“மதரஸா சட்டம் தவறாக புரிந்து கொள்ளப்பட்டது” உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை!


Madarsa Act: உத்தரப் பிரதேச மதரஸா கல்வி வாரிய சட்டம், 2004ஐ அரசியலமைப்புக்கு எதிரானது எனக் கூறி அலகாபாத் உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் இன்று இடைக்கால தடை விதித்துள்ளது. 
மதரஸா கல்வி என்றால் என்ன?
அரபு, உருது, பெர்சியன் (பாரசீகம்), இஸ்லாமிய ஆய்வுகள், தத்துவங்கள், பாரம்பரிய மருத்துவம் உள்ளிட்டவை தொடர்பான படிப்புகளே மதரஸா கல்வியாகும். இவற்றை ஒழுங்குபடுத்தும் வகையில் உத்தர பிரதேச மதரஸா கல்வி வாரிய சட்டம், 2004 கொண்டு வரப்பட்டது. 
இந்த சட்டத்தின் மூலம் மதரஸாக்களின் செயல்பாடுகளை கண்காணிக்கும் அதிகாரம் மதரஸா கல்வி வாரியத்திற்கு அளிக்கப்பட்டது.
உத்தரப் பிரதேசத்தில் சுமார் 25,000 மதரஸாக்கள் உள்ளன. அவற்றில் 16,500 மதரஸாக்கள் உத்தரப் பிரதேச மதரஸா கல்வி வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. அவற்றில் 560 மதரஸாக்கள் அரசிடமிருந்து மானியம் பெறுகின்றன. இவற்றை தவிர, மாநிலத்தில் 8,500 அங்கீகரிக்கப்படாத மதரஸாக்கள் உள்ளன.
கமில் மற்றும் ஃபசில் என்ற பெயரில் மதரஸா கல்வி வாரியத்தால் இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்புகள் கற்பிக்கப்பட்டு வருகிறது. இதை தவிர டிப்ளோமா சான்றிதழ்களும் வழங்கப்படுகின்றன. 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகளும் மதரஸாக்களால் நடத்தப்படுகிறது.
அலகாபாத் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு என்ன?
கடந்த மார்ச் 22 ஆம் தேதி, அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதிகள் விவேக் சவுத்ரி மற்றும் சுபாஷ் வித்யார்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த சட்டம் இந்திய அரசியலமைப்பில் உள்ள மதச்சார்பின்மை கொள்கையை மீறுவதாக தெரிவித்து ரத்து செய்தது.
தனது கடமைகளை ஆற்றும்போது, மதத்தின் அடிப்படையில் அரசு பாகுபாடு காட்டக்கூடாது எனக் கூறிய  அலகாபாத் உயர் நீதிமன்றம், “மதம் சார்ந்த கல்விக்கு வாரியத்தை உருவாக்கவோ அல்லது பள்ளிக் கல்விக்கான வாரியத்தை ஒரு குறிப்பிட்ட மதம் மற்றும் அதனுடன் தொடர்புடைய தத்துவத்திற்காக மட்டும் அமைக்கவோ அரசுக்கு அதிகாரம் இல்லை. அரசு அப்படி செய்தால், இந்திய அரசியலமைப்பின் மதச்சார்பின்மை கொள்கைகளை மீறுவதாகும்” என தீர்ப்பு வழங்கியது.
உத்தர பிரதேச மதரஸாக்களில் படிக்கும் மாணவர்களை மற்ற பள்ளிகளுக்கு மாற்றவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
மதரஸா கல்வி குறித்து உச்ச நீதிமன்றம் கூறியது என்ன?
அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை இந்திய தலைமை நீதிபதி டி. ஒய். சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்தது.
உ.பி. மதரஸா கல்வி வாரிய சட்டம், 2004ஐ ரத்து செய்து அலகாபாத் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.
மதரஸா வாரியத்தின் நோக்கம் ஒழுங்குப்படுத்துவதே ஆகும். அந்த வகையில், வாரியத்தை அமைப்பது மதச்சார்பின்மையை மீறும் என அலகாபாத் உயர்நீதிமன்றம் சொன்னது சரியல்ல என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
 

மேலும் காண

Source link