Anna Hazare slams Arvind Kejriwal says got arrested because of his own deeds


கடந்த 2004ஆம் தொடங்கி 2014ஆம் ஆண்டு வரை, மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கம், 2014ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் தோல்வி அடைவதற்கு பல காரணங்கள் கூறப்படுகிறது.
கெஜ்ரிவாலுக்கு எதிராக கொந்தளித்த அன்னா ஹசாரே:
அதில், முக்கியமானது ஊழல் குற்றச்சாட்டுகள். குறிப்பாக, அன்னா ஹசாரே தலைமையில் நடத்தப்பட்ட ஊழல் எதிர்ப்பு இயக்கம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அவர் மேற்கொண்ட உண்ணாவிரத போராட்டம், அந்த சமயத்தில் பெரும் கவனம் ஈர்த்தது.
அதன் விளைவாக, சுதந்திர இந்திய வரலாற்றில் முதல்முறையாக தனிப்பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி அமைத்தது. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் அன்னா ஹசாரே போராட்டம் நடத்தியிருந்தாலும், அதன் பிறகு அவர் வெளியே தலைகாட்டாமலே இருந்து வந்தார்.
இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளாக பல பிரச்னைகள் வெடித்துள்ளது. மக்கள் தானாக திரண்டு பல போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விவசாய சட்டத்திற்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் தொடங்கி சிஏஏ எதிர்ப்பு போராட்டம் வரை சொல்லி கொண்டே போகலாம்.
“கெஜ்ரிவால் கைதுக்கு அவரின் செயல்களே காரணம்”
ஆனால், இதற்கு எதற்குமே அன்னா ஹசாரே குரல் கொடுவில்லை. இதனால், அவர் மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன. ஆட்சியை பிடிப்பதற்காக அன்னா ஹசாரேவை பாஜக பயன்படுத்தி கொண்டது, காங்கிரஸ் அரசுக்கு எதிராக அவரை பாஜக திட்டம் தீட்டி இறக்கியது என்றெல்லாம் விமர்சனம் எழுந்தது.
பல முக்கியமான விவகாரங்களில் வாயை திறக்காமல் இருந்து வந்த அன்னா ஹசாரே, நேற்று கைதான டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக கொந்தளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக கெஜ்ரிவாலை நேற்று அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். சுதந்திர இந்திய வரலாற்றில் சிட்டிங் முதலமைச்சர் ஒருவர் கைது செய்யப்படுவது இதுவே முதல்முறை. 
இதுகுறித்து பேசிய அன்னா ஹசாரே, “என்னுடன் இணைந்து பணியாற்றிவிட்டு, மதுவுக்கு எதிராக குரல் எழுப்பிய அரவிந்த் கெஜ்ரிவால், தற்போது மதுபானக் கொள்கைகளை வகுத்திருப்பது எனக்கு மிகவும் வருத்தமாக உள்ளது. அவர் கைது செய்யப்பட்டதற்கு அவரது சொந்தச் செயலே காரணம்” என்றார்.
கடந்த 2013 காலக்கட்டத்தில், அன்னா ஹசாரேவுடன் இணைந்து ஊழல் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் ஒருவர் கெஜ்ரிவால். பின்னாட்களில் ஆம் ஆத்மி கட்சியை உருவாக்கி டெல்லி, பஞ்சாப் மாநிலங்களில் ஆட்சிக்கட்டிலில் அமர வைத்தார். 
இதையும் படிக்க: “இடைத்தரகரே அவருதான்.. 100 கோடி லஞ்சம் கேட்டாரு” கெஜ்ரிவால் மீது ED பரபர குற்றச்சாட்டு!

மேலும் காண

Source link