Vanathi Srinivasan demands that the Chief Minister should stop the attempts to build a dam in Meghadatu | காங்கிரஸ் தலைவர்களுடனான நெருக்கத்தை தமிழக நலனுக்கு முதல்வர் பயன்படுத்த வேண்டும்


பாஜக தேசிய மகளிரணித் தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அணை கட்ட முடியாது:
அதில், “கர்நாடக மாநில சட்டப்பேரவையில் 2024-25-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து பேசிய அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா, ’காவிரியாற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் புதிய அணை கட்டுவதற்கான ஏற்பாடுகளை செய்து முடித்துள்ளோம். முறையான அனுமதி பெற்று விரைவில் அணையின் கட்டுமானப் பணிகளை தொடங்குவோம்’ என்று அறிவித்துள்ளார். சென்னை மாகாணத்திற்கும், மைசூர் மாகாணத்திற்கும் இடையே 1924-ம் ஆண்டு ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி, காவிரியாறு பாயும்  தமிழ்நாடு உள்ளிட்ட மற்ற மாநிலங்களின் ஒப்புதல் இல்லாமல் காவிரியாற்றின் குறுக்கே கர்நாடகம் எந்த அணையையும் கட்ட முடியாது. இதை காவிரி நடுவர் மன்றமும், உச்ச நீதிமன்றமும்  உறுதிப்படுத்தியுள்ளது.
முறியடிக்க வேண்டியது அவசியம்:
உச்ச நீதிமன்ற தீர்ப்பை மீறி காவிரியாற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் புதிய அணை கட்டுவோம் என்று கர்நாடக சட்டப்பேரவையிலே யே அம்மாநில முதலமைச்சர் அறிவித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. மேகதாதுவில் அணை இல்லாத போதே, நடுவர் மன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, வறட்சியான காலங்களில், தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய தண்ணீரை வழங்க கர்நாடகம் மறுத்து வருகிறது.
இத்தகைய சூழலில், மேகதாது அணை கட்டப்பட்டால், தமிழகத்திற்கு இப்போது கிடைக்கும் குறைந்த அளவு தண்ணீரும் கிடைக்காமல் போய்விடும். விவசாயத்திற்கு மட்டுமல்ல, தமிழகத்தின் பெரும்பான்மையான மாவட்டங்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும் காவிரி நீரே உள்ளது. எனவே, மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடகத்தின் முயற்சியை முறியடிக்க வேண்டியது தமிழக அரசின் கடமையாகும். ஆனால், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்திருப்பதால், தமிழக நலன்களை காற்றில் பறக்கவிட்டு, கண்டனம் கூட தெரிவிக்காமல், ‘மேகதாதுவில் அணை கட்ட முடியாது’ என்று வழக்கமான பல்லவியை பாடி இருக்கிறார் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்.
தமிழக நலனுக்கும் பயன்படுத்துங்கள்:
திமுக அரசுக்கும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கும் தமிழக விவசாயிகள் நலன், தமிழக மக்களின் குடிநீர் தேவையை விட அரசியல் நலனே  முக்கியமானதாக இருக்கிறது. கர்நாடக காங்கிரஸ் அரசை கண்டித்தால், சோனியாவும், ராகுலும், பிரியங்காவும் கோபித்துக் கொள்வார்கள் என்பதால், தமிழக நலன்களை காவு கொடுக்கவும் திமுக தயாராகிவிட்டது. இதனால்தான், மேகதாது அணை விவகாரத்தில் மென்மையான போக்கே  திமுக அரசு கையாண்டு வருகிறது. இது கடும் கண்டனத்திற்குரியது.
காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் சோனியா, ராகுல், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா ஆகியோர், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு மிகவும் நெருக்கமானவர்கள். கர்நாடக முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக சிவகுமாரும் பதவியேற்ற போது பெங்களூருக்கு நேரில் சென்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். காங்கிரஸ் தலைவர்கள் உடனான தனது நெருக்கத்தை, அரசியல் நலன்களுக்காக மட்டும் பயன்படுத்தாமல், தமிழகத்தில் நலன்களுக்காகவும் பயன்படுத்தி, மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சியை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முறியடிக்க வேண்டும். இதற்கு சட்ட ரீதியான தீர்வு காணவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் காண

Source link