அண்ணாமலை நிதியை வாங்கி கொடுத்தால் நிவாரணம் உயர்த்தி வழங்குகிறோம்… அமைச்சர் மா.சு. பேச்சு…

மத்திய அரசிடம் ரூ.7,000 கோடி ரூபாய் நிதி கேட்டுள்ளதாகவும் அந்த நிதியை அண்ணாமலையை வாங்கி கொடுத்தால் நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்குகிறோம் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பணியாற்றிய 1,400 தூய்மைப் பணியாளர்கள் மற்றும் கடைநிலை ஊழியர்களுக்கு, அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிவாரண பொருட்களை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக உறுப்பினர்கள் நிவாரண நிதி வழங்குகிறார்கள் எனக் கூறுவது வதந்தி என்றார்.

அப்படி இருந்தால் முன்னாள் ஜெயக்குமார் அதனை நிரூபிக்கட்டும் என்றும் வதந்திகளை புகார்களாக கூறுவது எளிமையான விஷயம் என்றும் கூறினார். சட்டமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்கள்தான் ஆய்வுக்காக கடைக்கு செல்கிறோமே தவிர. அரசு அலுவலர்கள் மூலமாகத்தான் நிவாரணத் தொகை வழங்கப்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

ஜெயக்குமார் ஆதாரங்களைர் தரவேண்டும் என கேட்டுக் கொண்டுள்ள அமைச்சர், ஜெயக்குமார் போன்றவர்கள் வாய் புளித்தது மாங்காய் புளித்தது போன்று பேசி மக்களை திசை திருப்ப நினைக்கிறார்கள் என்று விமர்சித்தார்.

மத்திய அரசிடம் இருந்து ரூ.7,000 கோடி நிதி கேட்டுள்ளதாக தெரிவித்துள்ள மா.சுப்பிரமணியன், அந்த நிதியை அண்ணாமலையை வாங்கி கொடுக்க சொல்லுங்கள். நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்குகிறோம் என்று கூறினார்.

நிவாரணத் தொகை வழங்கும் இடத்திற்கு முதியவர்கள் மாற்று திறனாளிகள் நேரடியாக வரவேண்டும் என்ற அவசியம் இல்லை என்றும், வர இயலாதவர்கள் டோக்கனை மற்றவர்களிடம் கொடுத்து நிவாரண தொகையை பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவித்தார்.

மற்ற மாநிலங்களில் இருந்து வருகை தந்து இங்கு குடும்ப அட்டை வைத்திருந்தால் அவர்கள் உரிய அனுமதி பெற்று நிவாரணம் வழங்கப்படும் என்றும், கார்டு வழங்கப்படாதவர்களுக்கான நிவாரணத் தொகை ஏற்கனவே அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.