Estate Duty: மக்களவை தேர்தல் நடந்து வரும் நிலையில், நாளுக்கு நாள் அரசியல் சர்ச்சை வெடித்த வருகிறது. கடந்த 3 நாட்களாக, இஸ்லாமியர்கள் குறித்து பிரதமர் மோடி தெரிவித்து கருத்து பெரும் பரபரப்பை கிளப்பியது. இதற்கிடையே, காங்கிரஸ் மூத்த தலைவர் சாம் பிட்ரோடா தெரிவித்து கருத்து பெரும் விவாத பொருளாக மாறியது.
விவாத பொருளாக மாறிய Inheritance Tax:
வாரிசுரிமை வரி (Inheritance Tax) குறித்து பேசிய சாம் பிட்ரோடா, “அமெரிக்காவில் வாரிசுரிமை வரி என ஒன்று உள்ளது. ஒருவரிடம் 100 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள சொத்து இருந்தால், அவர் இறக்கும் போது தன்னுடைய குழந்தைகளுக்கு 45 சதவீத சொத்து மட்டுமே அளிக்க முடியும். 55 சதவீதம் அரசாங்கத்தால் கைப்பற்றப்படுகிறது.
இது ஒரு சுவாரஸ்யமான சட்டம். உங்கள் தலைமுறையில் நீங்கள் செல்வம் சம்பாதித்தீர்கள். இப்போது நீங்கள் மரணம் அடைகிறீர்கள் என்றால், உங்கள் செல்வத்தை பொதுமக்களுக்காக விட்டுவிட வேண்டும். அது அனைத்தையும் அல்ல. அதில் பாதி. இது எனக்கு நியாயமாகத் தெரிகிறது” என்றார்.
ஆனால், இதைத்திரித்து பேசிய பிரதமர் மோடி, நடுத்தர வர்க்கத்தினருக்கு அதிக வரி விதிக்க காங்கிரஸ் திட்டமிட்டு வருவதாக கூறினார். அதுமட்டும் இன்றி, பெற்றோர்களிடமிருந்து குழந்தைகள் பெறும் பரம்பரை சொத்துகளுக்கு காங்கிரஸ் வரி விதிக்கப் போவதாக தெரிவித்தார்.
இதை காங்கிரஸ் அதிகாரப்பூர்வமாக மறுத்த போதிலும், தேர்தல் காலத்தில் வாரிசுரிமை வரி பெரும் விவாத பொருளாக மாறியுள்ளது. அமெரிக்காவில் பின்பற்றப்பட்டு வருவதாக சாம் பிட்ரோடா குறிப்பிடும் வாரிசுரிமை வரி என்றால் என்ன? வாரிசுரிமை வரி போன்றே இந்தியாவில் அமலில் இருந்த எஸ்டேட் வரி ஏன் ரத்து செய்யப்பட்டது என்பது பற்றி இந்த தொகுப்பில் தெரிந்து கொள்ளளாம்.
அமெரிக்க வாரிசுரிமை வரி சட்டம் சொல்வது என்ன?
அமெரிக்கா முழுவதும் வாரிசுரிமை வரி விதிப்பதில்லை. 50 மாகாணங்களில் 6 மாகாணங்களில் மட்டுமே இந்த வரி அமலில் உள்ளது. இறந்த நபரின் சொத்துகளைப் பெறுபவர்களுக்கு வாரிசுரிமை வரி விதிக்கப்படுகிறது. இறந்த நபர் வாழ்ந்த அல்லது சொத்து வைத்திருக்கும் மாகாணத்தை பொறுத்து வரி வதிக்கப்படுகிறது.
ஆனால், இந்தியாவில் அமலில் இருந்த எஸ்டேட் வரிக்கும் அமெரிக்காவில் பின்பற்றப்பட்டு வரும் வாரிசுரிமை வரிக்கும் பெரிய வித்தியாசம் உள்ளது. அதாவது, ஒரு நபர் இறக்கும்போது, அவருக்கு சொந்தமான அனைத்து சொத்துக்கள் மீதும் வரி வதிக்கப்படும். இது எஸ்டேட் வரி எனப்படும்.
ஆனால், இறந்த நபரின் சொத்துகள் சென்று சேரும் நபருக்கு வரி விதித்தால் அது வாரிசுரிமை வரி எனப்படும். இந்த வரியே, அமெரிக்காவில் விதிக்கப்பட்டு வருகிறது. அயோவா, கென்டக்கி, மேரிலாந்து, நெப்ராஸ்கா, நியூ ஜெர்சி, பென்சில்வேனியா உள்ளிட்ட மாகாணங்களில் இந்த வரி அமலில் உள்ளது.
இந்தியாவில் அமலில் இருந்த எஸ்டேட் வரி ரத்து செய்யப்பட்டது ஏன்?
வாரிசுரிமை வரி ஒன்றும் இந்தியாவுக்கு புதிது அல்ல. எஸ்டேட் வரி அல்லது இறப்பு வரி என்ற பெயரில் இந்தியாவில் 1985ஆம் ஆண்டுக்கு முன்பு வரை அமலில் இருந்திருக்கிறது. கடந்த 1985ஆம் ஆண்டு, எஸ்டேட் வரியானது பிரதமர் ராஜீவ் காந்தியால் ரத்து செய்யப்பட்டது.
ஒரு நபர் மரணிக்கும் போது எஸ்டேட் வரி கணக்கிடப்படுகிறது. எஸ்டேட் வரி சட்டம், 1953 மூலம் எஸ்டேட் வரி அறிமுகப்படுத்தப்பட்டது. பரம்பரை சொத்தின் மொத்த மதிப்பு குறிப்பிட்ட அளவுக்கு மேல் இருந்தால் மட்டுமே இந்த வரி விதிக்கப்படும்.
எஸ்டேட் வரி சட்டத்தின்படி, சொத்துக்களில் 85 சதவிகிதம் வரை வரி விதிக்கப்பட்டது. குறைந்தபட்சம் 1.5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சொத்துகளுக்கு 7.5 சதவிகிதம் வரி விதிக்கப்பட்டது. வருமான ஏற்றத்தாழ்வைக் குறைப்பதே இதன் நோக்கமாக இருந்தது. ஆனால், 1985ஆம் ஆண்டு, எஸ்டேட் வரி ரத்து செய்யப்பட்டது.
மேலும் காண