குமரியில் கனமழை வெள்ளம்… அதிகாரிகளுக்கு அறிவுரை கூறிய பாஜக எம்எல்ஏ…

குமரியில் கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் விரைந்து உதவிகளை வழங்க வேண்டும் என பாஜக எம்எல்ஏ எம்.ஆர்.காந்தி வலியுறுத்தியுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக பல்வேறு பகுதிகளில் மழை நீர் சூழ்ந்து குடியிருப்புகளில் ஏராளமானோர் வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். நாகர்கோயிலில் ஊட்டுவாழ் மடம், பாறை கால் மடம்ர மீனாட்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான வீடுகளை மழை நீர் சூழ்ந்துள்ளன.

இந்நிலையில் தீயணைப்புத் துறையினர் அவர்களை மீட்டு, பாதுகாப்பான இடங்களுக்கு சேர்த்த வண்ணம் உள்ளனர். அந்த பகுதிகளை நாகர்கோயில் தொகுதி பாஜக எம்எல்ஏ எம்.ஆர்.காந்தி பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வீடுகளில் உணவின்றி பரிதவி போருக்கு உணவு வழங்கவும் மழைநீர் சூழ்ந்ததால் வீடுகளில் இருந்து வெளியேற முடியாமல் தவிப்போரை உடனடியாக மீட்டு வரவும் மாவட்ட நிர்வாகம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.

மேலும், பறக்கை குளம் மற்றும் நாகர்கோயில் நகரை ஒட்டிய வாய்க்கால்களை போதிய அளவு தூர் வாராமல் கரையை சரிவர அமைக்காமல் இருந்ததால் குடியிருப்புகளுக்கு இடையே மழை நீர் சூழ்ந்ததாக குற்றம் சாட்டிய அவர், பறக்கை குளத்திலிருந்து அதிக அளவிலான நீர் கடலில் கலந்திருந்தால் இந்த அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்காது என்றும் வேதனை தெரிவித்தார்.

இது குறித்து மாவட்ட நிர்வாகம் உடனடி கவனம் செலுத்த வேண்டும் என்ற எம்ஆர் காந்தி, மாவட்ட ஆட்சியரை சந்தித்து பேச உள்ளதாகவும் கூறினார்.