ்சிது. மேடையில் ஏற்றுவதாலும், உலகம் கைதட்டுவதாலும் ஒருவன் புத்திசாலி என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது” என விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.
மேலும் காண