போலீஸ் எனக்கூறி 20லட்ச ரூபாய் வழிப்பறி… விசாரணையில் வெளியான அதிர்ச்சியூட்டும் தகவல்கள்

சென்னையில் போலீஸ் எனக்கூறி 20லட்ச ரூபாய் வழிப்பறி செய்த கும்பலை 4 மணி நேரத்தில் காவல்துறையினர் பிடித்துள்ளனர்.

புது பெருங்களத்தூரில் ஷூ மற்றும் பேக் கடையை நடத்தி வருபவர் முகமது அசைன். இவரது கடையில் அதே பகுதியை சேர்ந்த சிராஜுதீன்(33) என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் மாதம் ஒரு முறை ரயில் மூலமாக வந்து பீச் ஸ்டேஷனில் உள்ள செல்போன் கடை ஒன்றில் வியாபார பணத்தை வசூல் செய்துவிட்டு எடுத்து செல்வது வழக்கம்.

அதே போல சிராஜுதீன் பீச் ஸ்டேஷனில் உள்ள செல்போன் கடைக்கு வந்து 20லட்ச ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு கடற்கரை ரயில் நிலையத்திற்கு சென்றுள்ளார். அப்போது திடீரென அங்கிருந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் ஒன்று போலீஸ் எனக்கூறி சிராஜுதின் கையில் வைத்திருந்த பணப்பை மற்றும் 2 செல்போன்களை பறித்துவிட்டு காவல் நிலையத்திற்கு வருமாறு அழைத்துள்ளனர்.

போலீஸ் எனக்கூறிய அனைவரும் குட்டையாக இருந்ததால் அவர்களது நடத்தையில் சந்தேகமடைந்த சிராஜுதின், அவர்களிடம் ஐடி கார்டை கேட்டப்போது, இல்லை என்று கூறிவிட்டு கத்தியை காட்டி மிரட்டிவிட்டு தப்பியோடிய போது, ஒரு வழிப்பறி கொள்ளையனை மட்டும் ரயில்வே பாதுகாப்பு படை போலீசாரின் உதவியோடு சிராஜுதின் பிடித்துள்ளார்.

பின்னர், இது குறித்து சிராஜுதின் அளித்த புகாரின் பேரில் எழும்பூர் ரயில்வே போலீசார் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தும், புகார்தாரரின் செல்போன் எண்களை வைத்து சைபர் கிரைம் போலீசார் கொள்ளையனை பிடிக்க தீவிர வேட்டையில் இறங்கினர். செல்போன் எண்களை அடிப்படையாக வைத்து கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருவரை கைது செய்தனர்.

இவர்கள் போலிசாரிடம் சிக்கியதை அறிந்து கூடுவாஞ்சேரியில் இருந்து வந்த மற்றொரு இரண்டு பேரை பார்க் ஸ்டேஷனில் வைத்து தனிப்படை போலீசார் கைது செய்தனர். இதில் ஒருவரை பணப்பையை வைத்து போலீசார் துப்பு துலக்கியுள்ளனர். இவர்களிடம் கொள்ளையடித்த 20லட்ச ரூபாய் மொத்தமாக போலீசார் பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த தமிழ்மணி(27), பாலச்சந்தர்(42), பிரகாஷ்(29), சதிஷ்(22), புதுச்சேரியை சேர்ந்த சிவா(32) என்பது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட ஐந்து பேரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்திய போது திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

கைது செய்யப்பட்டுள்ள தமிழ்மணியின் நண்பர் ஒருவர் ஷு கடை நடத்தி வரும் அசைன் என்பவரிடம் வேலை பார்த்ததும், அவர் பீச் ஸ்டேஷனில் அதிகப்படியான ஹவாலா பணம் கைமாறுவதாக தகவல் தெரிவித்துள்ளார். தகவலின் பேரில் தமிழ்மணி உட்பட ஐந்து பேரும் இணைந்து வழிப்பறியில் ஈடுபட திட்டமிட்டு ஸ்கெட்ச் போட்டுள்ளனர்.

குறிப்பாக பீச் ஸ்டேஷனில் உள்ள ஹவாலா பணம் கைமாறும் குறிப்பிட்ட செல்போன் கடைக்கு அடிக்கடி டெம்பர் கிளாஸ் போடுவது போல இவர்கள் அனைவரும் கடலூரில் இருந்து வந்து நோட்டமிட்டு வந்துள்ளனர். சிராஜுதின் 20லட்சம் பணம் கொண்டு போவதை அறிந்த கும்பல், கடற்கரை ரயில் நிலைய நடைமேடை மேம்பாலத்தில் முகத்தில் மாஸ்க் அணிந்து நோட்டமிட்டு காத்திருந்து, போலீஸ் போல நடித்து பையை பறித்து சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது.

பள்ளிப்படிப்பை கூட தாண்டாத இவர்கள் திடீர் பணக்காரர்களாக மாற வேண்டும் என்பதற்காக பணப்பறிப்பில் ஈடுபட்டதாக வாக்குமூலம் அளித்துள்ளனர். ஹவாலா பணம் என்பதால் போலீசாரிடம் புகார் அளிக்கமாட்டார்கள் என நினைத்து கொள்ளையடித்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

கொள்ளையடித்தவுடன் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து உடனடியாக தனிப்படை போலீசார் ஐந்து பேரையும் கைது செய்து, முழு தொகையையும் மீட்டுள்ளதாகவும், மீட்கப்பட்டுள்ள 20லட்சத்திற்கான உரிய ஆவணங்கள் உரிமையாளரிடம் இல்லாததால் இது வருமான துறையிடம் தெரிவிக்க உள்ளதாக எழும்பூர் ரயில்வே காவல்துறை டி.எஸ்.பி ரமேஷ் கூறினார்.

மேலும் மேட்சில் முக்கிய விக்கெட் விழ முக்கிய காரணமாக இருந்த பவுலர் சைபர் கிரைம் உதவி ஆய்வாளர் ஜான் என கொள்ளை கும்பலை பிடித்ததை ஒப்பிட்டு பேசினார். 4மணி நேரத்தில் கொள்ளை கும்பலை துரிதமாக செயல்பட்டு கைது செய்த எழும்பூர் ரயில்வே போலீசாருக்கு உயரதிகாரிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.