IPL 2024 MI vs RCB Strategic Corner – Suryakumar Yadav Against Royal Challengers Bengaluru


இந்திய கிரிக்கெட்டில் மிஸ்டர் 360 டிகிரி என்றால் அது சூர்யகுமார் யாதவ்தான். இவர் ஐபிஎல் போட்டிகளில் தனது அரக்கத்தனமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டார். ஐபிஎல் வந்தாலே காலில் சலங்கை கட்டிவிட்டதுபோல் ஆடும் சூர்யகுமார் யாதவ், பெங்களூரு அணிக்கு எதிரான  போட்டி என்றால் அவரது ஆட்டத்தில் வேகம் வழக்கத்தைவிடவும் அதிகமாகிவிடும்.
மும்பை இந்தியன்ஸ் அணியின் கடப்பாரை பேட்டிங் Line Up-இன் ஆணிவேராக உள்ள சூர்யகுமார் யாதவ் ஆர்.சி.பி அணிக்கு எதிரான போட்டியில் எவ்வாறு விளையாடியுள்ளார் என்பதை இந்த தொகுப்பில் காணலாம். 
ஐபிஎல் தொடரில் மிகவும் அதிக ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ள அணி, அதிக கோப்பைகளை வைத்துள்ள அணி, அதிக வீரர்களை இந்திய கிரிக்கெட்டிற்கு அடையாளப்படுத்திய அணி, எவையெவை என்று பார்த்தால் அதில் கட்டாயம் மும்பை இந்தியன்ஸ் அணியின் பெயர் இருக்கும். 

இதுவரை மும்பை இந்தியன்ஸ்
ஐபிஎல் தொடர் தொடங்கி 2008ஆம் ஆண்டில் இருந்து விளையாடி வரும் மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை 5 கோப்பைகளை வென்றுள்ளது. ஐபிஎல் தொடரில் மட்டும் இதுவரை 250 போட்டிகளில் விளையாடிய ஒரே அணி என்ற பெருமையையும் தன்வசம் வைத்துள்ளது. இப்படியான மும்பை இந்தியன்ஸ் அணியில் ஒரு வெளிநாட்டு வீரர் களமிறங்குகின்றார் என்றால் அவர் சர்வதேச அளவில் மிகப்பெரிய ஸ்டாராக இருக்க வேண்டும். அதேபோல் இந்திய அணிக்காக விளையாடாத ஒரு இந்திய வீரர் ஒருவர் மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடுகின்றார் என்றால் அவர், கட்டாயம் எதிர்காலத்தில் இந்திய கிரிக்கெட்டில் தாக்கத்தை ஏற்படுத்துபவராக இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. 
அவ்வாறு இந்திய கிரிக்கெட்டில் தாக்கத்தை ஏற்படுத்திய வீரர்களில் ஒருவர் சூர்யகுமார் யாதவ். இவர் பெங்களூரு அணிக்கு எதிராக சிறப்பாக விளையாடியது மட்டும் இல்லாமல், மும்பை அணிக்காக வெற்றியையும் பெற்றுத்தந்துள்ளார். 
பெங்களூருக்கு எதிராக சூர்யா
சூர்யகுமார் யாதவ் இதுவரை பெங்களூரு அணிக்கு எதிராக 18 போட்டிகளில் விளையாடி 151 ரன்கள் ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடியுள்ளார். அதேபோல், பெங்களூரு அணிக்கு எதிராக வான்கடேவில் மட்டும் மூன்று போட்டிகளில் விளையாடியுள்ள சூர்யகுமார் யாதவ், 112 ரன்களை கிட்டத்தட்ட 190 ரன்கள் ஸ்ட்ரைக் ரேட்டில் எட்டியுள்ளார். 

இதனால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியைப் பொறுத்தவரையில் மும்பை இந்தியன்ஸ் அணியில் உள்ள வீரர்கள் அளிக்கும் சவாலை எதிர்கொள்ள தனி ஒர்க் அவுட் செய்து வந்தால், சூர்யகுமார் யாதவை எதிர்கொள்ள தனி கேம் ப்ளானுடன் களமிறங்குவார்கள். ஆனால் அது எப்போதும் செல்லுபடியாகுமா என்றால் கேள்விக்குறிதான். பெங்களூரு அணிக்கு எதிராக சிறப்பாக விளையாடிவரும் சூர்யகுமார் யாதவ், ஒரு ஆட்டத்தில் வெறித்தனமாக ஆடி மும்பை அணி 16.3 ஓவர்களில் 200 ரன்களை சேஸ் செய்வதற்கு முக்கிய காரணமாக இருந்தார். 
மறக்கமுடியாத இன்னிங்ஸ்
கடந்த ஆண்டு நடைபெற்ற மும்பை வான்கடேவில் நடைபெற்ற லீக் போட்டியில், முதலில் பேட் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 199 ரன்கள் குவித்திருந்தது. இதனால் மும்பை அணிக்கு 200 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது. இதனால் இந்த போட்டி கடைசி ஓவர் வரை செல்லும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் மும்பை இந்தியன்ஸ் அணி சார்பில் மூன்றாவது வீரராக களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் 35 பந்துகளில் 7 பவுண்டரி மற்றும் 6 சிக்ஸர் விளாசி மொத்தம் 83 ரன்கள் குவித்து தனது விக்கெட்டினை இழந்திருந்தார். ஆனால் சூர்யகுமார் யாதவ் தனது விக்கெட்டினை இழந்தபோது மும்பை இந்தியன்ஸ் அணி 192 ரன்கள் குவித்திருந்தது. இறுதியில் மும்பை இந்தியன்ஸ் அணி 16.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 200 ரன்களை எட்டி வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி எளிதில் வெற்றிபெற முக்கிய காரணம் சூர்யகுமார் யாதவ். இந்நிலையில் மும்பை அணியை பெங்களூரு அணி நாளை வான்கடே மைதானத்தில் எதிர்கொள்ளவுள்ளது. 

மேலும் காண

Source link